ஆங்கில புது வருடம் 2025
வரும் ஆங்கிலப் புது வருடம் 2025க்கான திருத்தலங்களாக நம் சற்குரு கீழ்க்கண்ட திருத்தலங்களை அளித்துள்ளார். இந்த புத்தாண்டின் கடைசி இலக்கம் ஐந்தாகவும் வருடத்தின் கூட்டுத் தொகை 2+0+2+5=9 என்று விளங்குவதால் ஐந்திற்கு ஒன்பது என்ற எண் கணித சூத்திரம் இந்த வருடம் முழுவதும் ஆக்கிரமிப்பு கொள்ளும்.
குரோதி தமிழ் வருடத்தில் மேலப்பரங்கிரி திருத்தலத்தில் ஏற்றிய புரந்தர விஸ்தீர்ண கார்த்திகை தீப சக்திகள் விசுவாவசு தமிழ் வருடத்திற்கும் நீளும், தொடரும் ஆதலால் இந்த 2025 புது வருடத்திற்கான திருத்தலங்களை விசுவாவசு தமிழ் வருடத்திலும் வழிபட்டு பயன்பெறலாம் என்பதே நம் சற்குரு நமக்காக விஸ்தரிக்கும் Red Carpet Welcome.
ஒன்பது என்ற எண் பிள்ளையார், முருகன், ஆஞ்சநேயர், செவ்வாய் பகவான், சிவப்பு வண்ணம், செம்பவளம் சிறப்பாக தண்டி ஆபரணம் இவற்றிற்கு உரியது.
பிள்ளையார் ஒன்பதிற்கு உரிய தெய்வமாக விளங்குவதோடு பிள்ளையார் என்ற ஐந்து எழுத்து நாமத்துடன் தும்பிக்கை என்ற ஐந்தாவது கையையும் சேர்த்து ஐந்து கரத்தனாக விளங்குகிறார். அனைத்து இறைத் தலங்களிலும் முதன்மை கொண்டு விளங்குவதோடு ஐம்முக கணபதியாகவும் பல திருத்தலங்களிலும் சுவாமி விளங்குவது நாம் அறிந்ததே.
ஆங்கில புது வருடம் 2025 க்கான வழிபாட்டு தலங்கள்
1. லால்குடி அருகே திண்ணியம் முருகன் கோயில். முருகப் பெருமான் தெற்கு நோக்கி எழுந்தருளி தட்சிணா மூர்த்தி குரு சக்திகளுடனும் பூரிக்கிறார். லால்குடி ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் திருத்தலமும் இத்தகைய சிறப்பு பெற்றதே.
2. திருத்தணி முருகன் கோயில், ஒவ்வொரு ஆங்கில வருடத்தின் முதல் தேதி அன்றும் வள்ளிமலை சுவாமிகள் பல தம்பதிகளை அழைத்து அவர்கள் திருத்தல படிக்கட்டுகளில் தம்பதி சகிதமாக ஏறி வருமாறு பணித்து வழிபாடுகள் இயற்றிய தலம். தம்பதிகள் இவ்வருடம் முழுவதும் இத்தலத்திற்கு வரும்போது ஒவ்வொரு படியிலும் தம்பதி சகிதமாக நின்று வளைந்தது வில்லு என்று தொடங்கும் பதிகத்தில் வரும் உண்ணப் புகுந்த பகனொளித்தோடாமே கண்ணைப் பறித்தவாறுந்தீ பற கருக்கெட நாமெலாம் உந்தீ பற என்ற பாடலை வாய்விட்டு ஓதுவது சிறப்பாகும்.
3. பாபநாசம் 108 சிவாலயம். ஆஞ்சநேயர் நேரங் கழித்து இமய மலையிலிருந்து கொண்டு வந்த, சஞ்சீவி சக்திகளுடன் பொலிந்த சிவலிங்கத்தை 108வது இறை மூர்த்தியாக கொண்ட திருத்தலம். ஆதி பகவனே 9 எண் சக்திகளுடன் இங்கு துலங்குவது எங்கும் காணாத தனிச் சிறப்பு.
4. சோளிங்கர் ஆத்யந்தப் பிரபு ஆலயம். ஆதியும் அந்தமுமான பிள்ளையாரும் ஆஞ்சநேயரும் இங்கு இணைந்து விளங்கி பக்தர்களுக்கு அருள் கூட்டுகின்றனர்.
5. ஓதிமலை முருகன் கோயில். ஐந்து தலைகளுடன் விளங்கும் முருகப் பெருமான் ஒன்பதிற்கும் உரியவராக இங்கு அபூர்வமாக எழுந்தருளி உள்ளார்.
6. பன்றிமலை சுவாமிகள் ஜீவசமாதி. சென்னை நுங்கம்பாக்கத்தில் கோயில் கொண்டு எழுந்தருளிய பன்றிமலை சுவாமிகள் வராக கிரியோன் என்று அன்புடன் நம் சற்குருவால் அழைக்கப்படும் பெருமை உடையவர். அனைவரும் தன்னை பன்றிமலை சுவாமிகள் என்று அழைத்தாலும் தான் இராமசாமி என்ற பெயர் கொண்ட ஒரு சாதாரண அடியார்தான் என்று கூறுவார்.
7. தாண்டிகுடி முருகன் கோயில். உடல் முழுவதும் சக்தி, பெருமாளுக்கு உரிய சங்கு, சக்கரம், முருகப் பெருமானுக்கு உரிய வேல் போன்ற தெய்வீக அம்சங்களுடன் பொலிந்தாலும் தண்டாயுதபாணி முருகனின் அடிமை என்றே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதில் விருப்பம் கொண்டவரே ஸ்ரீபன்றிமலை சுவாமிகள். ஸ்ரீஅகத்தியப் பெருமான் போன்ற பல தெய்வங்களின் அருள்கடாட்ச சக்திகளை எந்திர வடிவத்தில் கொண்டு துலங்கும் அபூர்வ இறைத் தலம்.
8. சுவாமிமலை சிவாலயம். 60 தமிழ் வருடங்களை திருத்தலப் படிகளாக ஸ்ரீஅகத்தியப் பெருமானின் அனுகிரகத்துடன் இணைந்து விளங்கும் தலம். சுவாமி யார் ? சதிக்கு கணவனா, குழந்தைக்கு அப்பாவா, சீடனுக்கு குருவா? அப்பா அப்பா அப்பா என்று மும்முறை ஓதி தன் ஆருயிர் தந்தையை முருகப் பெருமான் அழைத்து மகிழ்ந்த தலம்.
