ஓம் ஸ்ரீ வல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம்ஸ்ரீகுருவே சரணம்
|
பராய்த்துறை மேவிய பரன்
|
புற்று நோய் மட்டுமல்லாது தோல் கர்மங்கள் போன்ற பல கொடிய வினைகளால் ஏற்படும் விளைவுகளையும் தீர்க்கும் அபூர்வமான தலமே திருப்பராய்த்துறை ஆகும். பராய் என்னும் நோய் நிவர்த்தி சக்திகள் மிகுந்த அரிய மரத்தை தல விருட்சமாக உடைய திருத்தலமே திருப்பராய்த்துறை. வெள்ளி பஸ்மம், பவள பஸ்மம், தங்க பஸ்மம் போன்ற பஸ்மங்கள் தீராத பல நோய்களையும் தீர்க்கும் வல்லமை உடையவை. பஸ்மங்கள் என்பவை ஒரு பச்சிலையின் வீரிய சக்தியைப் போல் ஆயிரம் மடங்கு சக்தி உடையது ஆகும். பஸ்மங்களைப் போல் பல மடங்கு நோய் நிவாரண சக்தி உடையதே பாஷாணம் என்பது ஆகும். ஸ்ரீஐயப்பன் அருளும் சபரிமலை, நவபாஷாணத்தால் உருவான பழநி தண்டாயுதபாணி போன்ற தெய்வ மூர்த்திகள் அருளும் நோய் நிவாரண சக்திகள் பற்றி பலரும் அறிந்திருக்கலாம். இத்தகைய நவபாஷாணம் போன்ற நோய் நிவர்த்தி சக்திகள் போன்று பல மடங்கு சக்தி உள்ளதே பசும்பொன் என்ற நோய் நிவர்த்தி சக்தி ஆகும்.

திருப்பராய்த்துறை
பசும்பொன் என்ற நோய் நிவர்த்தி சக்தி பற்றி முழுமையாக அறிந்தவர்கள் சித்தர்கள் மட்டுமே. அதனால் சித்தர்கள் குலத் தோன்றலான நம் சற்குரு இத்தலத்தில் நோய் நிவாரண நாளில் (27ந் தேதி) திருப்பணிகள் இயற்றி நோய் நிவர்த்தி சக்திகளை புனருத்தாரணம் செய்தார் என்பதை அறிந்தோர் ஒரு சிலரே. வித்யா சக்தி, தாரண சக்தி, தாரணி போன்று சக்தி லோகங்கள் கோடி கோடியே. இவற்றில் பசும்பொன் சக்தி லோகம் தோன்றுவதற்கு காரணமாக அமைந்ததே திருப்பராய்த்துறை திருத்தலம் என்றால் இது ஒன்றே இத்தலத்தின் மகிமைக்கு உதாரணமாகத் திகழும் அல்லவா ? ஆதியில் இத்தலத்தில் சுயம்புமூர்த்தியான ஸ்ரீதாருகாவனேஸ்வரர் மட்டும் எழுந்தருளி இருந்தார். அன்னையை எழுந்தருளச் செய்வதற்கு பக்தர்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது அவர்கள் ஒரு சிக்கலை சந்திக்க நேர்ந்தது. இறைவன் ஆணைப்படி பசும்பொன் என்ற நோய் நிவர்த்தி உலோகத்தில் அம்மனை எழுந்தருளச் செய்ய வேண்டும். ஆனால் இந்த பசும்பொன்னை வார்த்தெடுக்கும் அச்சு சாதாரணமான களிமண்ணில் உருவாகாது. அதை ஒரு மனித அச்சில் அதாவது உயிருடன் இருக்கும் ஒரு மனிதனின் வாயைத் திறந்து ஊற்றித்தான் உருவாக்க முடியும். என்னதான் ஒரு இறை உருவத்தை வார்த்தெடுப்பதாக இருந்தாலும் தங்கள் உயிரை அதற்காக அர்ப்பணிக்க எவரும் தயாராக வர மாட்டார்கள் அல்லவா ? அப்படியே தங்கள் உயிரை தியாகம் செய்வதற்கு தயாராக இறை அடியார்கள் இருந்தாலும் கொதிக்கும் உலோகத்தை வாய்க்குள் ஊற்றிய பின் அது இறை விக்ரமாக உருப் பெற்று உறையும் காலம் வரை அந்த உஷ்ணத்தைத் தாங்கி இறை விக்ரஹம் தயாராகும் வரை தங்கள் உயிரை உடலில் நிறுத்தும் வல்லமை பெற்றவர்கள் யார் ? எல்லா தியாகங்களையும் ஏற்பவர்கள் சித்தர்களே என்பதால், எவரும் இந்த திருப்பணிக்கு முன் வராதபோது பசும்பொன் உலோகக் கலவையை தன் உடலில் தாங்கத் தயாராக இருந்தார் அந்த சித்தர். அவர் விருப்பப்படி அவர் வாய்க்குள் கொதிக்கும் உலோகக் கலவை ஊற்றப்பட்டு ஸ்ரீபசும்பொன் மயிலாம்பிகை தயாரானாள் என்பதே சித்தர்கள் அளிக்கும் அரிய சுவை. இவ்வாறு தன் உயிரைத் தியாகம் செய்ததால் இறைவன் பசும்பொன் லோகம் என்ற ஒரு லோகத்தை உருவாக்கி அந்த லோகத்தின் நிரந்தர மன்னனாக அவரை நியமித்தான் இறைவன். எனவே அதிக உஷ்ணத்தால், மருந்துகளின் ஆதிக்கத்தால் வயிற்றுப் புண், வாயில் ரணங்கள் போன்ற துன்பங்களால் வாடுவோர் இத்தலத்தில் ஸ்ரீபசும்பொன் சித்தரையும் ஸ்ரீபசும்பொன் மயிலாம்பிகையையும் வணங்கி பசு வெண்ணெய், சர்க்கரை கலந்து ஏழைக் குழந்தைகளுக்கு அளித்து வருதலால் நன்னிலை பெறுவர்.

