Ashram Title
 
நல்லதே நடக்கட்டும் ! மங்களம் பொங்கட்டும் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

சித்தவேத சூக்த மாமந்திரம்
நடந்தவை, நடப்பனவாய் நடந்து கொண்டிருக்கின்றன!
அடிமை கண்ட ஆனந்தம்!

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்!

பெரியவர், சிறுவனை நடந்தே அழைத்துச் சென்ற குருகுலவாச யாத்திரைகளே மிக மிக அதிகம். எத்தனை மலைத் தலங்களில் ஆயிரமாயிரம் படிகள் ஏறி, இறங்கி எத்தனை நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்து, நடந்து, எத்தகைய அரிய இறை அனுபூதிகளை, அனுவபங்களை, இறை லீலைகளை, சித்தர்கள், மகரிஷிகளின் தரிசனங்களாகச் சிறுவன் துய்த்து, தன் குருவருளாய்ப் பெரியவராம் தன் “வாத்யாரிடம்” இருந்து பெற்று உய்த்துள்ளான்!

அச்சிறுவனே, குருமங்கள கந்தர்வா ஆக, கலியுகத்தில் இன்று கனிந்து, தம் சற்குரு மொழிந்த குருவாய்மொழிகளை, கலியுக மக்களின் நல்வாழ்விற்காக, சித்தர்களின் பிரசாதமாக, ஸ்ரீஅகஸ்திய விஜய தளத்தில் பிரசாதமாக வைத்தளித்து உவக்கின்றான்! என்னே பெரும் பேறிது, சிறுவனுக்கும், நமக்கும்!

சற்குருவின் மேல் கொண்டுள்ள சிறு பக்தி காரணமாக, சித்தர்களின் ஆசியே, குருவருள் பிரசாதமாகத் தேடி, நாடி, ஓடி வருகின்றது என்றால், இனியாவது சற்குருவை அடைவதே வாழ்க்கையின் லட்சியம் எனத் தெளிந்து, பிற ஜீவன்களுக்குச் சேவை ஆற்றும் மனப்பான்மையுடன் வாழ்ந்திட வேண்டும். இதனைத் தார்மீகமாக உணர்த்துபவைதானே அடிமை கண்ட ஆனந்த பொக்கிஷங்கள்!

பெரியவருடன் திருஅண்ணாமலை கொல்லி மலை, பொதியமலை போன்ற சித்தர் வாழ் தலங்களுக்குச் செல்லும் போதெல்லாம் சிறுவன் மிகவும் குஷியாகி விடுவான். காரணம், தெய்வீகப் புத்துணர்ச்சி ஊட்டும் பல புதிய ஆன்ம அனுபவங்களோடு அவன் திரும்பி வருவானன்றோ!

கொல்லி மலையில் பெரியவருடன் உலா வந்த போது, பல வனதேவதைகள், விருட்ச தேவதைகளின் தரிசனங்களோடு, கோரக்க சித்தர் தரிசனத்தையும் அவனுக்குக் காட்டி உள்ளாரே!

எழும்பிய ஜோதி(ர்) லிங்கம்

கோரக்க சித்தர் வாழ்ந்த (இன்றும் உள்ள) சிறு குகையில் பெரியவர் கற்றுத் தந்த பீதாம்பர யோக சக்தி மூலமாக, தரையில் இருந்து தாமாகவே எழும் ஆகர்ஷண சக்திகள் அவனிடம் கோள யோக நல்வரமாய்ப் பதிந்தன. இதை மூலமாகக் கொண்டே சோம்நாத்தில் – பல நூற்றாண்டுகளுக்கு முன் எவ்வாறு தரையில் இருந்து, சற்று உயரத்தில் எழும்பிய பாவனையில் சுயம்பு லிங்கம் இருந்ததோ அதே தோற்றத்தில் – சோமநாத ஜோதிர் லிங்க தரிசனத்தைப் பெற்றான். சற்குரு மூலம் மட்டுமே அடையப் பெறுவதன்றோ இந்த பாக்யம்!