9. காளஹஸ்தி அஞ்சப்பர் (பஞ்சமுகேஸ்வரர்) சிவாலயம். இங்குள்ள பரத்வாஜ தீர்த்தமும் இவ்வருடம் தரிசித்து பயன்பெற வேண்டிய தீர்த்தமாகும்.
10. கோயம்பேடு ஆஞ்சநேயர் அருணன், சரணன், கருணாரச சிந்தன், அசமான பலன், ஆர்த்தரட்சகன், ஆதித்யன், ஆதிபுதன் என்ற ஏழு குதிரைகளில் பவனி வரும் இவ்வாலய சூரிய பகவானை நாம் தரிசித்து பயன்பெறுதல் சிறப்பு.
11. வள்ளிமலை. மேலப்பரங்கிரியில் கார்த்திகை தீபம் நன்முறையில் பிரகாசிக்க கொப்பரையை மலை மேல் ஏற்றவும் இறக்கவும் துணை புரிந்த ஸ்ரீசுந்தரராம் குருஜி வள்ளிமலை அருகில் தங்கால் திருத்தலத்தில் ஆஸ்ரமம் கொண்டு விளங்குகிறார். அசாத்திய எடை கொண்ட தீபக் கொப்பரையை ஒரு குழந்தை போல் தூளியில் கட்டி மலை மேல் ஏற்றிய அதிசயத்தை நேரில் பார்த்தவர்களே தவளசித்து சாதிக்கும் அற்புதத்தை உணர்வர். இந்த தவளசித்து என்ற அபூர்வ சித்தியை கைவரப் பெற்றவரே குருஜி. தங்கால் ஆஸ்ரமத்தில் ஒரு பகல், ஒரு இரவு தங்கி வழிபடுவதால் இத்திருத்தலத்தில் அபூர்வமாகத் திகழும் சிரஞ்சீவி மூலிகைகளின் சக்திகளை அடியார்கள் மௌனகுருவின் சித்தாமிர்த சக்திகளாகப் பெறலாம்
12. தொழுப்பேடு சித்தர் ஜீவாலயம் இவ்வருட கிரக சஞ்சாரக விளைவுகளாக உடல் உறுப்புக்கள் செயலிழப்பு, paralytic stroke, ஞாபக மறதி, குழந்தைகளுக்கு கல்வியில் நாட்டிமின்மை போன்றவைகள் தோன்றும் சூழல் உள்ளதால் இத்தகைய துன்பங்களில் இருந்து ஓரளவு நிவாரணம் பெற வல்லாரை லேகியம், மாதா அமிர்தானந்தமயி ஆசிரமத்தில் இருந்து பெறும் பிராமி க்ருதம் போன்றவற்றை தானமாக அளித்தல் நலம். இத்தகைய தான தர்மங்களை தொழுப்பேடு சித்தர் ஜீவாலயம் அல்லது அருகில் உள்ள மயிலம் முருகன் கோவிலிலோ செவ்வாய்க்கிழமை அன்று நிகழ்த்துவது சிறப்பு.
13. சென்னிமலை முருகன். நம் சற்குரு இத்தலத்திற்கு வருகை புரிந்தபோது திருஅண்ணாமலை சிவாலயத்தில் பணி புரியும், பே கோபுரத் தெருவில் வசிக்கும் சுப்ரமண்ய சிவாச்சாரியார் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட திருத்தலம். முருகப் பெருமானின் முழுமையான அனுகிரகத்தை பிண்ணாக்கு வேல் வடிவில் பெற்ற ஸ்ரீபிண்ணாக்கீசர் ஜீவ சமாதி கொண்டு விளங்கும் தலம்.
14. வட்டமலை முருகன். பூஜ்யம் என்பது நேர்கோடு என்பார் கோவணாண்டி. இதை அனுபவத்தில் உணர அடியார்களுக்கு உறுதுணையாக நிற்கும் தலம் இதுவே. இந்த ஒரே ஒரு சித்த மொழியை அடியார்கள் தங்கள் அனுபவத்தில் உணர்ந்து கொண்டால் அடுத்து அவர்கள் சாதிக்க வேண்டியது வேறு எதுவுமே இல்லை எனலாம்.
15. விராலிமலை முருகன். அடுத்த 50 வருட காலத்தில் ஆண்கள் முற்றிலும் தங்கள் ஆண்மையை இழப்பர் என்பது சித்தர்களின் தொலைநோக்குப் பார்வை. இந்த தவிர்க்க முடியாத கொடுமை, வேதனையாக மாறாமல் தங்களைக் காத்துக் கொள்ள விரும்பும் அடியார்கள் வழிபட வேண்டிய முருகப் பெருமானே விராலிமலை முருகன். வக்ர கதி பெற்ற குரு பகவான் இத்தகைய அபூர்வ காப்புச் சக்திகளை அளிப்பதால் வியாழக் கிழமைகளில் இத்தலத்தில் வழிபாடுகள் இயற்றுதல் சிறப்பு. ராஜ்மா பயறு சுண்டல் தானம் இனிது.
16. நாமக்கல் ஆஞ்சநேயர், கடலைக் கடந்து இலங்கையை அடைய இராம பிரான் லட்சக் கணக்கான வானரங்களை வைத்து பாலம் கட்ட வேண்டி வந்தது. ஆனால், விபீஷணனோ ராமா என்று ஒரு ஓலையில் எழுதிக் கொடுக்க அதன் வல்லமையால் ஒருவன் ஆற்று வெள்ளத்தைக் கடந்த அனுபவத்தை நாம் அறிவோம். இத்தகைய இறை நாம வல்லமையை உணர முடியாமல்தான் பலரும் துன்பக் கடலில் மூழ்கித் தவிக்கின்றனர். இறை நாம மகிமையை உணர உதவுவது நாமக்கல் ஆஞ்சநேயரின் மகிமைகளுள் ஒன்றாகும்.
17. தக்கோலம். தன் கோலம் என்ன கோலம் எத்தகைய வடிவ சக்திகளுடன், அதாவது ஆற்றல் சக்திகளுடன் துலங்குவது என்று அறிய விரும்பும் அடியார்களுக்கு உறுதுணையாக அமையும் சுயநாம ஜபத்தை ஆரம்பிக்க இவ்வருடம் உகந்தது, உகந்த தலம் தக்கோலம். முகூர்த்த தம்பங்களை குக சக்திகளாகப் பெற்ற தலம். தம்பதிகள் இடையே விளங்கும் எத்தகைய மன வேற்றுமைகளையும் களைவதே முகூர்த்த தம்பங்கள்.