ஸ்ரீதண்டாயுதபாணி திருப்பராய்த்துறை
ஸ்ரீபசும்பொன் சித்தருக்கு சுத்தமான விளக்கெண்ணெய் காப்பிட்டு தாமே அரைத்த சந்தனம், மஞ்சளால் பொட்டிட்டு வணங்குதல் சிறந்த வழிபாடாகும். திருப்பராய்த்துறை பிரகாரத்தை அடிப்பிரதட்சிணமாகவோ அல்லது மெதுவாகவோ பிரதட்சிணம் வருதல் என்பது அனைத்து விதமான நோய்களுக்கும் ஒரு பரிகாரமாக அமையும் என்பது உண்மையே. தாருகாவனம் என்னும் திருப்பராய்த்துறையில் இறைவன் ஆடைகளற்ற கோலத்தில் பவனி வந்தபோது அவன் பேரழகில் மயங்கி ரிஷி பத்னிகள் எல்லாம் இறைவன் பின்னால் சென்றார்கள் என்பது நாமறிந்த காவியமே. இறைவன் பின் செல்லுதல் என்பது வரவேற்கக் கூடியதே என்றாலும் அது காமத்தின் பொருட்டாக அமைந்ததால் இத்திருவிளையாடல் எதிர்காலத்தில் காமத்தால் மயங்கும் அடியார்களுக்கு ஒரு நிவர்த்தியாக அமையும் என்பதற்காக இறைவனால் வகுக்கப்பட்டதே ஆகும். தற்காலத்தில் அரைகுறை ஆடையுடன் திகழும் ஆபாசக் காட்சிகளால் மனம் தடுமாறும் இளைய சமுதாயத்திற்கு அவர்களுடைய தவறுகளுக்கு ஒரு பிராயசித்தமாக அமைவதுடன் அவர்களைத் திருத்தும் ஒரு திருத்தலமாக அமைவதும் திருப்பராய்த்துறை என்பதில் சந்தேகமில்லை. பசும்பொன் என்பது ஐந்து விதமான சக்திகளைத் தன்னுள் விரவிய தெய்வீக சக்தியாகும். பொன் என்பது தங்கத்தைக் குறிப்பதால் பசும்பொன் சற்குருவைப் பெற்றுத் தரும் வல்லமை உடையது. தற்காலத்தில் திருமண உறவுகளில் தங்கமே முதலிடம் பெறுவதால் திருமண நிகழ்ச்சிகளில் தங்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இத்திருத்தல அம்பிகையை நம்புவோர் நல்ல வரனைப் பெறுவர். தங்க பஸ்மம் போன்ற பலவகை பஸ்ம சக்திகளை நோய் நிவர்த்தி சக்திகளாக அளிக்கக் கூடியதே பசும்பொன். எத்தகைய கொடிய மனம் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் இத்தல மூர்த்திகளை தொடர்ந்து வழிபடுதலால் பொன் மனம் உடையவர்களாக மாறுவர். தியாகம் என்பதை ஆணி வேராக உடைய ஆணிப் பொன்னம்பலம் நடமிடும் இதயத்தை உடையவர்களாக அவர்கள் துலங்குவர். இத்தலத்தில் இறைவன் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரக் கோலத்தில் அருளாட்சி புரிகிறார். பொதுவாக, அர்த்தநாரீஸ்வரக் கோலம் என்பது பாதி ஆண், பாதி பெண் என்ற கோலத்தைக் கொண்டதாக மேலோட்டமாகப் புரிந்து கொண்டாலும் உண்மையில் ஆணும் பெண்ணும் கலந்து ஈருடல் ஓருயிராய்த் திகழ்வதே அர்த்தநாரீஸ்வரக் கோலமாகும். இது உண்மைதான் என்று உணர்த்துவதும் பசும்பொன்னின் திறமாகும். மேற்கூறிய ஐந்து சக்திகளையும் அனுகிரகமாக அளிக்கக் கூடிய அம்பிகையே ஸ்ரீபசும்பொன் மயிலாம்பிகை ஆவாள். இத்தகைய பசும்பொன் சக்திகளை புனருத்தாரணம் செய்வதற்காகவே பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று பெயர் கொண்ட புதன் கிழமை அன்று செவ்வாய் சந்திர சங்மத்தில் மூன்றாம் வீடான ரிஷபத்தில் மேற்கொண்ட புத ஆதித்ய சக்திகளை நிலைநாட்டினார் நம் சற்குரு என்பது மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம்தானே. இத்துடன் நிகழ்ந்த அற்புத நோய் நிவர்த்தி சக்தி பிரவாகமும் சுவையானதே. அன்று மாலை அகண்ட காவிரி என்று பெயர் கொண்ட, துலா நீராடல் உதிக்கும் திருப்பராய்த்துறை படித்துறையில் நீராடி நோய் நிவர்த்தி சக்திகளை இத்திருத்தலத்தைச் சுற்றிப் பதித்தார் நம் சற்குரு. எப்படி ?

ஸ்ரீபசும்பொன் சித்தர் திருப்பராய்த்துறை

ஸ்ரீபசும்பொன் மயிலாம்பிகை
திருப்பராய்த்துறை
நம் சற்குரு நீராடியபின் அவர் முதுகில் ஒரு பெரிய ஈ கடித்துக் கொண்டிருந்தது. தன் உடம்பில் கொசு, ஈ போன்ற எந்த ஜீவன் கடித்தாலும் அதற்கு விசிறி சேவை செய்வதையே தன் இயல்பாகக் கொண்ட சற்குரு அன்று ஆறு எழுத்துக்கள் கொண்ட ஒரு அடியாரை அழைத்து அந்த ஈயை விரட்டும்படி சொன்னார். அந்த அடியார் திகைத்து விட்டார். காரணம் அந்த ஈ நம் சற்குருவை கடித்து அவர் உடம்பிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு சாதாரண விஷயமாக இருந்தாலும் இதன் பின்னால் அமைந்த தெய்வீகக் கருத்தை சற்று விளக்கினால்தான் புரியும். மனிதர்கள்போல் அல்லாமல் மகான்கள், சித்தர்கள் போன்றோரை ஈ, கொசு போன்றவை கடிப்பது கிடையாது. மற்ற லோகங்களிலிருந்து வரும் தேவர்கள், கந்தவர்கள் போன்றோர் தங்கள் வாகனத்தை எங்காவது நிறுத்தி வைத்து விட்டு ஸ்ரீபோடா சித்தர், ஸ்ரீமாயம்மா போன்றோரை ஈ, கொசு, நாய் வடிவில் வந்து தரிசிப்பது உண்டு. அவர்கள் தங்கள் சுய உருவில் வந்தால் சுற்றி உள்ள மனிதர்கள், விலங்குகள் போன்றோரின் கண்கள் அவர்களுடைய தெய்வீக ஒளியைக் காண முடியாமல் குருடாகி விடும் என்பதால் அவர்கள் மேற்கொள்ளும் முன்னேற்பாடே இது. அவ்வாறு வரும் நோய் நிவாரண கந்தவர்கள் சிலரை மகான்கள் அழைத்து தங்கள் உடம்பில் குறித்த அளவு இரத்தத்தை உறிஞ்சி எடுத்து அதை நோய் தீர்க்கும் தலங்கள், மரங்கள், தீர்த்தங்கள், தரிசனங்கள் இவற்றில் கலந்து விடச் சொல்வது உண்டு. இவ்வாறு நம் சற்குரு நோய் நிவாரண சக்திகளை புனருத்தாரணம் செய்ய நினைத்ததால் காவிரி, பொன்னி என்ற மூன்று எழுத்து நதியில் நீராடி மூன்றெழுத்திற்கு குசாவான ஆறிற்கு உரிய சுக்ர பகவான் ரிஷப ராசியில் ஆட்சி கொள்ளும் தினத்தில் ஆறு எழுத்து சக்தி உடைய பராய்த்துறை திருத்தலத்தில் திருப்பணிகள் இயற்றி, ஆறு எழுத்து ஜீவியான ஈயால் அதாவது பசும்பொன் ரிஷியால் அந்த சக்திகள் அத்திருத்தலத்தைச் சுற்றி விரவப்பட்டன என்பதே நாம் அறிய வேண்டிய சித்த சுவையாகும். நம் சற்குரு அன்று புனருத்தாரணம் செய்த நோய் நிவாரண சக்திகள் குறைந்தது ஆயிரம் வருடங்களுக்கு திருப்பராய்த்துறை சிவத்தலத்தில் நிலவும் என்பது சந்தேகமில்லை. வெளிநாட்டில் ஒரு இளைஞர் சர்ச் ஒன்றில் மணி அடிக்கும் வேலை பார்த்து வந்தார். அந்த மாதாகோவில் பொறுப்பில் இருந்த பாதிரியார் அந்த இளைஞன் ஆங்கிலம் கற்றுக் கொண்டால்தான் வேலை நிரந்தரமாகும் என்று கூறவே அது முடியாமல் அவர் வேலையை விட்டு விலகி விட்டார். பின்னர் ஒரு சிகரெட் கடையை ஆரம்பித்து சிறிது சிறிதாக முன்னேறி உலகப் பணக்காரர்களில் ஒருவரானார்.