கேதார்நாத், பத்ரிநாத் செல்கையில், இமய மலையில், பல இடங்களில் அஷ்டவக்ர மாமுனி, காஸ்யப மஹரிஷி, ஆத்ரேய மஹரிஷி போன்றோர் கலியுகத்திலும் தவம் பூண்டு கிடக்கின்ற காட்சி அவனுக்கு வியப்பளித்தது!

இமயமலையில் ஓரிடத்தில் பசுக்கள் சூழ, ஒளிப் பிரகாசம் நிறைந்த மேனியுடன் ஒரு மகரிஷி தவம் புரிவதைச் சற்றுத் தொலைவில் நின்று பெரியவர் காட்டினார். அவர்தாம் மேன்மைமிகு வசிஷ்ட மாமுனி என அறிந்ததும், சிறுவன் ஆனந்தக் களிப்பால், வெகு தொலைவில் நின்று பார்த்தாலும் சாஷ்டாங்கமாகத் தரையில் வீழ்ந்து நமஸ்கரித்தான்.

“ஏன் வாத்யாரே! இவங்க இப்பக் கூட இன்னமும் தவத்துல இருக்காங்களா, அதுவும் கலியுகத்துல?”

“நாம வசிக்கற இந்த பூமியில இது கலியுகம்டா! இன்னொரு பூலோகத்துல கிருத யுகம் நடக்குது! அடுத்த பூமியில திரேதா யுகம் நடக்குது! அந்த பூமியில, தேவலோகத்துலேந்து காமதேனு பசுவை பூமிக்குக் கொண்டு வரணுமே, அதுக்குத் தாண்டா இங்கே வசிஷ்டர் தபசுல இருக்காரு!”

சிறுவன் கண்களை விரித்தான், வியப்பின் அழுத்தம் தாங்காது!

“எத்தனை தடவை வாத்யாரே திருப்பித் திருப்பி இதே புராணம் நடக்குது?”

“இதுக்கு பதில் வேணும்னா நாம துவாரகைக்குப் போகணும்டா கண்ணு!”

பெரியவர் “பொடி” வைத்துப் பதில் சொல்லி விட்டாரே! சிறுவன் மௌனமானான்!

ஆனால் துவாரகை செல்லும் பயணமும் பின்னால் நெடுங்காலம் கழித்து வந்தது. ஆனால் கால இடைவெளியில் சிறுவன் இக்கேள்வியை மறந்தே போய் விட்டான்.

அப்போதெல்லாம் துவாரகையில் நிறைய தீவுகள் இருந்தன. ஒரு படகில் பெரியவர் அவனை ஒரு சிறு தீவுக்கு அழைத்துச் சென்றார்.

“ஸ்ரீகிருஷ்ண பகவான் தியானம் பண்ணின இடமப்பா இது! இன்னும் கொஞ்ச வருஷத்துல பூமியிலேந்து சுத்தமா மறைஞ்சிடும்!”

ஆங்கே சிறுவனுக்கு இதுவரை அவன் அறியாத பல கடுமையான பிராணாயாமப் பயிற்சிகளைப் பெரியவர் கற்றுக் கொடுத்தார். இனம் புரியாத யோக சக்தி அங்கு மிளிர்வதைச் சிறுவன் கண்டுணர்ந்தான்.

“ஏன் வாத்யாரே... ” என்று ஏதோ கேட்க வந்தவனைப் பெரியவர் மடக்கினார்.

அறியாதது அறிவோம்!

“நீ என்ன கேட்க வர்றேனு தெரியுதுடா... உன மனசையே நாங்க, எங்க உள்ளங்கை palm T.Vல பதிவு பண்றோமே! எங்க palm டீவியை ஆன் பண்ணிட்டு... உன்னை எப்பவும் பார்த்துக்கிட்டு இருக்கோமே!” என்று சொல்லியவாறே பெரியவர் தம் உள்ளங் கையைத் திறந்து காட்டினார்.