18. திருவையாறு. ஐந்து நதிகளுடன், பிள்ளையார் சக்திகளுடன் இணைந்து விளங்கும் அற்புத தலம். வினை தீர்க்கும் வேலவன் வில்லேந்தி விளங்கும் திருத்தலம்.
19. மம்மியூர். இத்தலத்தில் எழுந்தருளிய எம்பெருமானை தரிசிக்க வந்த மாப்பிள்ளை பெருமாளுக்கு சிவன் உடைத்த தேங்காயும் இடித்த வெல்லமும் பிரசாதமாக அளித்து கௌரவிக்க அதனால் மனம் மிக மகிழ்ந்த பெருமாள் தன் பத்தினி மகாலெட்சுமியுடன் குருவாயூரில் எழுந்தருளிய பெருமை உடையது. இவ்வருடம் முழுவதும் தேங்காய் துருவல், வெல்லம் கலந்து திருத்தலங்களில் எறும்புகளுக்கு தீனியாக அளிப்பதும், அடியார்களுக்கு வெல்லம் தேங்காய் கலந்த பாயசம் தானமாக அளிப்பதும் சிறப்பாகும்.
20. குருவாயூர். இத்தலத்தில் இருபுறமும் தம்பதி சக்திகளே பக்தர்கள் அமரும் திண்ணையாக விளங்குவதால் வருடப் பிறப்பு அன்றோ அல்லது தங்கள் பிறந்த தினங்களிலோ இந்த திருத்தல திண்ணைகளில் ஒரு முகூர்த்த நேரமாவது தம்பதிகள் இணைந்து அமர்ந்து குருவாயூர் அப்பன் நினைவோடு இருத்தல் சிறப்பாகும்.
21. குற்றாலம். குறுகிய காலத்தில் உள்ளத்தை, மனதை குளிர வைக்கும் உன்னத குளிர் சக்திகள் ஆக்கம் பெறும் வருடமே இந்த ஆங்கில வருடமாகும். மாசடைந்த பல அக்னி சக்திகளால் குறிப்பாக சூரியனின் அசாத்திய வெப்பம், செல்போன் தாக்கம் போன்றவற்றால் துன்புறும் அடியார்கள் தங்கள் துயர் தீர்த்துக் கொள்ள அருள் புரியும் பழைய குற்றால தீர்த்த நீராடல்.
ஆங்கில புது வருடம் 2025 கோள்சார விளக்கம்
2025ம் ஆண்டு மலர்கையில் குருவும் சந்திரனும் ஐந்திற்கு ஒன்பது என்ற கணக்கில் எழுந்தருளி உள்ளதால் இதன் அடிப்படையில் திகழும் எண் கணித அடிப்படையாக மேற்கண்ட திருத்தலங்கள் அருளப்பட்டுள்ளன என்பது ஒரு தோராய கணக்காகும்.
மேலும் புத்தாண்டு மலரும் தருணத்தில் சுப கிரகமான குரு ரிஷப ராசியில் அமர்ந்து வக்ர கதி பெற்றுள்ளார். சுப கிரகங்கள் வக்ர கதியில் பிரகாசிப்பது மக்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் நன்மை பயப்பதே ஆகும்.
கடக ராசியில் திகழும் செவ்வாய் பகவான் நீச அம்சத்தில் இருந்தாலும் அவர் வக்ர கதி பெற்றிருப்பதால் அது நீச பங்க ராஜ யோகம் தரும் கிரகமாக மிளிரும் அமைப்பைக் குறிக்கும். செவ்வாய் பகவான் இந்த உன்னத அமைப்பில் நட்பு கிரகமான வளர்பிறை சந்திரனை ஏழாம் பார்வையாக பார்ப்பது எந்த அளவு சிறப்பானதாக அமையும் என்பதை நீங்கள் ஊகித்தறியலாம்.
2025ம் ஆண்டு மலர்கையில் குரு சந்திர யோகத்தில் திகழும் குருவிற்கும் சந்திரனுக்கும் இடையில் செவ்வாய் பகவான் மிளிர்வதால் இவர் குசா சக்திகளுடன் பொலிகிறார் என்பதும் இந்த ராஜயோகியின் சிறப்புகளில் ஒன்றாகும். இந்த குசா சக்தியும் தண்டி ஆபரணத்திற்கு அணி சேர்ப்பதாகும்.
மகர ராசியில் சந்திரன் புத்தாண்டு தினத்தன்று மூன்றாம் பிறைச் சந்திரனாக விளங்குகிறார் என்பதும் மகர ராசி செவ்வாய் பகவான் உச்சம் பெறும் ராசி என்பதும் நீங்கள் அறிந்ததே.
மேற்கண்ட 21 திருத்தலங்களில் பல திருத்தலங்களின் மகிமை ஏற்கனவே நம் சற்குருவால் விளக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் தாண்டிகுடி திருத்தல மகிமையை இங்கு விளக்குகிறோம்.
தாண்டிகுடி திருத்தல மகிமை
வத்தலகுண்டு அருகில் உள்ள தாண்டிகுடி ஸ்ரீபாலமுருகன் திருக்கோயில் வத்தலகுண்டிலிருந்து சுமார் 50 கிமீ தொலைவில் பேருந்து வசதியுடன் திகழ்கிறது.
ஸ்ரீபன்றி மலை சுவாமி அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதே ஸ்ரீபாலமுருகன் திருத்தலமாகும். திண்டுக்கல் வழியாகவும் இத்திருத்தலத்தை அடையலாம்.
பாலமுருகன் தாண்டிகுடியிலிருந்து தாண்டிக் குதித்த திருத்தலம் பழநி என்பதால் தாண்டிகுடிக்கு அப்பெயர் ஏற்பட்டது என்று நகைச்சுவையான ஒரு வழக்கு இத்திருத்தலத்தைப் பற்றி விளங்கினாலும் அதுவும் ஓரளவு உண்மையே ஆகும்.