பராய்மரம் திருப்பராய்த்துறை

ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் திருப்பராய்த்துறை
இது கேட்பதற்கு ஒரு புத்திசாலித்தனமான முன்னேற்றம் போல் தோன்றினாலும் நம் முன்னோர்கள் இதை ஆதரிப்பதில்லை. இதே விஷயத்தை நம் சற்குரு எப்படி அணுகினார் என்று அறிவோமா ? ஒரு முறை தோல் பதனிடும் தொழிற்சாலை ஒன்றில் பணி புரிந்த ஒரு இளைஞன் நம் சற்குருவிடம் அடைக்கலம் புகுந்தார். அவர் சிறுவயது முதலே திருச்சி குளுமியானந்தா ஜீவ சமாதியில் பணியாற்றியதால் தெய்வீகத்தில் ருசி உடையவராக இருந்தார். துரதிர்ஷ்டவசமாக தோல் கம்பெனியில் பணியாற்றினாலும் நல்லிணக்கம் காரணமாக அவர் நம் சற்குருவின் வழிகாட்டுதலைப் பெற்றார். திருச்சியிலிருந்து நடந்தே திருப்பராய்த்துறைக்கு சென்று அங்குள்ள ஆலய மணியை தரிசனம் செய்து வர வேண்டும் என்பதே அந்த ஆறெழுத்து அடியாருக்கு சற்குரு இட்ட திருப்பணி. ஒரே ஒரு முறைதான் இந்த பரிகாரத்தைச் செய்தார், ஒரு அயல்நாட்டுக் கம்பெனியில் அவருக்குப் பணி கிடைக்கவே தன்னுடைய தோல் கர்மத்திலிருந்து நிரந்தர விடுதலை பெற்றார் அந்த அடியார். ஆலயமணியின் தரிசனமே ஒரு அடியாரின் கடுமையான தோல் கர்மாவை நிவர்த்தி செய்யும் சக்தியை உடையது என்றால் அந்த மணி ஓசையைக் கேட்டு அத்திருத்தல மூர்த்திகளை முறையாக தரிசனம் செய்வதால் நமக்குக் கிட்டும் பலன்களை வார்த்தைகளால் வர்ணிக்க இயலுமா ? எச்சில், திருஷ்டி கழிப்பு, தீட்டு போன்ற பலவிதமான கர்ம வினைகளால் நம் உடலில் எதிர்மறை சக்திகள் சேர்வதால் நாம் அடிக்கடி நோய் வாய்ப்படுகிறோம் என்பதால் வீட்டை விட்டு வெளியே போகும்போதெல்லாம் காலில் செருப்புப் போட்டுக் கொள்ளும் பழக்கத்தை நாம் கைக்கொண்டாலும் இதையும் மீறி பல தீய வினைகள் நம்மைத் தொற்றிக் கொள்ளத்தானே செய்கின்றன. இதற்கு நிவாரணமாக அமைவதே கட்டை செருப்பை அணிந்து கொண்டு திருத்தலங்களை தரிசனம் செய்வதும், மரச் செருப்புகள் என்னும் பாதக் குறடுகளை அவற்றைப் பயன்படுத்துவோர்களுக்கு தானமாக அளிப்பதும் ஆகும். அபூர்வமாக திருப்பராய்த்துறையில் அருள்புரியும் ஸ்ரீதண்டாயுதபாணி இத்தகைய குறடுகளுடன் தரிசனம் அளிப்பதால் மரச் செருப்புகளை இத்தலத்தில் தானமாக அளிப்பது அரிய நோய் நிவாரண சக்திகளை அளித்து, குறிப்பாக இனந் தெரியாத காய்ச்சல், தோல் வியாதிகள் போன்றவற்றிற்குப் பரிகாரமாக அமைகிறது. திருப்பராய்த்துறை திருத்தலத்தில் பாதணிகளை ஸ்ரீதண்டாயுதபாணிக்கு சமர்ப்பித்து அவற்றைக் குருபிரசாதமாகப் பாவித்து தங்கள் இல்லங்களில் தொடர்ந்து பூஜிப்பதால் கிட்டும் பலன்கள் அளப்பரியன. நோய் நிவாரண சக்திகளை அளிப்பதோடு பெண்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் ஒரு கவசமாக இவ்வழிபாடு அமையும் என்பதில் சந்தேகமில்லை.
மிகவும் அபூர்வமான பராய் மரத்தை தலமரமாக உடைய திருத்தலமே இங்கு நீங்கள் காணும் திருப்பராய்த்துறை திருத்தலமாகும். எத்தகைய கடுமையான புற்று நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கக் கூடிய அற்புத திருத்தலம். இங்குள்ள தல விருட்சமான பராய் மரத்திற்கு தங்கள் கையால் அரைத்த மஞ்சளை பூசி வலம் வந்து வணங்குதல் நலம். தோல் வியாதிகளும் குணமாகும். ரவையுடன் சர்க்கரை சேர்த்து எறும்புகளுக்கு இடுதல் நலம். ஆனால், இம்மரத்தில் உள்ள இலைகளைப் பறித்து சுயநலமாக பயன்படுத்தினால் பெரும் சாபங்கள் விளையும் என்பதை நினைவில் கொள்ளவும்.

கிரகமண்டலம் திருப்பராய்த்துறை

ஸ்ரீபரளி விநாயகர் திருப்பராய்த்துறை
நவகிரகங்களை நட்சத்திரப் பூக்கள் என்று சித்தர்கள் அழைப்பர். நட்சத்திரங்களும் அவ்வாறு அழைக்கப்படுவது உண்மையே. மனிதர்களைப் போலவே நட்சத்திரங்களுக்கும், நவகிரகங்களுக்கும் ஒளியும் மணமும் உண்டு. இதைப் பற்றிக் குறிப்பிடும்போது சாதாரண மனிதர்களில் உத்தம பெண்களுக்கே இயற்கையான மணம் வீசும்போது நவகிரகங்களுக்கு மணம் வீசாதா என்ன என்று கேட்பார் நம் சற்குரு. இவ்வாறு கிரகங்கள் தங்களுக்குரிய மணத்தைப் பெற்ற இடமே திருப்பராய்த்துறை ஆகும். இந்த கிரக மண்டலங்களுக்கு அடியிலோ அல்லது திருத்தலத்தில் ஏதாவது ஒரு இடத்தில் இந்த நவகிரக மண்டலத்தை பச்சரிசி மாவினால் வரைந்து அதைச் சுற்றி ரோஜா, மல்லிகை அல்லது முல்லை, செம்பருத்தி பூக்கள் ஒவ்வொன்றும் 36ன் மடங்காக இருக்கும்படி வைத்து வேயுறு தோளி பங்கன் போன்ற நவகிரக துதிகளை ஓதி வழிபடுவது அற்புத நோய் நிவாரண சக்திகளை சமுதாயத்தில் வர்ஷிக்கும். இது அற்புத நோய் நிவர்த்தி வழிபாடாக அமைவதால் இறை அடியார்கள் ஒன்று சேர்ந்து கூட்டாகவோ அல்லது குறைந்த பட்சம் தங்கள் குடும்ப அங்கத்தினர்கள் அனைவருடனும் சேர்ந்து வழிபடுவதே சிறப்பாகும். திருப்பராய்த்துரைக்கு எதிரே உள்ள காவிரி அகண்ட காவிரி என்று பெயர் பெற்றுள்ளதால் தற்போது ஒவ்வொரு ஐப்பசி மாதம் நிகழும் துலா நீராடிலில் முதல் நாளை இங்கு நீராடுவதற்காக பக்தர்கள் அனுஷ்டித்து நோய் நிவாரண சக்திகளைப் பெற்று வருகிறார்கள். அகண்ட என்றால் அகலாமானது என்று மட்டுமல்லாமல் இடைவெளி இல்லாதது என்ற பொருளும் உண்டு அல்லவா ? இறைவனின் நாமத்தையோ, வழிபாட்டையோ, விரதத்தையோ இடைவெளி இல்லாமல் தொடர்ந்து முறையாக அனுஷ்டிக்க வேண்டும் என்ற விருப்பத்தை உடையவர்கள் அத்தகைய நியாயமான பிரார்த்தனைகளை இத்திருத்தலத்தில் ஏற்று வருதல் சிறப்பாகும். ஸ்ரீஅகண்டநாம மகரிஷி என்ற மகரிஷி ஸ்ரீபரளி விநாயகர் திருவடிகளில் ஜீவ சமாதி கொண்டு அருள்பாலிப்பதால் பக்தர்களின் அனைத்து “அகண்ட” பிரார்த்தனைகளும் நல்முறையில் நிறைவேற இவர் திருவருள் பெருந்துணை புரியும். தனக்குப் பின் தன்னுடைய சொத்து, நிலபுலன்கள் வீணாகாமல், திருடப்படாமல் நன்முறையில் தம் சந்ததிகளுக்குப் போய்ச் சேர வேண்டும் என்று நினைப்பதும் ஓர் அகண்ட பிரார்த்தனைதானே.