அதில் சிறுவன் தலை தெரிந்தது. அதிலிருந்து ஊதுபத்திப் புகை போல் சிறு சிறு புகைச் சுருள்கள் வந்து கொண்டிருந்தன.

“இது தாண்டா உன் எண்ண அலைகள்! இதைப் பார்த்தாலேயே நீ என்ன நினைக்கிறேன்னு தெரிஞ்சுடுமே!”

“இதோ பார்! இது என்னன்னு தெரியுதா?”

அவர் உள்ளங்கைக்குள் படங்களுடன் உரையாடலும், கேட்பதையும் கண்ட போது அவனுக்கு மிக, மிக ஆச்சரியமாக இருந்தது! ஆம், அவன் எப்போதோ பெரியவரிடம் பேசியவை இப்போது வெளிவந்தன!

அதில்...

... “எத்தனை தடவை வாத்யாரே திருப்பித் திருப்பி இதே புராணம் நடக்குது?”

“இதுக்கு பதில் வேணும்னா நாம துவாரகைக்குப் போகணும்டா கண்ணு!”...

“...ஆங்!... இது இமய மலையில் கேதார்நாத் அருகே நடந்த சம்பவ உரையாடல் அல்லவா! நான் மறந்தே விட்டேனே!” – சிறுவன் நினைவு கூர்ந்தான்.

“நீ இமய மலையில் விட்டதை இங்கே அலை மூலமா துவாரகைல புடிக்கறோம்டா!” – பெரியவர் கண்களைத் திறக்காமல் பேசினார்.

“அது சரி வாத்யாரே! இப்பனாச்சும் சொல்லு! இதே துவாரகையிலத்தான் கிருஷ்ணர் இன்னொரு துவாபர யுகத்துல திரும்பவும் வருவாரா?”

“ஆமாம்டா கண்ணு!”

சிறுவன் திரும்பவும் பெரியவரைக் கேள்விக் கணையால் நன்கு “பிடித்துக்” கொண்டான்!

வருவதும், போவதுமாய்!

“ராமரும், கிருஷ்ணரும் வர்றது, போறது, எத்தனை தடவை வாத்யாரே திருப்பித் திருப்பி இதே புராணம் நடக்குது?”

“அதுவா, இந்த துவாரகை கடலைப் பார்த்தா உனக்கு என்ன தோணுது?”

“என்ன இது, குறுக்குக் கேள்வி போடுகின்றார் ...”, என்று எண்ணி வியந்த சிறுவன், “இந்தக் கடலைப் பார்த்தா அதே அலைகள் ஏன் திரும்பித் திரும்பி வருதுன்னு கேட்கத் தோணுது?”

“கரெக்டாச் சொன்னேடா! இது வெறும் கடல் அலைகள் இல்லேடா ராஜா! அனைத்து ஜீவன்களும் பரவெளியில் வெளியிடற எண்ணங்களும் தாண்டா கடல் அலைகளா ஆகி வருது!”

“இந்த அலைகளுக்கும், புராண நிகழ்ச்சிகள் திரும்பத் திரும்ப நடக்கறதுக்கும் என்ன சம்பந்தம் வாத்யாரே!?”

“நடந்ததே, நடப்பவையாக நடக்கும்கற” சித்தர்கள் எளிமையாகக் காட்டற வேத ரகசியத்தை, தெய்வீக உண்மையை, உன்னை மாதிரி எல்லாரும் புரிஞ்சுக்கற வரைக்கும், அலைகள் வரும், புராணங்கள் நடந்துக் கிட்டே இருக்கும்! இதெல்லாம் எடுத்துச் சொல்லிப் புரியவைக்க முடியாத தெய்வ ரகசியம்டா! குருவருள்னாலேயே, ஏன் எதுக்குன்னு, தானே தன்னால தெரிய வரும்!” என்று கூறியவாறு கலகலவென்று சில்லறையைக் கொட்டினாற் போல் அண்டம் ஒலிக்கச் சிரித்தார்.