நவரத்தினங்களில் ஒன்று தண்டி என்பது. ஒன்பது ரத்தின சக்திகளில் நடுநாயகமாக விளங்குவது. பொதுவாக தண்டி என்ற ரத்தினத்தின் ஒளி தாண்டிகுடியிலிருந்து பழநி மலை வரையிலுமே பிரகாசிக்கும் வல்லமை உடையது. காரணம் எல்லையில்லா தியாக சீலமே தண்டி மணியின் பிரகாசத்திற்கு ஒளி கூட்டுவது. எப்படி காப்ளா காப்ளா என்ற அடியார் ஒருவரின் தியாகசீலம் கன்யாகுமரி அம்மனின் மூக்குத்தியாக பிரகாசிக்கிறதோ அது போன்றதே தண்டி நவரத்தின மணியின் ஒளி பிரகாசமும்.
தசரதரின் அருமை மைந்தன் ராமர் தாசரதன் என்று அழைக்கப்படுவது போல சிவபெருமானின் மைந்தன் முருகப் பெருமானும் தாண்டி என்று அழைக்கப்படுவது பொருத்தம் தானே?
தண்டி நவரத்தினத்தின் ஒளி சிவ பிரசாதமாக, முருகப் பிரசாதமாக ஒளிரும் வருடம் 2025 என்பதால் இந்த ஒளி பிரகாச சக்தியை இறை அனுகிரகமாக அடியார்கள் பெறும் முகமாக மேலிருந்து கீழாக 18, 12, 6 என்ற வரிசையில் செந்தாமரைகளைக் கட்டி மாலையாக தாண்டிகுடி ஸ்ரீபாலமுருகனுக்கு அணிவித்து இந்த 2025 புத்தாண்டில் வழிபடுவது சிறப்பாகும்.
2025 வருடம் முழுவதும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசன நாளிலோ அல்லது உத்தர நட்சத்திர நாளிலோ மேற்கண்ட வழிபாட்டை நிறைவேற்றிப் பயன்பெறலாம். இத்தகைய மாலை அமைப்பு தண்டியலங்காரம் என்று அழைக்கப்படும்.
திரிதினமாக முருகனுக்கு உகந்த உத்திர நட்சத்திரமும் சுமங்கலி சக்திகள் பூரித்து குலுங்கும் பானு சப்தமியும் இணையும் முகூர்த்த நாளில் தாண்டிகுடி திருத்தலத்தில் தண்டி அலங்காரத்தில் பிரகாசிக்கும் ஸ்ரீபாலமுருகன் திருஉருவத்தைத்தான் இங்கு நீங்கள் தரிசனம் செய்கிறீர்கள்.
நம் சற்குருவின் புனித ஆசிர்வாத சக்திகள் இவ்வாறு “மூன்றிலிருந்து ஐந்திற்குத் தாண்டி“ 21,22,23 டிசம்பர் 2024 பூர்ணமாக 9 வரையில் பிரகாசிக்கும் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் ஒன்று வேண்டுமா என்ன? நம் சற்குரு பன்றி மலை சுவாமிகளை வராககிரியோன் என்று அழைப்பதன் காரணம் என்ன? சற்றே ஆத்மவிசாரம் செய்து பார்த்தாலே, சப்தமி திதி உத்திர நட்சத்திரம் இவற்றுடன் வராக கிரியோன் என்ற சுவாமிகளின் நாமத்தை இணைக்கும் நம் சற்குருவின் மேதாவிலாசம் நம்மை பிரம்மிக்க வைக்கும்.
பன்றி மலை சுவாமிகள் தோன்றிய 100 வருட காலத்திற்குள் பன்றி மலை சுவாமிகள் அவதரித்த பன்றி மலை, பண்டரி மலை என்று பலரால் அழைக்கப்படுகிறது. அவ்வாறு இருக்க பன்றி மலை சுவாமிகளின் நாமம் பன்றி மலை சுவாமி, சாமியார் என்று பலவறாக திரிந்து எண் சக்திகள் மாற்றம் அடைய வாய்ப்புகள் ஏற்படுகின்றது அல்லவா? ஆனால் வராககிரியோன் என்னும் போது அது ஏழு எழுத்து மந்திரமாக, தம்பதிகளை இணைக்கும் அக்னி சாட்சியாக மலரும் வழிபாடாக, தம்பதிகளிடையே ஒற்றுமையை உருவாக்கும் ஏழாம் வீட்டு வழிபாடாக மலர்கின்றது.
இங்கு பதி என்பது நிரந்தர இருப்பிட வீட்டைக் குறிக்கிறது. பதி என்னும் கணவனைத் துணையாகக் கொண்டு வீடு என்னும் இறைவனை அடைவதே திருமணத்தின் நோக்கம்.
தண்டியலங்காரம்
தண்டியலங்காரம் என்ற ஒரு இலக்கண நூலும் உண்டு. வளைந்தது வில்லு… என்று தொடங்கும் மணிவாசகரின் தேவாரத் துதியை இவ்வருடம் முழுவதும் ஓதி வருதலால் முருகப் பெருமானுக்கு தண்டியலங்காரம் என்ற மணமாலை வழிபாட்டை நிறைவேற்றிய பலனை அடியார்கள் எளிதில் பெற முடியும்.
தண்டி, தண்டாயுதபாணி சிறப்பு
தண்டி என்பது நவரத்தினங்களில் ஒன்றாக, இவற்றின் நடுநாயகமாகத் திகழ்வது.
தண்டம் என்றால் குச்சி, கோல் என்று பொருள். ஒருவர் தன் கையில் துலங்கும் ஊன்றுகோலான குச்சியை விட்டு விட்டால் அது தடால் என கீழே விழுந்து விடுவதைப் போல் இறைவன் மேல் பரிபூரண நம்பிக்கை கொண்டு சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்கும் பணிவைக் குறிப்பதே தண்டம் சமர்ப்பிப்பது என்ற வழிபாடாகும்.
எம்பெருமான் தனக்கு மாம்பழம் அளிக்கவில்லை என்ற காரணத்தால் கோபித்துக் கொண்டு சென்ற முருகப் பெருமானுக்கு உமையம்மை இறைவனின் திருவிளையாடல்கள் அனைத்தையும் எடுத்துக் கூறியதால் தன் தவற்றை உணர்ந்து எழுந்தருளிய திருத்தலம் பழநி என்பதை நாம் அறிவோம்.
தவறை உணர்ந்த முருகப் பெருமான் அடுத்த கணமே எம்பெருமானின் தியாகத்தை உணர்ந்ததால் தன் தந்தை மீது மாறா அன்பு கொண்டு அவர் மீது அன்பைப் பொழிந்தார். இதன் அறிகுறியாக ஒரு கோவணத்தை மட்டும் இடை ஆடையாக தரித்துக் கொண்டு கையில் தண்டாயுதத்தை மட்டும் ஏந்திய பெருமானாக அனைவருக்கும் இன்றும் அனுகிரகம் வாரி வழங்கும் பெருமானாக பழநி குன்றின் மீது எழுந்தருளி உள்ளார்.
தண்டம் என்ற பணிவைத் தவிர உலகில் சிறந்த ஆயுதம் எதுவும் இருக்க முடியாது என்பதை தன் செயல் மூலம் உலகிற்கு உணர்த்தும் உன்னத தெய்வமே பழநி தண்டாயுத பாணி ஆவார்.
பழநி முருகப் பெருமானின் கோவணத்தை தினமும் இறைப் பிரசாதமாகப் பெற்று அதை நீரில் நனைத்து அந்த முருகப் பிரசாதத்தை தினமும் காலையில் ஏற்ற ஒரு உத்தம பக்தர் தன்னுடைய விருப்பமாக ஒரு சஷ்டி திதியில் முருகப் பெருமானுடன் இரண்டறக் கலந்த இறை அனுபூதியை நம் சற்குரு விளக்கி உள்ளதை நீங்கள் அறிவீர்கள்.
பழநி தண்டாயுதபாணியின் மூலிகை சக்திகள் அனைத்தும் தாண்டிகுடி திருத்தலத்தில் இருந்து பெறப்பட்டு போகர் பெருமானால் இன்றும் புனருத்தாரணம் செய்யப்படுவதே என்பதே நம் சற்குரு நமக்காக பரிந்தளிக்கும் இறை இரகசியமாகும்.
இந்த மூலிகை சக்திகள் நிறைந்த சுனை தீர்த்தத்தை தாண்டிகுடி முருக ஆலயத்திலிருந்து பெற்று அதில் பச்சை நிற டைமண்ட் வடிவ கோதுமை அல்வா தயார் செய்து தானமாக அளிப்பது இவ்வருடத்திற்கு உரிய சிறப்பான வழிபாடாக அமையும்.
மாதா ஸ்ரீஅமிர்தானந்தமயி
நம் சற்குரு எப்பவும் சிரித்து கொண்டே இருக்கும் மகான்களின் தரிசனத்தை முடிந்த போதெல்லாம் பெற்று கொள்ளுமாறு கூறியுள்ளார்.
தற்போதைய கலியுகத்தில் கண்கண்ட மகானாக ரத்தமும், சதையுமாக நம் அனைவருக்கும் தரிசனம் தர காத்திருக்கும் அம்மையே மாதா ஸ்ரீஅமிர்தானந்தமயி.
மாதா ஸ்ரீஅமிர்தானந்தமயியின் பிறந்த தேதி 27-9-1953. இதில் பிறந்த தேதியான 27 கூட்டினால் வருவது 9, மாதமோ 9, பிறந்த வருடமான 1953ஐ கூட்டினால் வருவதோ 9. நம் சற்குரு கூறியது போல் பிறந்ததில் இருந்து இன்று வரை சிரித்து கொண்டே தன் திருப்பணியை செய்து வருபவர் மாதா ஸ்ரீஅமிர்தானந்தமயி. நடைபெறும் வருடமான 2025ன் கூட்டு தொகையும் 9, மாதா ஸ்ரீஅமிர்தானந்தமயியின் பிறந்த தேதி, மாதம், வருடம் என அனைத்தின் கூட்டு தொகையும் 9 ஆக வருவதால் அடியார்கள் 2025 வருடத்தில் மாதா ஸ்ரீஅமிர்தானந்தமயி அவர்களின் தரிசனத்தை பெற்று கொள்வது சிறப்பு.
தசாம்ருத சர்க்கரை பொங்கல்
வரும் 14.1.2025 குரோதி வருடம் தை மாதம் முதல் நாள் செவ்வாய்க் கிழமை மகர சங்கராந்தி என்னும் தைப் பொங்கல் அமைவது நீங்கள் அறிந்ததே. அற்புதமான இந்த உத்தராயண புண்ணிய முகூர்த்தத்தில் ராமபிரான் தோன்றிய புனர்பூச நட்சத்திரம் நான்காம் பாதமும் சித்தயோகமும் இணைவது நாம் பெற்ற பாக்யமே.
அன்று காலை ஒன்பது மணிக்கு மூன்று கரும்புகளைக் கட்டி மூன்று கற்களின் மேல் புதுப் பானை வைத்து பசும்பால் ஊற்றி கரும்புத் துண்டைக் கரண்டி போல் பயன்படுத்தி சர்க்கரை பொங்கல் பொங்கி சூரிய நாராயண பெருமாளின் ஒளிக் கதிர்கள் பொங்கல் மேல் படுமாறு தயார் செய்து மங்கள வாத்யங்கள் ஒலிக்க நைவேத்யம் செய்து வழிபடுவது சிறப்பே. அரிசி பொங்கலில் முந்திரி, உலர் திராட்சை கனிகள், குங்குமப்பூ போன்றவற்றை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த வழிபாட்டை கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை ஸ்ரீகுழந்தை வேலப்பர் திருத்தலத்தில் இயற்றுவது சிறப்பாகும். பித்ருக்களின் நாயகர்களில் முதன்மையான நம் சற்குரு இத்திருத்தலத்தைப் பற்றி விளக்குவதாவது.
சரபூம்
வணபூம்
பவபூம்
என்ற மூன்று வித அபூர்வ பித்ரு தேவர்கள் பூம்பாறை திருத்தலத்தில் இந்த உத்தராயண புண்ணிய காலத்தில் எழுந்தருள்வார்கள். 14.1.2025 அன்று விடியற்காலை மூன்று கணுக்கள் கொண்ட ஆறு கரும்புத் துண்டுகளை வரிசையாக அடுக்கி வைத்து அதன் மேல் தர்பை சட்டம் அமைத்து மூதாதையர்களுக்கு தர்ப்பண வழிபாடுகளை இயற்றுதல் நலம்.
பூம்பாறை திருத்தலத்தில் மட்டுமல்லாது கோயில் தீர்த்தங்கள், ஆறு, கடல் தீர்த்தங்கள், அரசு, ஆல், வேம்பு போன்ற பால் விருட்சங்கள் என பிதுர் தேவர்கள் தங்கும் இடங்களில் மேற்கண்ட முறையில் தர்ப்பண வழிபாடுகளை இயற்றி பயன்பெறலாம்.
கந்த சஷ்டி துதியை 36 முறை ஓதி சுத்தமான குங்குமத்தால் அர்ச்சித்து அந்த குங்குமத்தை எடுத்து வைத்துக் கொள்ளவும். அவரவர் சூழ்நிலையைப் பொறுத்து ஒரு நாளைக்கு ஓரிரு முறைகள் கூட ஓதுவதும் ஏற்புடையதே. 36 முறைக்குக் குறையாமல் ஓதிய குங்குமத்தை பசும் பாலில் கலந்து இதை ஸ்ரீகுழந்தை வேலப்பருக்கு செம்பால் அபிஷேகமாக நிறைவேற்றுதல் மிகவும் சிறப்பாகும்.
நேரில் பூம்பாறை திருத்தலத்திற்குச் செல்ல முடியாதவர்கள் கந்த சஷ்டி கவசம் ஓதிய குங்குமத்தை பிறர் மூலம் கொடுத்து அனுப்புவதும் ஏற்புடையதே.
சர்க்கரைப் பொங்கலில் முழு செர்ரி பழத்தை வைத்து பக்தர்களுக்கு தானமாக அளித்தல் சிறப்பாகும்.
ஐந்திற்கு ஒன்பது என்ற கணக்கில் குரு, புதன், கேது, செவ்வாய், சந்திரன் என்ற பஞ்ச நவகிரக மூர்த்திகள் இந்த புத்தாண்டில் இணைந்த அற்புதம் போல் தைப் பொங்கல் நாளிலும் சூரிய நாராயணப் பெருமாளே வக்ர கதி கொண்ட குரு பகவானுடன் இணைவது என்றால் நாம் எத்தகைய பேற்றைப் பெற்றிருக்கிறோம். சுபமான இந்த அணியில் ஞானகாரகன் கேது மூர்த்தியும் இணைந்து கொள்கிறார் என்றால் இதன் சிறப்புதான் என்னே.
சூரிய நாராயணப் பெருமாளை ராஜயோகி செவ்வாய் பகவானுடன் சக்கரவர்த்தி திருமகன் ராமச்சந்திர மூர்த்திக்குரிய புனர்பூசம் நான்காம் பாதத்தில் விளங்கும் சந்திர பகவானும் இணைந்து நேர்பார்வை கொள்வது என்பது நாம் நினைத்துப் பார்க்க முடியாத தெய்வீக அனுகிரகமாகும்.
இத்தனை சுப கோள அம்சங்களையும் அனைத்து பூலோக ஜீவன்களுக்கும் நிரவிடும் முகமாகவே செம்பால் அபிஷேகம் நம் சற்குருவால் அருளப்பட்டுள்ளது.
பூம்பாறை முருகப் பெருமானின் விக்ரஹத் திருமேனி ஸ்ரீஅகத்திய பெருமானின் முதன்மைச் சீடரான ஸ்ரீபோகர் பெருந்தகையால் பிரதிஷ்டைசெய்யப்பட்ட பெருமை உடையது. தச பாஷாண சக்திகளுடன் துலங்குவது.
தசபாஷாணம் என்றால் என்ன?
நவபாஷாணம் பற்றி நம் சற்குரு அளிக்கும் விளக்கத்தைப் புரிந்து கொண்டால்தான் தச பாஷாணத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்ள முடியும்.
ஒரு வீடு வாங்குவதாக இருந்தால் இந்த செயலில் முத்திரைப் பத்திரம் வாங்குவதற்கான பணம், விற்பவரின் கையெழுத்து, பத்திரப் பதிவு அலுவலக முத்திரை, விற்பவரின் கையெழுத்து, விற்பவருக்கு வாங்குபவர் தரும் பணம் போன்ற ஒன்பது சக்திகளின் செயல்பாடு இருக்க வேண்டும். அப்போதுதான் வீடு வாங்கும் அந்தச் செயல் அரசு அங்கீகாரத்துடன் திகழும்.
அது போன்றதே தெய்வீக சக்திகளை உயிரினங்களுக்கு வழங்க பிரதிஷ்டை செய்யப்பட்ட இறை மூர்த்திகளின் அம்சமும் ஆகும். இந்த அம்சங்களையே நாம் நவபாஷாணம், தச பாஷாணம் என்று குறிப்பிடுகிறோம்.
மேற்கூறிய நவபாஷாண சக்தியுடன் ஸ்ரீபோகர் பிரதிஷ்டை செய்த தசபாஷாண முருகப் பெருமானின் அதாவது பத்தாவது இறை சக்தியின் தன்மை என்ன?
ஆண் பெண் இணைப்பை நாம் மனித பந்தம், மனித உறவு என்கிறோம். மனிதர்களின் இந்தச் சாதாரண இணைப்பு இறைச் சன்னதிகளில் நிறைவேற்றப்படும்போது அது திருமணம் என்ற உயர்ந்த உறவைக் கொண்டதாக அமைகிறது. இதை முறையாக நிறைவேற்றவே நாம் பத்துப் பொருத்தங்கள் என்ற திருமணப் பொருத்தங்களை உறுதி செய்கிறோம். உண்மையில் தம்பதிகளுக்கு இடையே 108 பொருத்தங்கள் இருக்க வேண்டும். இந்த 108 பொருத்தங்களும் முறையாக பொருந்த அமைந்தவர்களே சீதாபிராட்டியும் ராமச்சந்திர மூர்த்தியும் ஆவர்.
இந்தத் திருமணப் பொருத்தங்களில் எத்தனைய குளறுபடிகள், குறைபாடுகள் இருந்தாலும் அதை ஓரளவு சீர்திருத்தி தம்பதிகள் நல்வாழ்வு வாழ துணை புரிபவரே குழந்தை வேலப்பர்.
அதேபோல பிராணன் முதலிய பத்து வாயுக்களால் உருவானதே மனித உடல். இந்த தச வாயுக்களும் மனித உடலிலிருந்து பிரிந்த பின் முறையாக பிரபஞ்சத்தில் நிலை கொள்ள வேண்டும். உயிர் பிரியும் முறைகளோ கோடி கோடி.
உயிர் பிரியும் காலத்திலும் உத்தராயணம், தட்சிணாயனம், பகல், இரவு, தற்கொலை போன்ற பல்வேறு பேதங்கள் ஏற்படுவது உண்டு.
உத்தராயண காலம்தான் மனித உயிர் உடலிலிருந்து பிரிவதற்கு உகந்த காலம் என்பதால் தன் உடலில் உயிரை தான் பெற்ற இச்சா மிருத்யு வரத்தால் கட்டிப் போட்டு வைத்திருந்தவரே ஸ்ரீபீஷ்மாச்சாரியார்.
தட்சிணாயன காலத்தில் தன் உடலை உகுத்தவரே ஸ்ரீபன்றிமலை சுவாமிகள்.
காஞ்சி கனிந்த கனி பரமாச்சாரியாரோ எந்த நேரத்தில் தன் உயிரை உகுத்தார் என்பதை எவருமே அறிய முடியாத நிலையில் இருந்தார் என்பதே சித்தர்கள் கூறும் இரகசியம்.
உயிர் பிரிவதில் இத்தனை குழப்பங்கள் இருந்தாலும், யார் எந்த நேரத்தில், எந்நிலையில் அவர்கள் உயிரை சட்டைபோல் கழற்றி உயிர் துறந்தாலும் அவர்களை சீர்படுத்தி அனுகிரகம் அளிப்பவரே ஸ்ரீகுழந்தை வேலப்ப முருகப் பெருமான் ஆவார்.
2025 ஆங்கில வருடமும் அதைத் தொடர்ந்து வரும் விசுவாவசு தமிழ் ஆண்டிலும் சரபூம், வணபூம், பவபூம் என்ற பூம் வகை மூதாதையர்கள் பூம்பாறை திருத்தலத்திலும் சில குறிப்பிட்ட திருத்தலங்களிலும் தங்கி தம் வம்சாவளியினருக்கு அருள்புரிய காத்திருக்கிறார்கள்.
இந்த பூம்வகை பிதுர் தேவதைகளை மகிழ்விக்கவே நாம் முருகப் பெருமானுக்கு செம்பால் அபிஷேகம், சிறுமலைப் பழ பஞ்சாமிர்த அபிஷேகம், தண்டியலங்காரம் என்ற மலர், பவள அலங்கார வழிபாட்டையும் மரகத வண்ண அல்வா, டைமண்ட் கல்கண்டு, தயிர், மாதுளை முத்துக்கள் போன்ற தான தர்மங்களையும் நிகழ்த்தும்படி நம் சற்குரு வலியுறுத்துகிறார்.
பூம் பூமா என்ற இரண்டுமே பொறுமையை வளர்க்கும் பீஜாட்சர சக்திகளாகும்.
செம்பால் அபிஷேகத்தால்
- திருமணத் தடங்கல்கள் மறையும்
- நல்ல சந்தான பாக்கியம் கிட்டும்
- செவ்வாய் தோஷங்கள் அண்டாது
- உறவுப் பகை, நண்பர்கள் உறவினர்கள் இடையே தோன்றும் பகை, அலுவலகப் பகை போன்றவை மறையும்.
- அயல் நாடுகள், அண்டை நாடுகளில், நாடுகளால் தோன்றும் பகை கூட மாயமாகும்.
- தீ விபத்துக்களின் தாக்கம் குறையும்.
வாழ்வில் ஒரு முறை, ஒரேயொரு முறையே கிட்டும் இந்த பூம் வகை பித்ருக்களின் ஆசிகளை முழுவதுமாக பெறும் முகமாக மேற்கூறிய வழிபாடுகள் நம் சற்குருவால் அருளப்பட்டுள்ளன.
ஐந்து கணுக்கள் உடைய கரும்புத் துண்டுகளை இந்த ஆண்டு முழுவதுமே தானமாக அளித்தல் சிறப்புடையதாகும்.
தண்டியும் தாண்டியும் இணையும் இந்த மகர சங்கராந்தியில் நாம் இணைவது என்பது எத்தகைய தெய்வீக வரப்பிரசாதம் !
அமுத தாரை 1
ஒருவர் ஒரு காரியத்தைச் செய்யும்போது அதற்கான காரணத்தைக் கேட்டால், இது என் குழந்தைக்கு பிடித்திருக்கிறது, இதன் மேல் என் மனைவிக்குக் கொள்ளை ஆசை… என்கிறார்கள். இது அவரவர் தங்களைத் தாங்களே புத்திசாலித்தனமாக ஏமாற்றிக் கொள்ள கையாளும் யுக்தியாகும்.
எதிர்காலத்தில் தனிமனித வழிபாடு பெருகும்… என்று பல்லாண்டுகளுக்கு முன்பே நம் சற்குரு எச்சரிக்கை விடுத்திருந்தார். Selfie என்று தங்களைத் தாங்களே செல்போன் மூலம் போட்டோ எடுத்துக் கொள்ளுதல் என்பது ஒரு தனி மனித வழிபாடுதான்.
இதை விடவும் பல மடங்கு கொடியதே என் குழந்தைக்கு பிடித்தது, என் மனைவிக்குப் பிடித்தது…என்ற வகையிலான தனிமனித வழிபாடும்.
நன்கு ஆத்ம விசாரம் செய்து, நற்பலன் பெருக, பெறுக !
அமுததாரை 2
செல்போன் என்பது இன்றைய உலகில் தவிர்க்க முடியாத அத்தியாவசியம் ஆகி விட்டது. இதை ஓரளவு தெய்வீக மயமாக்கவும், மனித எண்ணங்களை முறைப்படுத்தவும் ஒரு வழிபாட்டை சித்தர்கள் அளிக்கிறார்கள்.
நமது நாட்டிற்குரிய எண் இலக்கமான 91 என்பதுடன் அவரவர் விரும்பும் பத்து இலக்க செல்போன் எண்ணையும் சேர்த்து டயல் செய்தால் உங்கள் ஞாபக சக்தி பெருகுவதுடன் நாமகிரி தாயாரின் எண் கணித இறை சீர் சக்தி என்ற இறை ஆசியை உலகம் முழுவதும் நிரவச் செய்தவர்கள் ஆவோம்.
பூரு பூஜ்ய சக்திகளின் எதிர்மறை பிரபாவமும் (negative effects) ஓரளவு தணியும்.
அமுத தாரை 3
இரண்டு செல்போன்கள் அருகருகே இருந்தாலும், ஒரே வங்கியில் இரண்டு கணக்குகள் இருந்தாலும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ள முடியாது. பணம் எடுக்க முடியாது.
காரணம் என்ன?
இரண்டு செல்போன்களுக்கு இடையே, இரு கணக்குகளுக்கு இடையே நேரடித் தொடர்பு என்பது கிடையாது. இரண்டுமே Server Computer என்பதன் துணை கொண்டே செயல்பட முடியும். இது போன்றதுதான் நம் பூமியில், அனைத்து லோகங்களில் வாழும் உயிரினங்களின் தன்மையாகும், யாருடனும், எதனுடனும் நேரடித் தொடர்பு கொள்ள முடியாது. அனைத்து உயிர்களையும் இணைக்கும் Server Computer கடவுள் ஒருவரே.
இதை உணர்ந்து செயல்பட்டால் மனதில் தோன்றும் அமைதிக்கு எல்லையே இல்லை.
அமுத தாரை 4
எறும்பு எறும்பு என நீ உரைத்தாலும்
கரும்பு கரும்பு என்பதனை உனக்கூட்டி
விரும்பு விரும்பு என இறையருளை உனதாக்கும்
பூம்பூம்பூம் எனவாடும் உன் முந்தையரே
பிதுர் தேவதைகள் மகிழும் மேற்கண்ட துதியை இவ்வாண்டில் தர்ப்பணம் அளிப்பதற்கு முன்னால் ஓதுதல் சிறப்பே.
கொம்பூதிச் சித்தர் என்னும் பெருந்தகை மேற்கூறிய முறையில் தர்ப்பணம் அளிக்கும்போது திகழும் தெய்வீக சக்திகள் அனைத்தையும் தன் கொம்பு இசையில் நிரப்பி அடியார்களுக்கு உதவக் கூடிய அனுகிரக சக்திகளாக அளிக்க திருவுள்ளம் கொண்டுள்ளார்.
காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளுங்கள்…
அமுத தாரை 5
குக்கர் சமையல், ப்ளாட் வீடுகள், Kitchenless Home போன்ற பல்வேறு காரணங்களால் சூரிய ஒளிக் கதிர்கள் சர்க்கரைப் பொங்கல் மேல் படும் முறையில் பொங்கலை பொங்க முடியாமல் போய் விடுகிறது.
அதனால் சூரிய நாராயணப் பெருமாளின் அரிய அனுகிரக சக்திகளை இழந்து விடுகிறோம்.
இதை ஓரளவு சரி செய்வது எப்படி?
எம்முறையில் பெற்ற சர்க்கரைப் பொங்கலாக இருந்தாலும் அதை ஒரு மரப்பலகை மேல் வாழை இலையில் வைத்து
ஜபாகுசும சங்காசம் காஸ்யபேயம் மகத்யுதிம்
தமோரிம் சர்வபாபக்நம் பிராணதோஸ்மி திவாகரம்
என்ற சூரிய துதியை 12 முறை ஓதி 12 முறை சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்கி இறை மூர்த்திகளுக்குப் படைத்து பொங்கல் பிரசாதம் ஏற்றல் நலம்.
அமுத தாரை 6
இவ்வருடம் பூம்பாறை ஸ்ரீகுழந்தை வேலப்பர் திருத்தலத்தில் தோன்றும் பூம், பூமா பீஜாட்சர சக்திகளை தன் கொம்பு இசை மூலம் உலகம் முழுவதும் வியாபிக்க ஸ்ரீகொம்பூதி சித்தர் திருவுள்ளம் கொண்டுள்ளதால் அனைத்து முருகப் பெருமான் மூர்த்திகளுக்கும் 2025 ஆங்கில வருடத்திலும் தொடர்ந்து வரும் விசுவாவசு தமிழ் வருடத்திலும் செம்பால் அபிஷேகமும், தண்டியலங்காரமும் நிறைவேற்றி அடியார்கள் இந்த அரிய வாய்ப்பைத் தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அமுத தாரை 7
2025 வருட காணும் பொங்கல் 16.1.2025 குரு வாரமான வியாழனன்று அமைவது சிறப்பே. பூரண சக்திகளுடன் 2025 ஆண்டு விளங்குவதால் சற்குருமார்களுக்கும், ஜீவாலயங்களிலும் முழு முந்திரி மாலைகள் அணிவித்து வழிபடுதல் சிறப்பு.
பசு நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பை மஞ்சள் தூள், மிளகுத் தூள் சேர்த்து தானம் அளித்தலும், பிஸ்தா ஐஸ்கிரீமில் பதித்த முழு செர்ரி பழ தானமும் சுவையுடைத்தே.
திருவாரூரில் பிறந்த தண்டியடிகள் என்னும் நாயன்மார் பிறவியிலிருந்தே பார்வையை இழந்து வாடினார். இறையருளால் அவர் அகக் கண்ணும் புறக் கண்ணும் பெற்று வாழ அப்பெருமான் தன்னுடைய பூர்வ ஜன்மங்களில் பெற்ற இத்தகைய தண்டி சக்திகளே காரணமாய் அமைந்ததால் நாமும்அப்பெருமான் வழியில் சென்று இவ்வருடம் மலர்களாலும் பவள மணிகளாலும் தண்டியலங்காரம் நிகழ்த்தி நல்லருள் பெற்று வாழ்வோம்.
இவ்வருடம் அமையும் வைகுண்ட ஏகாதசி அன்று அதாவது 10.1.2025 வெள்ளிக் கிழமை அன்று மேற்கூறிய தான தர்மங்களை நிறைவேற்றுதலால் பெருமாளின் அனுகிரகத்தை நிறையவே பெறலாம். பெருமாளின் கண்கள் சாதாரண கண்கள் அல்லவே, செந்தாமரைக் கண்கள் அல்லவா அவை ?!
அமுத தாரை 8
ஆரூர் சுந்தரமூர்த்தி நாயனார் தன்னுடைய கண் பார்வையை இழந்து வருந்தியதை நீங்கள் அறிவீர்கள். இழந்த பார்வையைப் பெற பெருமான் பாடிய அகக்கண் பாடல்கள் தற்போது மறைந்துள்ளன. இருந்தாலும் மற்றுப் பற்று… எனத் தொடங்கும் தேவாரப் பதிகத்தை இந்த வருடம் முழுவதும் பத்து முறைக்குக் குறையாமல் தினமும் பாடி வருதலால் நற்பலன் பெறலாம்.
மூன்று பூஜ்யங்கள் கொண்ட 2000 வருடம் தன்னுடைய அடியார் ஒருவர் இந்த தேவாரப் பதிகத்தை தினமும் பத்து முறைக்குக் குறையாமல் பாடி நல்லருள் பெற வழிகாட்டியவரே நம் சற்குரு என்பது நீங்கள் இதுவரை அறியாத இறை இரகசியம். அந்த அடியாருக்கு மட்டும்தான் நம் சற்குரு வழிகாட்டுவாரா என்ன? அனைவருக்கும் உரித்தானவர்தான் நம் வெங்கடராம சுவாமிகள்.