ஊர்த்துவ தாண்டவம் திருப்பராய்த்துறை

ஸ்ரீகாளி தேவி திருப்பராய்த்துறை
தன்னைப்போல் தன்னுடைய சந்ததிகள் அனைவரும் ஒருவர் கூட பாக்கியில்லாமல் இறைவன் திருவடிகளை அண்டி நிரந்தரமாக வாழ வேண்டும் என்ற நினைப்பதும் ஒர் அகண்ட பிரார்த்தனைதான். இவ்வாறு அகண்ட இறை நினைவு கூடும்போதுதான் அது தியானமாக மலர்ந்து சமாதி கூடி இறை தரிசனம் பூர்ணம் அடைகின்றது. அவ்வாறு பக்தன் பெறும் இறைத் துறையே பராய்த் துறை. பக்தன் பெறும் முதல் இறை தரிசனமே ஜோதி வடிவில்தான் அமைகிறது. இதைக் குறிப்பதே ஜார்கண்ட் மாநிலத்தில் அமையும் வைத்தியநாத லிங்க தரிசனமாகும். இந்த ஜோதி லிங்கம் முழுவதுமே பரளி ஜோதியாகத் திகழ்வதே சிறப்பாகும். இவ்வாறு திருஅண்ணாமலையை லட்சக் கணக்கான நட்சரத்திரங்கள் சூழும் ஒளிப் பிழம்பாக தரிசனம் பெற்றவரே ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஆவார். ஸ்ரீபரளி விநாயகர் வழிபாடு இத்தகைய ஜோதி வழிபாடுகளுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்வதால் குறைந்தது 12 ஜோதிகளை, அகல் தீபங்களை ஏற்றி ஸ்ரீபரளி விநாயகர் மூர்த்தியை வழிபடுவது சிறப்பாகும். பராய் என்பதும் பரளி போன்ற ஒரு ஒளி தரிசனமே. திருப்பராய்த்துறையை வலம் வந்து பராய் மரத்திற்கு தாமே அரைத்த மஞ்சள், சந்தனம், குங்குமம் பொட்டிட்டு வணங்குதல் எளிய முறையில் இந்த பராய் ஜோதி தரிசனத்தைப் பெறும் முறையாகும். திருத்தலங்களில் எல்லாம் இறைவழிபாட்டின் போது,
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
என்று முழங்குவது இத்தகைய பராய் ஒளி சக்தியை அனைவரும் பெறுவதற்காகவே என்பது இப்போது தெளிவாகின்றது அல்லவா ? சிவலிங்கம், அம்பாள், முருகன், கோபுரம், ஆண், பெண் என்று திருத்தலங்களில் நாம் காணும் காட்சிகள் அனைத்தும் தத்துவத்தின் வெளிப்பாடுகளே, மாயத் தோற்றங்களே. தத்துவங்களைப் புரிந்து கொண்டால்தான் நாம் உண்மையான இறை தரிசனத்தைப் பெற முடியும். அதுவரையில் பராய், பரளி, இறை தரிசனம் என்பவை எல்லாம் வெறும் வார்த்தைகளே. இந்த வார்த்தைகள் வெறுமனே மறைந்து விடாமல், அர்த்தமற்றுப் போய் விடாமல் இருப்பதற்காக தன் இரத்தத்தையே சிந்தினார் பராய்த்துறை மண்ணில் நம் சற்குரு. இந்த வரிகளைப் படிக்கும் நீங்கள் ஒரே ஒருவர் முயன்றால் போதும் இந்த வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்து விடலாம் !!
ஒரு முறை நம் சற்குருவின் பிறந்த நாள் வைபவத்தின்போது ஒரு அடியார் இத்தலத்தில் மாங்கல்ய தானம் அளிப்பதற்காக இரண்டு மாங்கல்யங்களுடன் வந்தார். அப்போது அங்கிருந்த ஒரு கணவன் மனைவிக்கு ஒரு மாங்கல்யத்தை அளித்த பின் மற்றொரு பெண்மணியும் மாங்கல்யத்தை கேட்கவே தம்பதிகளுக்கே அத்தகைய தானங்கள் அளிக்கப்படும் என்று கூறவே அந்தப் பெண்மணியும் சற்று நேரத்தில் தன்னுடைய கணவனுடன் அங்கு வருவதாகக் கூறி அந்த இடைவேளையில் வேறு யாருக்கும் மாங்கல்யத்தை கொடுத்து விட வேண்டாம் என்ற வாக்குறுதியையும் பெற்றுக் கொண்டு வேகமாக அங்கிருந்து புறப்பட்டாள். சுமார் பதினைந்து நிமிடங்கள் கழித்த பின்னர் தன்னுடைய கணவனுடன் அந்தப் பெண் திரும்பி வந்து அந்த மாங்கல்ய தானத்தை அளிக்கும்படிக் கேட்டுக் கொண்டாள். அந்த அடியாருக்கோ இக்கட்டான சூழ்நிலை. காரணம் அந்தப் பெண்மணியின் கணவர் சராராயம் அருந்திய போதையில் இருந்ததுதான். சற்று நேரம் யோசித்த அடியார் அனைத்தும் கடவுள் விருப்பமே என்று தெளிந்து அந்தக் கணவனிடம் மாங்கல்யத்தை அளிக்க அவனும் போதையிலேயே அந்த அடியார் சக அடியார்களுடன் ஸ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் என்ற சுக்ர சக்திகள் மிகுந்த மந்திரத்தை ஓத மாங்கல்ய தானம் இனிது நிறைவேறியது. சுமார் மூன்று வருடங்கள் கழிந்தன. மீண்டும் அந்த அடியார் ஒருவரின் புற்று நோய் நிவாரணத்திற்காக திருப்பராய்த்துறை தலத்திற்கு செல்ல நேர்ந்தபோது அதே பெண்மணி கண்களில் நீர் மல்க அந்த அடியாரின் காலில் வீழ்ந்து வணங்கினாள்.
பிறர் நம் காலில் விழுந்து வணங்குவதை மனத்தளவில் அந்த அடியார் ஏற்கா விட்டாலும் வேறு வழியின்றி அந்த மரியாதையை ஏற்றுக் கொண்டு அந்த பெண்மணியின் இந்த எதிர்பாராத செய்கைக்கு காரணத்தை கேட்கவே அந்தப் பெண்மணியும் தான் அந்த தலத்தில் மூன்று வருடங்களுக்கு முன் மாங்கல்யத்தை தானமாகப் பெற்றதாகவும், மொடாக் குடியனாக இருந்த தன் கணவன் அந்த மாங்கல்ய தானத்தால் திருந்தி விட்டதாகவும் அன்று முதல் குடிப்பழக்கத்திற்கே முற்றுப் புள்ளி இட்டு இன்று வரை திருந்திய நல்ல மனிதனாக, பொறுப்புள்ள கணவனாக மாறி விட்டதாகவும் தெரிவித்தாள். இதுவே பரளி ஜோதியின், பரளி விநாயகர் வழிபாட்டின் மகிமையாகும். கனவிலும் நினைக்க முடியாத இந்த தாம்பத்ய உறவை ஏற்படுத்திக் கொடுத்தது அந்த அடியாருக்கு குரு மேல் உள்ள நம்பிக்கையா, இல்லை அந்தப் பெண்மணிக்கு இறைவன் மேலுள்ள நம்பிக்கையா, இல்லை சற்குருவின் பிறந்த நாளில் கூடிய பரளி ஜோதியின் மகிமையா, இல்லை இவை அனைத்தும் திருப்பராய்த்துறை திருத்தலத்தில் பொலிந்த பரன் மகிமையா, அதை அந்த பரனே அறிவார்.

மாயைகளும் மாற்றங்களும்
திருப்பராய்த்துறை
இறைவனை தரிசனம் செய்ய உதவும் பல சாஸ்திரங்களில் தந்திர சாஸ்திரம் என்ற ஒரு சாஸ்திரம் உண்டு. மக்களால், அதுவும் கலியுக மக்களால் பெரிதும் குழப்பிக் கொள்ளப்பட்ட சாஸ்திரம் இதுவாகும். இந்த சாஸ்திரத்தில் கைதேர்ந்தவரே ஜனக மகாராஜா ஆவார். அக்காலத்தில் தான் என்ற அகந்தையை அழிக்க சாராயத்தையும், தந்திர சாஸ்திரத்தில் வரும் ஆண் பெண் உறவை இளம் பெண்கள் மூலமாகவும் ஏற்படுத்தி தந்திர சாஸ்திரத்தை முறையாக மக்களுக்கு போதித்து வந்தவரே ஜனக மகாராஜா. யுகங்கள் செல்லச் செல்ல தந்திர கோட்பாடுகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மகான்கள் சாராயம், பெண்கள் சம்பந்தம் இல்லாமலே தந்திர சாஸ்திரம் கூறும் தத்துவங்களை நடைமுறைப்படுத்த முடியும் என்று நிரூபித்துக் காட்டினர். ஸ்ரீராமகிருஷ்ணர் பரமஹம்சர் என்ற பட்டத்தைப் பெறுவதற்கே இந்த அணுகு முறையே முக்கிய காரணமாக இருந்தது என்பதைப் பலரும் அறிவர். அதே சமயம் தந்திர சாஸ்திரம் என்பது பொய்யாகாது என்று தற்காலத்தில் முயன்றால் கலியுக நியதியாக அந்த அணுகு முறையில் தோல்வியைத்தான் சந்திக்க நேரிடும் என்பதை தன் வாழ்க்கை மூலம் மற்றவர்களுக்கு ஒரு பாடம் புகட்டியவரே பகவான் ரஜனீஷ் ஆவார். ஆண் பெண் என்பது அனைவர் மனதிலும் உடலிலும் வியாபித்துள்ள ஒரு தத்துவமே. இந்த தத்துவத்தை நடைமுறைப்படுத்தி மக்கள் சமுதாயம் இனிது வாழ, வழிகாட்ட சித்திரங்களாக, சிலைகளாக வடித்துத் தந்தவர்களே நம் முன்னோர்கள். காஜுராஹோவில் உள்ள சிற்பங்கள் எல்லாம் இந்த பொதுப்படையான நல்வாழ்வை அடிப்படையாகக் கொண்ட தியாகச் சின்னங்களே. நம் திருத்தலங்களில் உள்ள புணர்ச்சி சிற்பங்கள் எல்லாம் இந்த அடிப்படை கருத்தை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டவையே. ஆனால், இந்த மையக் கருத்தை மனித மனம் ஏற்காது என்பதை உணர்ந்த சித்தர்கள் நமக்கு அளித்த அற்புத வழிபாடே ஸ்ரீஅகத்தியர் அருளிய 32 தேவாரப் பதிகங்களாகும். இல்லறத்தில் திகழும் ஒரு ஆணும் பெண்ணும் ஒருவர் கையை ஒருவர் கோர்த்துக் கொண்டு இந்த 32 பதிகங்களையும் ஓதும்போது அது 64 பதிகங்களாக மாறும் அல்லவா ? இதுவே பெண் உடலில் 30 கலைப் பரல்களாக, சந்திர அமுத சக்திகளாக உள்ள ஒளிக் கிரணங்களை, சக்தி கூறுகளை ஆண் சக்தியுடன் சேர்த்து பிரபஞ்சத்திற்கு அளிக்கும் அற்புத வழிபாட்டு முறையாகும். இந்த வழிபாட்டின் பூரணமாகத் திகழ்வதே பரளி ஒளி தரிசனம் ஆகும். இதை அளிக்கக் கூடியதே ஸ்ரீபரளி விநாயகர் வழிபாடு. தினமும் காலையோ மாலையோ குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் வீட்டில் விளக்கேற்றி ஒருவர் கையை ஒருவர் கோர்த்துக் கொண்டு ஸ்ரீஅகத்தியர் தேவாரத் திரட்டுப் பாக்களை குறைந்தது அரை மணி நேரம் ஓதி வருவதால் அவர்களால் பரளி ஜோதி தரிசனத்தைப் பெற முடிகிறதோ இல்லையோ நிச்சயம் குடும்பத்தில் சாந்தம் தவழும், அமைதி குடி கொள்ளும். பல பிறவிகளில் தந்திர சாதனை அளிக்கும் வழிபாட்டுப் பலனை ஒரு சில மாதங்களிலேயே ஒரு சாதாரண மனிதன் பெற முடியும் என்றால் இதற்கு வழிகாட்டிய நம் சற்குருவிற்கு நாம் எப்படித்தான் நன்றி கூற இயலும் ?!
இவ்வளவு சிரமப்பட்டு பரளி ஜோதி தரிசனம் பெறுவதால் என்ன பலன் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா ? நம் பரமகுரு ஸ்ரீஇடியாப்ப சித்தர் பிரான், “ஒரு அணுகுண்டு போட்டு அதில் லட்சம் பேர் உயிரிழப்பது சாதனை அல்ல, ஒரு அணுகுண்டு போட்டு அதன் பலனாய் ஆயிரம் நெல் மூட்டை விழுந்தால், அதுதான் சாதனை,” என்பார். அது போல பரளி சக்தியை ஆக்கப்படுத்தத் தெரிந்தவர்கள் ஒரு விநாடியில் ஆயிரம் மூட்டை என்ன லட்சம் மூட்டை நெல்லை கூட குவிக்க முடியும். ஆனால் இத்தகைய சக்தி பெற்றவர்கள் இறை ஆணையின்றி இத்தகைய காரியங்களை நிறைவேற்ற முயற்சிப்பது கிடையாது. பரளி ஜோதியின் விளைவாகவே திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார் போன்ற அடியார்கள் எல்லாம் தங்க நாணயங்களை சிவ பரிசாகப் பெற்று பஞ்சத்தில் வாடிய மக்களின் கடும்பசியை தீர்த்தார்கள் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம். எப்படி குரு இல்லாமல் குண்டலினி போன்ற யோகங்களை கற்கும் அடியார்கள் பலவித உடல் வேதனைகளால் அவதிப்படுகிறார்களோ அது போல அவர்கள் இப்பிறவியில் அதீத உஷ்ணத்தால் அனுபவிக்கும் வேதனைகளில் ஒன்றே பரளி அல்லது பிரளி வயிற்று வலி என்பதாகும். பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் தாக்கும் வேதனையாக இது இருப்பதால் காரணமில்லாமல் தொடர்ந்து குழந்தைகள் அழும்போது திருப்பராய்த்துறை ஸ்ரீபரளி விநாயகருக்கு நல்லெண்ணெய் காப்பிட்டு 108 பூரணக் கொழுக்கட்டைகளைப் படைத்து சிறுவர்களுக்கு தானம் அளித்தலால் வயிற்று வலியால் வாடும் குழந்தைகள் நலமடைவர்.

கமார் வெற்றிலை மாலையில்
ஜொலிக்கும் ஆஞ்சநேயர்
சனிக் கிழமைகளில் ஆஞ்சநேயர் குறிப்பாக உய்யக்கொண்டான்மலை ஆஞ்சநேயர், அர்த்தநாரீஸ்வரர் குறிப்பாக பராய்த்துறை ஈசன், விநாயகர் குறிப்பாக பரளி விநாயகர் போன்ற இறை மூர்த்திகளுக்கு கமார் வெற்றிலையில் ராம ராம என்று சந்தனக் குழம்பால், சந்தனக் குச்சி கொண்டு அல்லது வெள்ளி, தங்க மோதிரங்கள், வெற்றிலை காம்பு கொண்டு எழுதி சாற்றுவதால் குடும்ப ஒற்றுமை ஏற்படுவதுடன் முரட்டுத்தனமுள்ள உள்ள குழந்தைகள் திருந்தி வாழ உதவும் வழிபாடும் இதுவாகும். சிவ சக்தி தத்துவங்களை இணைப்பதாகவும், ஆண் பெண் தத்துவங்களை இணைக்கும் ஈர்ப்பு சக்தியாகவும், அத்வைத தத்துவத்தில் பர தத்துவம் என்ற வெற்று இலை தத்துவமாகவும் மலர்வதே கமார் வெற்றிலையாகும். வெள்ளிக் கிழமைகளில் கை நிறைய கமார் வெற்றிலைகளை எருமை மாடுகளுக்குத் தானமாக அளித்தலால் வாகன விபத்துகள் தவிர்க்கப்படும். சதா சண்டை சச்சரவுடன் திகழும் தம்பதியர் இவ்வாறு கமார் வெற்றிலையுடன் கொட்டைப் பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து தானமளித்தலால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க்கைப் படகைச் சீராக செலுத்த இத்தகைய தானங்கள் சாதகமாய் அமையும். குறைந்தது ஐந்து வெற்றிலைகளையும் நான்கு கொட்டைப் பாக்குத் துண்டையும் சேர்த்து தானமளித்தல் சிறப்பு. பலரும் தற்போது தூள் பாக்கை இறை வழிபாட்டிற்கும் தான தர்மங்களுக்கும் பயன்படுத்துகின்றனர். குடும்பங்கள் சிதறிப் போவதற்கு இத்தகைய வழிபாடுகளும் ஒரு காரணமே என்பதை உணர்ந்து கொள்ளவும். பீம ரத சாந்தி என்ற வைபவத்தை, அதாவது 70 வயது பூர்த்தி நிறைவை தனியாகவே கொண்டாடியதாக ஒருவர் தெரிவித்தபோதுதான் சற்குரு இவ்வாறு தூள் பாக்கை இறை வழிபாட்டிற்கு பயன்படுத்துவதால் வரும் இத்தகைய துன்பங்களை எடுத்துரைத்தார். பக்தர்கள் இவ்விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கும்படிக் கேட்டுக் கொள்கிறோம். வாழை இலையில் சூடான காலிபிளவர் பஜ்ஜி, ரோஜா மொக்கு சேர்ந்த சூடான தேநீர், வெற்றிலை பாக்கு தானம் ஒரு இனிய வரப் பிரசாதமே. இல்லற வாழ்வு ருசிக்கும். முயன்று பாருங்களேன். தற்காலத்தில் பலரும் பிறந்த நாள் வாழ்த்து கூறும்போது மலர்க் கொத்து அன்பளிப்பு (flower bouquet gift) என்பதாக வாசனை உள்ள மலர்களையும் வாசனை இல்லாத மலர்களையும் சேர்த்து அளிக்கிறார்கள். இதனால் எந்த அளவு அந்த அன்பளிப்பில் வாசனை இல்லாத மலர்கள் சேர்கின்றனவோ அந்த அளவிற்கு அவர்களுடைய வாழ்க்கையும் பயனற்றுப் போய்விடும் என்பது உண்மையே. இதைத் தவிர்க்க மேற்கண்ட முறையில் நவகிரக மண்டலத்தையோ, நவகிரக சஞ்சார கோலத்தையோ தங்கள் இல்லங்களிலோ சிறப்பாக திருப்பராய்த்துறை திருத்தலத்தில் வரைந்து மேற்கூறிய வழிபாட்டில் பயன்படுத்திய ரோஜா, செம்பருத்தி போன்ற மலர்களை தேநீரில் போட்டு அளித்தலால் அது இத்தகைய “தங்கத் தானம்” வாழ்த்துரை பெறும் அன்பர்கள் வாழ்வை மலரச் செய்யும்.
| இடையினத்தில் இடையினம் |
குழந்தை பிறந்தவுடன் மருத்துவர் உட்பட அனைவரும் குழந்தையின் இடைப்பகுதியைப் பார்த்தே அது ஆண் அல்லது பெண் குழந்தை என்று கூறுகின்றனர். முற்காலத்தில் பெரியோர்கள், பாட்மொர்கள் கர்ப்பிணிப் பெண்கள் எந்தப் பக்கம் சாய்ந்த நடக்கிறார்களோ, எந்தக் கையை தரையில் ஊன்றி அமர்கிறார்களோ அல்லது எழுந்திருக்கிறார்களோ அதை வைத்து பிறக்கும் குந்தையைப் பற்றி தெரிவிப்பர். இதுவும் குழந்தைகளின் இடைப் பகுதியின் சஞ்சார சக்தியின் வியாகமே. இவ்வாறு தாருகா என்று சக்தியின் வெளிப்பாடாக தோன்றிய திருத்தலமே தாருகாவனம் என்று பெயர் பெற்ற திருப்பராய்த்துறை திருத்தலமாகும். பராய் சக்தி, பரளி சக்தி, தாருகா சக்தி என்ற மூன்று சக்திகள் பொலியும் திருத்தலத்தில் பராய் சக்தி நடு சக்தியாய்த் துலங்க, பரளி சக்தி இடை சக்தியாய் மிளிர தாருகா சக்தி ஆரண சக்தியாகத் திகழ்வதே திருப்பராய்த்துறை தலத்தின் சிறப்பாகும். விகாரி என்ற மூன்று எழுத்து வருடத்தில் இந்த மூன்று சக்திகளின் நடுமையமாகத் திகழும் ‘ர’ அட்சரத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பது பெரியோர்களின் விருப்பம் போலும். விகாரி இடையினத்தில் வல்லினம் நடுநாயகமாகத் திகழ ரகரம் இடையினத்தில் இடையினம் நடுநாயகமாகத் திகழ்வதே அதன் சிறப்பாகும்.

ஸ்ரீமுருகப் பெருமான் திருப்பராய்த்துறை
தாருகா சக்திகளைப் பற்றி ஓரளவாவது தெரிந்து கொண்டால்தான் சிவபெருமான் காளிக்கும் இடையே நடந்த நர்த்தன போட்டியைப் பற்றி நாம் அறிந்து கொள்ள முடியும். சிவபெருமான், காளி இவர்களில் யார் பெரியவர் அதாவது நடனத் திறமை உள்ளவர் என்று நிருபிப்பதற்காக இருவருக்கும் இடையே போட்டி நடந்தது அல்லவா ? அனைத்து அண்டங்களிலும் தூள் பறக்க, நெருப்புக் கோளங்கள் மின்ன, இடிகள் முழங்க பரனும் காளியும் நடனம் புரியத் தொடங்கினர். சிவனும் சக்தியுமே நடனமிடத் தொடங்கினால் அதில் எவர் சிறந்தவர் என்று எவரால் முடிவு கூற இயலும் ? திருப்பராய்த்துறையில் அருள்புரியும் அனல் பறக்கும் கோலத்தில் பொலியும் சிவபெருமான் காளி இவர்களின் முக பாவமே இதற்குச் சான்றாய் அமையும். யுகங்கள் கணக்கில் இருவர் நாட்டியமும் தொடர இதற்கு ஒரு முடிவைக் கொண்டு வர வேண்டும் என்ற காரணத்திற்காக சிவபெருமான் தன் வலது காலைத் தூக்கி ஊர்த்துவ தாண்டவம் என்ற தாண்டவத்தை ஆடத் தொடங்கவே பெண்ணாகிய காளி தேவி தான் அவ்வாறு நடனமாட முடியாது என்பதால் வெட்கித் தலை குனிந்து தன் தோல்வியை ஒப்புக் கொண்டாள். இது பொதுவாக நாம் புராணங்கள், தல புராணங்கள் வழியாக அறியும் செய்தி. ஆனால் சித்தர்களின் முடிவுதானே எதிலும் இறுதி முடிவைத் தெரிவிக்க வல்லது. சித்தர்களோ போட்டி என்று வந்து விட்டால் அதில் ஆண் என்ன பெண் என்ன, காலைத் தூக்கி ஆடுவதும் நடனத்தின் ஒரு கோலமாக இருப்பதால் இதை ஒதுக்கி, காளி தன் தோல்வியை ஒப்புக் கொண்டாள் என்பது கிடையாது. சிவபெருமான் தாருகா சக்தி என்ற சக்தியை பிரயோகம் செய்து விண்ணுக்கும் மண்ணிற்குமாக நிற்க அத்தகைய விஸ்வரூபத்தை சக்தியால் சிவனருளின்றி எடுக்க முடியாது என்பதால் காளி தேவி தன் தோல்வியை ஒப்புக் கொண்டாள் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஊர்த்துவ தாண்டவக் கோல இரகசியமாகும். இதுவே பிற்காலத்தில் ஆணிற்கு அடங்கியவள் பெண் என்றவாறாக சமுதாயத்தில் பரிமளித்தது. பெண் தத்துவத்தை உள்ளடக்கியதே ஆண் தத்துவம், ஆணுக்கு பெண் அடங்கியவள் என்ற தவறான பொருள் அறியாமையால் ஏற்பட்டதே. ஓங்காரம் என்னும் பிரணவத்தில் 1008 பீஜாட்சர சக்திகள் மறைந்துள்ளன. இவற்றில் அ, ஆ, உ என்ற மூன்று முக்கிய பீஜாட்சர சக்திகள் திருப்பராய்த்துறையில் மட்டுமே தோன்றின என்றால் இத்தலத்தின் மகிமையைப் பற்றி எப்படி மேலும் சிறப்பிக்க முடியும் ? பரளி, பராய், தாருகா என்ற வார்த்தைகளில் இடையில் இடையினமாய் தோன்றிய சக்திகளே இவையாகும். இந்த பீஜாட்சர சக்திகளை ஈர்க்கும் ஆயிரமாயிரம் வழிபாட்டு முறைகள் இருந்தாலும் இதில் சித்தர்கள் அளிக்கும் பராய் முருகனின் பாந்தவ வழிபாடே அனைத்திலும் எளிய முறை திகழ்கிறது.

தாருகா ஜோதி திருப்பராய்த்துறை
பிறை வடிவில் மருதாணி, தேங்காய் எண்ணெய், செம்பருத்தி என்ற மூன்று தைலங்களில் ஏதாவது ஒரு தைலத்தால் ஒன்பது தீபங்களை ஏற்றி அல்லது இந்த மூன்று தைலங்களில் ஒவ்வொரு தைலத்திற்கும் மூன்று தீபங்களை ஏற்றி கோபுர வடிவிலோ அல்லது பிறை வடிவிலோ அகல் தீபங்களை அமைத்து இத்தலத்திற்கு உரிய திருப்புகழ் பாடலை அல்லது ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத வடிவேலா போற்றி என்று ஓதி வழிபடுதல் நன்று. இந்த வழிபாட்டை திருப்பராய்த்துறை திருத்தலம் என்றில்லாது வள்ளி தேவயானை முருகப் பெருமானுடன் எழுந்தருளியிருக்கும் எல்லா திருத்தலங்களிலும் இயற்றி பயன்பெறலாம்.
கிர்லியன் படங்கள் மூலமாக மனித உடலில் பல வருடங்களுக்குப் பின் தோன்றக் கூடிய கட்டிகள், புற்று நோய் பற்றி தெளிவாக அறியலாம் என்று விஞ்ஞானம் கூறினாலும் இவற்றைத் தடுக்கும் முறைகளைப் பற்றி ஆன்மீகத்தில் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். இதற்கு உதவி செய்வதே திருத்தலங்களில் இறை மூர்த்திகளைக் கண்ணாடியில் தரிசனம் செய்யும் காட்சிகளாகும். இத்தகைய தரிசனங்களைப் பக்தர்கள் பெறுமளவிற்கு அவர்களுடைய சூட்சும தேகத்தைப் பற்றிய அறிவு விருத்தியாகும். வியாதிகள் அனைத்தும் முதலில் சூட்சும தேகத்தில் தோன்றுவதால் ஆரம்பத்திலேயே இந்த வியாதிகளைக் குணமாக்கவும் முடிந்தால் தடுத்து நிறுத்தவும் முடியும் அல்லவா ? திருப்பராய்த்துறையில் அபூர்வமாகப் பொலியும் பராய், பரளி, தாருகா என்ற மூன்று சக்திகளை இணைக்கும் வழிபாடாகவும் பிரணவ ஒலி என்ற ஓங்கார ஒலியின் சக்தியைப் பெறும் முறையாகவும் ஒரு வழிபாட்டை சித்தர்கள் அருளியுள்ளனர். மூவிதழ்ஜோதி வழிபாடு என்ற இந்த பிரார்த்தனையில் முதலில் ஸ்ரீபரளி விநாயகரை வணங்கி, திருக்கோயிலுக்குள் சென்று பராய் மரத்தை வணங்கி, பின்னர் முருகப் பெருமானையும் கோபுரங்களையும் தரிசனம் செய்து, பின்னர் திருக்கோவிலுக்குள் சென்று காளி தேவியையும் நர்த்தன சிவபெருமானையும் தரிசனம் செய்து, கண்ணாடியில் தெரியும் ஸ்ரீபசும்பொன் மயிலாம்பிகை தரிசனத்தைப் பெற்று பின்னர் அவரவர் விருப்பம் போல் மற்ற இறை மூர்த்திகளை தரிசனம் செய்து நிறைவாக இந்த தரிசனப் பலன்களை எல்லாம் ஸ்ரீதாருகாவனேஸ்வரரிடமோ அல்லது மூவிதழ் தாருகா ஜோதியிடமோ அர்ப்பணித்தலே மேற்கூறிய மூன்று இறை சக்திகளின் ஒலி ஒளிப் பரல்களை நம்முடைய தூல, சூட்சும, காரண சரீரங்கள் ஏற்கும் வழிபாட்டு முறையாகும்.
| ஸ்ரீதிரைலிங்க மகாத்மியம் |
ஸ்ரீதிரைலிங்க சுவாமிகள் அல்லது பெருவாரியான மக்களால் ஸ்ரீத்ரைலிங்க சுவாமிகள் என்று அழைக்கப்பட்ட பெருந்தகை பராய், பரளி, தாருகா என்ற ஜோதி ஐக்யத்தில் பொலிந்த மகான் ஆவார். தற்போது இந்த மகானை நாம் நம் தூலக் கண்ணால் காணும் சக்தி பெறாவிட்டாலும் இப்பெருமானின் அனுகிரகத்தைப் பெறும் தான முறையை சித்தர்கள் வகுத்துத் தந்துள்ளனர். உய்யக்கொண்டான் மலையில் அருள்புரியும் ஸ்ரீஉஜ்ஜீவநாதர் இத்தகைய மூன்று ஜீவ சக்திகளால் உருவான மூர்த்தியே என்பதால் ஸ்ரீஉஜ்ஜீவநாதருக்கு ஆவின்பால், ஆட்டின் பால், ஒட்டகப்பால் அல்லது கழுதைப் பால் என்ற இந்த மூன்று பாலும் கலந்த உஜ்ஜீவ க்ஷீர கலவையால் அபிஷேகித்தல் என்பது எந்த கொடுமையான வியாதிக்கும் ஒரு பரிகாரமாக அமைகிறது.

ஸ்ரீஉஜ்ஜீவநாதர் உய்யக்கொண்டான்மலை
கழுதைப் பால் அல்லது ஒட்டகப் பாலை அதன் சூடு ஆறும் முன் பெற முடியாத சந்தர்ப்பங்களில் அந்தப் பால் பவுடரை மற்ற இரண்டு பாலுடன் கலந்து அபிஷேகம் இயற்றுவதும் ஏற்புடையதே. ஸ்ரீதிரைலிங்க சுவாமிகள் தன்னுடைய உடல் மூன்று சிவலிங்கங்கள் மீது தவழும்படியாக அமைத்துக் கொண்டு தவம் புரிவதை அக்காலத்தில் பல பக்தர்களும் பார்த்து இரசித்திருக்கின்றனர். இவ்வாறு தன் தூல, சூக்கும, காரண சரீரங்களால் இறைவனுடன் ஒன்றிப் பிரார்த்தனை செய்யும் காட்சியே இது. அது மட்டுமல்லாமல் ஸ்ரீதிரைலிங்க சுவாமிகள் இயற்றிய பூஜை மற்றவர்களுடைய தூலக் கண்களால் பார்க்க முடியாதபடி அந்த திவ்ய காட்சி திரை போட்டு மறைந்தது போல், மறைத்ததுபோல் பலருக்கும் தோன்றியதால் சுவாமிகளுடைய 300 வருடத்திற்கும் மேற்பட்ட ஆன்மீக பூஜைகள் அவரை திரை லிங்க சுவாமிகளாக மாற்றின. வியாதிகள் என்பவை இந்த மூன்று சரீரங்களில் ஏதாவது ஒன்றில்தானே முதலில் நிலைகொள்ள முடியும். இந்த மூன்று சரீரங்களும் இந்த பால் அபிஷேகத்தால் தூய்மை அடையும் என்பதால் ஸ்ரீஉஜ்ஜீவநாதருக்கு நிறைவேற்றும் அபிஷேகம் அனைத்து வியாதிகளையும் தீர்க்கும் நோய் நிவாரண சக்தியுடன் அமைகிறது. எதிர்காலத்தில் தோன்றப் போகும் பல வியாதிகளுக்கு இத்தகைய நிகழ்கால த்ரிக்ஷீர அமிர்த அபிஷேகம் மருந்தாய் அமைந்து வியாதி என்பது ஒரு கடந்த கால நினைவாக மாறும் என்பது இந்த அபிஷேகத்தின் மகிமையே. இவ்வாறு த்ரிக்ஷீர அபிஷேகத்தை நிறைவேற்ற முடியாதவர்கள் பசும்பாலில் மூன்று துத்திப் பூக்களைப் போட்டுக் காய்ச்சி அதில் டைமண்ட் கற்கண்டு சேர்த்து தானமளித்தலும் பல தீராத வியாதிகளுக்கு மருந்தாய் அமையும். மலைக் குன்றின் மேல் அமைந்துள்ளதால் சுவாமி, அம்பாள், முருகன் என எல்லா சன்னதிகளும் பல படித்தரங்களில், உயரத்தில் அமைந்துள்ளதாக பலரும் எண்ணுவர். உண்மையில் மனிதனுக்கு உள்ள ஒன்பது சரீரங்களின் பிரிவே இவ்வாறு ஒன்பது நிலைகளாக மாறி நிலைபெற்றுள்னன என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும். இத்தகைய திருத்தலம் பிரபஞ்சத்தில் இது ஒன்றே என்பதும் இதன் மகிமையை பலப் படித்தரங்களில் உணர்த்துவதாகும். கற்குடி என்பது இத்தலத்தின் தேவாரப் பெயராக அமைந்துள்ளது. கற்குடி என்பது இறைவன் குன்றின் மேல் எழுந்தருளி உள்ளான் என்ற மேலோட்டமான பொருளைக் கொண்டாலும் பாறையில் எழுதிய அட்சரம் போல் பக்தன் இதயத்தில் நிரந்தரமாக பொறிக்கப்பட வேண்டியவரே ஸ்ரீகற்குடிநாத சுயம்பு மூர்த்தி என்று பறைசாற்றுவதே உஜ்ஜீவ நாதர் திருத்தலமாகும். இது மூன்று ஜீவ சக்திகள் ஐக்கியமாகி பொலியும் தலம் என்பதாலும் நம் சற்குரு மூன்று எண் சக்திகள் கொண்ட 30ந் தேதி இத்தலத்தில் உழவாரப் பணி நிறைவேற்றி ஜீவ சக்திகளை, நவ ஜீவ சக்திகளை புனருத்தாரணம் செய்தார் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய குரு மகாத்மியமாகும். இவ்வாறு மனிதனுக்கு அமைந்துள்ள ஒன்பது சரீரங்களின் தன்மையை அறிந்து கொண்டு அந்த சரீரங்களை வியாதிகளிலிருந்து காத்துக் கொள்ள நினைக்கும் மனிதன் குரு வாரமாகிய வியாழக் கிழமையில் குரு ஹோரை நேரத்தில் குரு காயத்ரீ அல்லது பிரஹஸ்பதி காயத்ரீயை வாய் விட்டோ மனதிற்குள்ளோ ஓதுவதை இத்தலத்தில் ஆரம்பித்து அதை தொடர்ந்து கடைப்பிடித்தல் நலமே. இதனால் தங்களுடைய வியாதிகளுக்கு நிவாரணம் காண்பதுடன் அத்தகையோர் பிறர் நோய்களைத் தீர்க்கும் ஔஷத சக்தியையும் பெறுவர் என்பது திண்ணமே.
பக்தர்கள் அவரவருக்குப் பிடித்த, பரிச்சயமான காயத்ரீ மந்திரங்களை ஓதி பயன்பெறலாம் என்றாலும் ரோக நிவர்த்திக்காக சற்குருவால் அளிக்கப்பட்ட கீழ்க்கண்ட காயத்ரீ மந்திரங்களை ஓதுவதும் சிறப்புடையதே.
ஓம் தத் புருஷாய வித்மஹே
ஔஷத புருஷாய தீமஹி
தந்நோ பாஸ்கர ப்ரசோதயாத்
ஓம் தத் புருஷாய வித்மஹே
சீதள ரூபாய தீமஹி
தந்நோ சந்திர தேவி ப்ரசோதயாத்

அரிதிலும் அரிய
கற்குடி உஜ்ஜீவ துத்தி
ஓம் தத் புருஷாய வித்மஹே
ரோகநிவர்த்திகராய தீமஹி
தந்நோ மங்கள தேவ ப்ரசோதயாத்
ஓம் தத் புருஷாய வித்மஹே
குசாஜோதி பிரசாதாய தீமஹி
தந்நோ புதபகவான் ப்ரசோதயாத்
ஓம் தத் புருஷாய வித்மஹே
குருமங்கள குரு தேவாய தீமஹி
தந்நோ ப்ரஹஸ்பதி ப்ரசோதயாத்
ஓம் தத் புருஷாய வித்மஹே
சுக்ராத்மனே தீமஹி
தந்நோ பார்கவ ப்ரசோதயாத்
ஓம் தத் புருஷாய வித்மஹே
ஆயுள் ஔஷத பிரசாதாய தீமஹி
தந்நோ சனீஸ்வர ப்ரசோதயாத்
ஓம் தத் புருஷாய வித்மஹே
மகா தேவாய தீமஹி
தந்நோ ராகுகணபதி ப்ரசோதயாத்
ஓம் தத் புருஷாய வித்மஹே
மகாதேவாய தீமஹி
தந்நோ கேதுகணபதி ப்ரசோதயாத்
ஞாபக சக்தி என்பது விலை மதிப்பில்லாத பொக்கிஷமே. இத்தகைய பொக்கிஷத்தின் அருமை முக்கியமான சமயத்தில்தான் தெரியவரும். உதாரணமாக திருமணத்தின்போது மாங்கல்ய தாரணத்திற்காக உள்ள மாங்கல்யத்தை மறந்து விட்டால் அது எப்படி இருக்கும் ? இது ஏதோ கற்பனை அல்ல. உண்மையாக நடந்த ஒரு நிகழ்ச்சியே. சதாபிஷேகம் நிறைவேற்றும் தம்பதிகள் இவ்வாறு உய்யக்கொண்டான் மலையை அடைந்தபோது அவர்கள் திருமாங்கல்யத்தையே மறந்து விட்டு வந்து விட்டார்கள் என்பது தெரிய வந்தது. மீண்டும் திருமண மண்டபத்திற்கு சென்று மாங்கல்யத்தை எடுத்து வருவதற்குள் சற்குரு குறித்துக் கொடுத்த முகூர்த்த நேரம் தவறி விடும் என்பதால் அங்கிருந்த ஒரு மஞ்சள் கிழங்கையே மாங்கல்யமாக பாவித்து மாங்கல்ய தாரண வைபவத்தை நிறைவேற்றினர் அத்தம்பதிகள். இவ்வாறு பல முக்கியமான தருணங்களில் ஞாபக மறதியால் விளையும் பல கொடிய விளைவுகளைக் களைவதற்காக அன்று மார்க்கண்டேய துத்தி என்ற ஞாபக சக்திகளை நம் சற்குரு நிரவிய இடமும் உஜ்ஜீவ நாதர் திருத்தலமாகும். இவ்வாறு ஞாபக சக்தியால் அவதியுறும் பக்தர்கள், ஞாபக சக்தியால் தங்கள் இல்லத்தில் அலுவலகத்தில் துன்பம் அடையாமல் இருக்க விரும்புபவர்கள் இவ்வாறு துத்தி மலர், டைமண்ட் கல்கண்டு சேர்த்த பசும்பாலை உஜ்ஜீவ நாதர் திருத்தலத்தில் தானமளித்தல் சிறப்பாகும். கற்குடியில் பொலியும் துத்தி மலர்களை தரிசனம் செய்து தங்கள் ஞாபக சக்தியை விருத்தி செய்து கொள்ளலாமே தவிர இம்மலர்களை வேறு இடங்களிலிருந்தோ கடைகளிலிருந்தோ பெற வேண்டும் என்பதை பக்தர்கள் கவனத்தில் கொள்ளவும்.
ஓம் குருவே சரணம்