அறிந்தது போதும்!

அவர் கையில் ராமாயண, மகாபாரத நிகழ்ச்சிகள் சிலவும் தத்ரூபமாகத் தெரிவதைக் கண்டான்.

“என்ன இது, புராணங்களும் தெரிகின்றன. அவனுடைய எண்ணங்களும் வருகின்றன, என்ன முடிவிற்கு வருவது?”

சிறுவன் குழம்பினான்! டக்கென்று தன் உள்ளங் கைகளை மூடிக் கொண்ட பெரியவர், “ஆனா என்ன எண்ணம்னு தெரிஞ்சுக்க, ஒரு ரெண்டு நிமிஷம் எங்க palm T.Vயைத் திறந்து பார்த்தா.. எங்களோட 200 வருஷ தபஸ் சக்திகள் செலவாகும்! பரவாயில்லையா?”

சிறுவன் அதிர்ச்சி அடைந்தான்! “இவ்வளவு புண்யத்தைச் செலவழித்து, இவற்றை ஏன் பெரியவர் தனக்குக் காட்ட வேண்டும்?”

“நேரம் வரும்டா, இதையும் தெரிஞ்சுக்கறதுக்கு!” என்று உள்ளங் கையைப் போல் சப்ஜெக்டையும் மூடினார் பெரியவர். அவரையே பார்த்துக் கொண்டு சிறுவன் கண்களை மூடிச் சிந்தித்தான்!

யோகம் திரளும் பூமி!

எத்தனையோ புராண நிகழ்ச்சிகள் அவன் கண்களுக்குள் வேக வேகமாய் வந்து ஓடின! எல்லாவற்றிலும் பெரியவர் ஒரு ஓரத்தில் நிற்கக் கண்டான். அவனுக்குக் கண்களைத் திறக்கவே மனமில்லை! ஆனால் அனைத்து உலகங்களையும் இழுத்து மூடினாற் போல், அமைதி நிலவிடவே, பேரமைதியைத் தாங்க இயலாது கண்களைத் திறந்தான்.

ஆம்... ஆங்கே டக்கென்று கடலில் அனைத்து அலைகளும் நின்று போயிருந்தன! சிறுவன் பயந்தே போனான்! ஆனால் பெரியவரோ மிக அமைதியாக எழுந்து, நடந்து கரையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். அலறி அடித்து அவரைத் துரத்திப் பிடித்தான்!

“எல்லாம் உன் தலைஎழுத்துடா! உலகத்துல எண்ணங்களே இல்லாத இடத்துக்குக் கூட்டி வந்து, உன்னை தியானம் பண்ண வைக்கலாம்னு பார்த்தா, நீயோ யோக வரம் தர வர்ற யோக லக்ஷ்மியை இப்படியா வேண்டாம்னு சொல்றது?”

இத்தகைய வார்த்தைகளை அடிக்கடிக் கேட்டுக் கேட்டுப் பழக்கம் ஆனதால், சிறுவன் அவரை மிகவும் கோபமாகவே பார்த்தான்! ஆனால் அவர் கூறியது உண்மைதானே!

ஆனந்தங்கள் தொடரும்.!

அமுத தாரை!

இதுவே சித்தர்களின் மஹாவாக்கியமான “நடந்ததே நடப்பனவாய் நடந்து வருகிறது” (What Happened Happens to Happen) என்பதை நிரூபிப்பதாகும்.

“நடந்ததே, நடப்பனவாய் நடந்து வருகிறது” என்பதே, சித்தர்கள் காலமார்கம், பூமியின் சுழற்சி, பூமி வாழ்க்கை பற்றி அளிக்கும் “ஏக வாக்கிய” விளக்கமாகும்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்
யதாஸ்தானம்
om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam