Ashram Title
 
நல்லதே நடக்கட்டும் ! மங்களம் பொங்கட்டும் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

பேரையூர்
மேலப்பரங்கிரி
துணை மறவா நெஞ்சம் பூண்ட நம் சற்குரு
நிலாபுரந்தர வாசுமாமுனி ஜோதி

நிகழும் ஸ்வஸ்தி ஸ்ரீகுரோதி வருடம், கார்த்திகை மாதம் 28, 13-12-2024, வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு 1001வது குருமஹா சன்னிதானம் சக்தி ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அடிமையும், அகஸ்திய குல தீபிகையும், திருஅண்ணாமலையில் உள்ள ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தின் ஸ்தாபகருமான சற்குரு ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகளின் கனிந்த குருவருளாலும், உலகத்தோர் அனைவருக்கும் மேலபரங்கிரிமலையில் வீற்றிருந்து அருள்பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வர சுவாமியின் கருணைமிக்க திருவருளாலும் மேலபரங்கிரியில் திருக்கார்த்திகை மகாதீப திருவிழா துவங்குகிறது. இந்த தீபத் திருவிழா 13-12-2024, 14-12-2024, 15-12-2024 என தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த மூன்று நாட்களும் உலகத்தார் உய்யும் பொருட்டு நடைபெற இருக்கும் மகாதீப திருவிழாவை “நிலாபுரந்தர வாசுமாமுனி ஜோதி” என்றும், மகாதீப திருவிழாவை தலைமையேற்று நடத்துப்பவர் நிலாபுரந்தர வாசுமாமுனி என்னும் சித்தர் பிரான் என்று சற்குரு கூறியுள்ளார். இங்கு நாம் கூறும் மேலபரங்கிரி என்னும் ஊர் தற்போது பேரையூர் என்ற பெயரில் மதுரை - T.கல்லுப்பட்டி – பேரையூர் தடத்தில் அமைந்துள்ளது. அடியார்கள், பக்த கோடிகள், மதுரை – திருமங்கலம் வழியாகவும் T.கல்லுப்பட்டி – பேரையூரை அடையலாம்.

நிலாபுரந்தர வாசுமாமுனி

நிலாமாசு நீக்கும் நிலாபுரந்தர வாசுமாமுனிச் சித்தர்!

நிலாபுரந்தர வாசுமாமுனி என்னும் அதிஅற்புத சித்புருஷர் பல யுகங்களுக்கு முன்னால் திருஅண்ணாமலையில் கிரிவலப்பாதையில் வாழ்ந்து மக்களுக்கு நல்வழிகாட்டி வந்தவர். இன்றைக்கும் என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாய் அருள்பாலித்தும் வருபவர், இவருடைய மகிமையை இன்றும் பலர் அறியார், திண்டுக்கல் அருகே கசவனம்பட்டி ஸ்வாமிகளாக, அவதூதராக சமீபகாலத்தில் அருள்பாலித்த அற்புத சித்தரும் உண்டு. தன்னுடைய பூத உடலை விடுத்தாலும் கூட இன்றைக்கும் எத்தனையோ கோடி லோகங்களில் இறைவன் அளித்த புதுப்புது நாமத்திலேயே/பெயர்களிலேயே தன்னுடைய சித்தாமிர்த இறை வழிமுறைகளை நடத்திக்கொண்டு இருக்கின்றனர். இறைவனின் அருட்தூதுவராக வந்த பூண்டி மகான் ஸ்வாமிகள் தன்னுடைய பூத உடலைச் சட்டை போல் கழற்றி வைத்தாலும் கூட இன்றும் என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாய் அருள்பாலித்துக் கொண்டுதான் இருக்கின்றார்.

நம்முடைய பூலோகம் போன்று இருக்கின்ற எத்தனையோ கோடி.பூமிகளில் இத்தகைய சித்புருஷர்களின் அருளாட்சி இன்றும் நடந்து கொண்டுதான் வருகின்றது, நதி தேவதைகளெல்லாம் சர்வேஸ்வரனிடம் “ஸ்வாமி, பலரும் எங்களுடைய ஜீவநதிகளில் நீராடுவதால் அவர்களுடைய பாவங்களைப் போக்கிக்கொள்கின்றனர்.

ஆனால் நாங்களோ அந்தப் பாவங்களை ஏற்று மாசடைகின்றோம். அதைத் தீர்ப்பதற்காக எங்களுக்கு நல்வழி காட்ட வேண்டும்”, என்று வேண்டி மக்களுடைய கர்மச்சுமைகளை ஏற்பதால் தமக்கு ஏற்படுகின்ற மாசினைக்களைவதற்காகப் பல தெய்வீக பூஜை முறைகளை மேற்கொண்டார்கள் அல்லவா?

இதே போலத்தான் சந்திர பகவானும் கோடிக்கணக்கான லோகங்களில் எத்தனையோ ஜீவன்கள் தம்முடைய அருட்கிரணங்களைக் கண்டு, தரிசித்துக் கொண்டு உயிர் வாழ்வதால் இரவிலும் தம்மைக் காண்பதாலும் ஜீவன்களுடைய இரவு நேரக் கர்மவினைகளுக்குத் தான் சாட்சியாக இருப்பதாலும் தன் மேல் படியும் மாசினைக் களைவதற்காக ஸ்ரீசந்திரமௌளீஸ்வர சுவாமியிடம் பிரார்த்தனை செய்து கொண்டார். “ஸ்வாமி! பிரபஞ்சம் எங்கும் உள்ள கோடானு கோடி லோகங்களில் பௌர்ணமி திதியன்று அனைத்துக் கோடி ஜீவன்களும் அடியேனைக் காண்பதால் அவர்களுடைய மனதிலும், உள்ளத்திலும் உள்ள தீய, அசத்திய சக்திகள் என் மீது படிகின்றன, இவற்றை நீக்குவதற்குத் தாங்கள்தான் பூஜை முறைகளைக் தந்தருள வேண்டும்”என்று வேண்டி நின்றார்.

சர்வேஸ்வரனும், “சந்திரா, நீ கேட்கும் முன்னரே கொடுப்பது தானே இறைலீலை! உன்னுடைய பிரார்த்தனை நிறைவேறுவதற்காகப் பல கோடி யுகங்களாக லோகத்தில் ஒரு சித்புருஷர் தவம் பூண்டிருக்கின்றார். அவரை நீ தரிசித்துத் தெளிவு பெறுவாயாக”, என்று கூறி சந்திர பகவானை பூலோகத்திற்கு அனுப்பினார்! ஆம், ஒவ்வொரு சித்புருஷரும் ஓர் அற்புதமான இறைப்பணியை ஏற்றுக்கொண்டு அதை நிறைவேற்றுகின்ற போது ஏற்படுகின்ற துன்பங்களையும், தடங்கல்களையும் சகித்துக் கொண்டு தமக்கிட்ட இறைப்பணியைச் செவ்வனே செய்கின்றார். இவ்வாறு தான் நிலாபுரந்தர வாசுமாமுனி திருஅண்ணாமலையிலே கிரிவலப்பாதையிலே அமர்ந்து சோமமௌளீஸ்வர யோகத்தில் திளைத்தார், பௌர்ணமி திதிகளில் சந்திரனுடைய அருட்கிரணங்கள் திருஅண்ணாமலையின் மேல் படிவதால் அந்தச் சந்திரனுடைய கிரணங்கள் தூயதாக இருக்க வேண்டும். எம்பெருமானுடைய திருமேனியில் மாசுபட்ட சந்திர கிரணங்கள் படிதல் கூடாது, பௌர்ணமி திதியன்று பூலோகம் மட்டுமன்றி எத்தனையோ கோடி லோகங்களிலிருந்து பலரும் சந்திரபகவானை தரிசிப்பதால் சந்திரமண்டலத்தில் ஏற்படுகின்ற மாசுபட்ட கிரணங்களை எல்லாம் தன்னுள் ஈர்த்துச் சந்திரமதி மண்டலத்தினைத் தூய்மை செய்து நன்முறையில் பூலோகத்திற்குச் சந்திர அருட்கிரணங்களை அனுப்ப வேண்டும் என்பதற்காக இந்த நிலாபுரந்தர வாசுமாமுனிச் சித்தர் என்பவர் இதுவரை யாருமே கடைபிடிக்காத புதுமையான யோகமுறைக்கு இறையருளால் தம் குருவின் ஆணைப்படித் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். இவ்வாறு இவர் கடைபிடித்த சுழல் கிரிவலமுறைதான் ஆத்மப்பிரதட்சிண கிரிவலமுறை எனப்படும் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு ஆத்மப்பிரதட்சிணமாக திருஅண்ணாமலையினை கிரிவலம் வருவதலாகும்.

அருணை உலா வந்து நிலாமாசு நீக்கு!
பலாதிபலா சிவவாக்கு!

இவ்வாறு பல கோடியுகங்களாக நிலாபுரந்தர வாசுமாமுனிச் சித்தர் சுழல்கிரிவலமுறையில் கிரிவலம் வந்தமையால் அவருடைய உள்ளக்கிடக்கையை உணர்ந்து இத்தகைய அருட்பெரும் தவத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள சித்புருஷருக்கு அருள்பலம் கூட்ட வேண்டும் என்பதற்காக ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத திருஅண்ணாமலையாராய்க் காட்சி தந்து “பௌர்ணமி தோறும் நீ சந்திரனை தரிசிக்கும் போது உன்னுடைய அதிஅற்புத நேத்திர சக்தியால் சந்திர மண்டலத்தில் படிகின்ற மாசுகள் அகலும், நீயும் நிலாபுரந்தர வாசுமாமுனி என்ற அருட்பட்டத்தைப் பெறுவாய்”, என்று கூறி அருள்பாலித்தார். இவ்வாறாக நிலாபுரந்தர வாசுமாமுனி அமர்ந்து யோகாக்னி தவம் பூண்ட இடமே இன்றைக்கும் திருஅண்ணாமலை கிரிவலப்பாதையில் அடிஅண்ணாமலைப்பகுதியில் ஒரு சிறு பாலத்தின் மேடாக அமைந்திருக்கின்றது, யோகியர்களும், சித்புருஷர்களும் அமர்ந்து அதற்கு மெருகு கூட்டியுள்ளனர். இன்றைக்கும் இவ்விடத்தில் தான் நிலாபுரந்தர வாசுமாமுனி சூட்சுமமாக மௌலீஸ்வர யோகாக்னி பயின்று பௌர்ணமி திதி தோறும் சந்திரனை நேத்ர தரிசனம் செய்து சந்திர கிரணங்களில் படிகின்ற மாசுகளை அகற்றிப் புனிதமாக்கி, நிலாமூர்த்தியின் புனிதமான அருட்கிரணங்கள் திருஅண்ணாமலையின் மேல் தோயுமாறு இறையோகம் பயில்கின்றார், இது பல கோடியுகங்களாகத் திருஅண்ணாமலையில் நிகழ்ந்து வருகின்ற அதி அற்புத இறைலீலை!

இவ்வாறாக எத்தனை யோசித்புருஷர்களும், துறவியர்களும், யோகியர்களும், முமூட்சுக்களும், முனிபுங்கவர்களும் திருஅண்ணாமலையில் வாழ்ந்து மக்களுக்கு வழிகாட்டி வருகின்றனர். இன்று லட்சாதிலட்சம் மக்கள் திருஅண்ணாமலையில் கிரிவலம் வருதற்கு தெய்வீக வித்திட்டவர்கள் இவர்களே, எனவே இவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து கிரிவலத்தைத் தொடங்கி நன்றி தெரிவித்து முடிப்பது தான் சிறப்புடையதாகும். ஆஞ்சநேயருடைய அன்னையான அஞ்சனாதேவி சுழல் வல கிரிவல முறையில் தன்னைத்தானே ஆத்மப்பிரதட்சிணம் செய்து கொண்டே கிரிவலம் வந்த போது அடிஅண்ணாமலை அருகில் அக்னிமேட்டுப் பகுதியில் தவம் பூண்டிருந்த நிலாபுரந்தர வாசுமாமுனியின் தரிசனத்தைப் பெற்று அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கி ஆசிகளைப் பெற்றாள். ஆஞ்சநேயருடைய அவதாரத்திற்கு முன்னரே திருஅண்ணாமலையில் யோகம் பயின்றார் என்றால் நிலாபுரந்தர வாசுமாமுனியின் தேவ ஆயுளை எவ்வாறு நீங்கள் கணக்கிடுவீர்கள்.இன்றைக்கும் திரு அண்ணாமலையில் சூட்சுமமாயும் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சித்புருஷர்! நிலாபுரந்தர வாசுமாமுனி சித்தரைப் பற்றி நமக்கு சித்தர்களுடைய ஞான பத்ர கிரந்தங்களிலிருந்து எடுத்துரைத்த நம் சிவகுருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகளுக்கும், அவருடைய குருவாய்மொழிகளைத் தொகுத்து ஸ்ரீஅகஸ்திய விஜயம் மூலம் அருள்மழை பொழிந்து வருகின்ற நம் குருமங்களகந்தர்வா அவர்களுக்கும் நம்முடைய அன்புக் காணிக்கையைச் செலுத்துவோமாக!

நிலாபுரந்தர வாசுமாமுனி ஜோதி வகைகள்

2024ம் ஆண்டு கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமை வரக்கூடிய இந்த “நிலாபுரந்தர வாசுமாமுனி ஜோதி”யைத் தரிசிக்கும் போது ஜோதியின் இருபக்கங்களிலும் நான்கு தந்தங்களுடன் கூடிய வெள்ளை யானை இருப்பதாய் மனதில் எண்ணி தரிசித்தல் சிறப்பானதாகும்.

நாம் மூன்று நாட்கள் இந்த தீபத்தினை ஏற்றுகின்றோம். இதில்

முதல் நாள் தீபமானது அனைத்து ஆண்களுக்குமான கர்மவினைகளைத் தீர்க்கின்றது. ஆண் என்றால் மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகள், மரங்கள், பறவைகள் என அனைத்து ஜீவன்களுக்கும் பொருந்தும்.

இரண்டாம் நாள் தீபமானது பெண்களுக்கும்,

மூன்றாம் நாள் தீபமானது உயிரற்ற ஜடப்பொருட்கள், கடவுள் நம்பிக்கை அற்றவர்களின் கர்மவினைகளையும் களையும். இதில் நான்தான் கடவுள் என்பவர்களின் கர்மவினைகள் நீங்காது என்கிறார் நம் சற்குரு.

நிலாபுரந்தர வாசுமாமுனியின் திருக்கார்த்திகை ஜோதி திருப்பணி

திருஅண்ணாமலையில் ஏற்றப்படும் தீபத்தில் இருந்து வெளி வரும் கிரணங்களை அக்னி லோகத்து தேவதைகள் மேலபரங்கிரியில் ஏற்றப்படும் தீபத்தின் வாயிலாக பெற்று அதை ஸ்ரீமல்லிகர்ஜுனேஸ்வர சுவாமிக்கு அபிஷேகம் செய்து பின் ஸ்ரீமல்லிகர்ஜுனேஸ்வர சுவாமியால் அளிக்கப்பெறும் இறைபிரசாதமான பூஜ்ய சக்திகளோடு சேர்த்து மேலபரங்கிரிக்கு மேலுள்ள திருநட்சத்திர மண்டலங்களுக்கு எடுத்து சென்று இறுதியாக திருநட்சத்திர மண்டலங்களில் இருந்து நாம் வாழும் இந்த பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் வந்தடைகின்றது. குருவருளாலும், திருவருளாலும் மேலபரங்கிரியில் மூன்று நாட்கள் நிகழும் மகாதீப திருவிழாவிற்கு நிலாபுரந்தர வாசுமாமுனியின் பங்களிப்பு எவ்வகையில் நடைபெறுகிறது என்பதை அடியார்கள் ஆத்ம விசாரம் செய்து தெரிந்து கொள்வதால் குடகு சம்பந்தமான இறை லீலையை அறிந்து கொள்ளலாம்.

நிலாபுரந்தர வாசுமாமுனி ஜோதி பூரண வழிபாடு

நிலாபுரந்தர வாசுமாமுனி ஜோதி வழிபாட்டை பூரணமாக கடைபிடிக்க விரும்பும் அடியார்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள வரிசையின் படி தரிசனம் செய்வது சிறப்பு.

நிலாபுரந்தர வாசுமாமுனி ஜோதி பூரண அன்னதானம்

தன் வாழ்வின் இறுதி மூச்சு வரை அன்னதானமே பிரதானம் என்று பலருக்கு நல் உதாரணமாக, வழிகாட்டியாக வாழ்ந்த சற்குருவின் வழி பற்றி மேலபரங்கிரியில் நடைபெறும் மூன்று நாள் மகாதீப திருவிழாவில் அடியார்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவு பொருட்களை தானம் செய்வது சிறப்பு.

பரங்கிரி தர்ப்பணம்

பொதுவாக திதி தர்ப்பணம், போதாயன தர்ப்பணம், ஷண்ணாவதி தர்ப்பணம், பிந்து தர்ப்பணங்கள் போன்றவை காலத்தை ஒட்டிய பூஜை முறைகள். நிலாபுரந்தர வாசுமாமுனி மகாதீப திருவிழாவிற்காக அடியார்கள்

மகாதீப கொப்பரையில் கலந்துதீபம் ஏற்றுவதை சற்குரு “பரங்கிரி தர்ப்பணம்” என்று கூறுகின்றார். இவ்வாறு மகாதீப திருவிழா பரங்கிரி தர்ப்பண கைங்கரியத்தில் பங்கு கொள்ள முடியாத அடியார்கள் புண்ணிய நதிகளின் அல்லது திருக்கோவில் தீர்த்தம் விட்டு சந்தனம் அரைத்து 108 சந்தன பில்லைகள் தயார் செய்து, வெயிலில் காய வைத்து மேலபரங்கிரி மல்லிகார்ஜுன சுவாமிக்கு அர்ச்சனை செய்து மல்லிகார்ஜுன சுவாமியின் பிரசாதமாக மூன்று சந்தன பில்லைகள் மட்டும் எடுத்து கொள்ளலாம். சத்சங்கமாக பல அடியார்கள் சேர்ந்து இந்த திருப்பணியை செய்தாலும் மூன்று சந்தன பில்லைகளை மட்டுமே எடுத்து கொள்ளலாம். இவ்வாறு கிடைத்த சுவாமி பிரசாதமான மூன்று சந்தன பில்லைகளை தாராளமாக நெற்றிக்கு இட்டு கொள்ளலாம். சில அடியார்களின் குடும்பம், சொந்தத்தில் அதிக நபர் இருக்கும் பட்சத்தில் சுவாமி பிரசாதமான 3 சந்தன பில்லைகளை நீரில் கலந்து அவரவர் வீடு முழுவதும் தெளித்து அனைவருக்கும் இந்த இறை பிரசாதத்தை பகிர்ந்து அளிக்கலாம்.

விஸ்தார ஜீவ ஒடுக்கம்

ஜீவசமாதியில் பலவகைகள் உண்டு. அதில் அத்வைத ஜீவசமாதியே மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அத்வைதம் என்பதற்கு பலரும் பல வித விளக்கங்களைக் கொடுத்துள்ளனர். அதில் நம் சற்குரு கொடுக்கும் விளக்கம் சிறப்பானதாகும். நீ எங்கிருந்து வந்தாயோ அங்கே செல்வதே அத்வைதம் என்கிறார் நம் சற்குரு. இவ்வாறு அமைந்த ஜீவசமாதியே திண்டுக்கல் அருகில் உள்ள தவசிமடையில் அமைந்திருக்கும் ஸ்ரீபரத்வாஜரின் ஜீவசமாதியாகும். சமாதி நிலையில் பாவ சமாதி, நிர்விகல்ப சமாதி என பலவகைகள் உண்டு. இதில் பரத்வாஜரின் சமாதி, “விஸ்தார ஜீவ ஒடுக்கம்” என்று அழைக்கப்படுகின்றது. விஸ்தார ஜீவ ஒடுக்கம் என்ற நிலை மிகவும் அற்புதமான சமாதி நிலையாகும். இத்தகைய அற்புதமான சமாதி நிலையில் நிலைத்திருப்பவர் ஸ்ரீபரத்வாஜர் மட்டுமே ஆவார். இத்தகைய விஸ்தார ஜீவ ஒடுக்க சமாதி நிலைக்கு முந்தைய சமாதி நிலை ஒன்று உண்டு. அதனை குடகுசமாதி நிலை என்று அழைப்பர். அத்தகைய குடகு சமாதி நிலைக்கு உறுதுணையாய் நிற்பதுவே இந்த நிலாபுரந்தர வாசுமாமுனி ஜோதி தீப வழிபாட்டு முறைகள் ஆகும்.

குடகு சமாதி

மழை நீரை குடகு நீர் என்றும் அழைப்பர். குடகு என்பதனை மாற்றி எழுதினாலும் “குடகு” என்ற பெயரே நிலைக்கும். குடகு நீர் எவ்வாறு எங்கிருந்தோ வந்து மீண்டும் அதே இடத்தைச் சென்று அடைகிறதோ அவ்வாறு நாமும் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே ஐக்கியம் ஆவதற்கு உதவுவதே இந்த தீப வழிபாட்டு முறைகள் ஆகும். நாம் 27 நட்சத்திரங்கள் பற்றியும் அவரவர் பிறந்த நட்சத்திரத்தைப் பற்றியும் அறிவோம். ஆனால் ஒரே நட்சத்திரத்தில் பிறந்த இருவர் ஒரே விதமான குணாதிசயங்களைப் பெற்று இருப்பதில்லையே? ஏன்? ஏனென்றால் நட்சத்திரங்கள் என்பவை தொலைபேசி எண்ணிற்கு முன்னே கொடுக்கப்படும் STD code போன்றவையே. ஒவ்வொரு நட்சத்திரத்திற்குப் பின்னும் பல்லாயிரக்கணக்கான நட்சத்திர லோகங்கள் உண்டு. இதில் நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை சற்குரு மட்டுமே அறியவல்லவர். அதற்கு வழித்துணையாய் இருப்பதுவே இந்த குடகுநீர் கொண்டு ஆற்றப்படும் வழிபாடாகும். நாம் சேகரிக்கும் குடகு நீரில் நாம் எங்கிருந்து வந்தோமோ அந்த நட்சத்திர லோகத்தின் ஆசி இருந்தால்தான் நாம் “குடகு சமாதி” நிலைக்கான வழியை அடைய முடியும். குடகு என்பது சற்குருவை காட்டும் மூன்றெழுத்து, எனவே முழுக்க முழுக்க சற்குருவின் திருவருளால் மட்டும்தான் நாம் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே ஐக்கியம் ஆகும் உத்தம அத்வைத நிலையை காட்ட முடியும். அதனால் சற்குருவினை மனதார வழிபட்டு இந்த வழிபாட்டினைச் செய்வோம். சற்குரு அதற்கு உறுதுணையாய் நிற்பார். குடகு (Coorg) மலையில் இருந்து உற்பத்தி ஆவது புண்ணிய நதியான காவிரி. குடகு என்னும் குருவினை குறிக்கும் மூன்றாம் எண், காவிரி என்னும் நதியின் பெயரை கூட்டினால் குருவினை குறிக்கும் மூன்று எண் வருவது நமக்கு சற்குரு அளித்த பாக்கியமே.

நாம் எந்த அளவிற்கு ஈடுபாட்டோடு இந்த தீபவழிபாட்டைச் செய்கின்றோமோ அந்த அளவிற்கு நாம் ஏற்றக்கூடிய இந்த தீபசக்திகளை நம்முடைய நட்சத்திர லோகங்களுக்கும் நிலாபுரந்தர வாசுமாமுனிவர் பரவச் செய்கின்றார்.

குடகு நாகங்கள்

மிருத்யு சம்பந்தப்பட்ட நாகதோஷங்களை நிவர்த்தி செய்யக் கூடிய தலங்கள் ஒன்றிரண்டு தான் உள்ளன. அதிலும் குடகு நாகங்கள் என்கின்ற சில வகை நாகங்கள்தாம், பல விதமான கொடிய நாகதோஷங்களைத் தீர்க்க வல்லவையாகும்! ஆம், எவ்வாறு நாகத்தின் பல்லிலிருந்து எடுக்கப் படுகின்ற விஷமானது பாம்புகடிக்கு மருந்தாக அமைகின்றதோ, அதே போல சிலவகையான நாகதோஷங்களுக்குச் சிலவகை நாக தேவதைகளின் ஆசிகள்தாம் தக்கப் பரிகாரங்களைத் தர முடியும். ஸ்ரீகருட மூர்த்தியே இங்கு வகுளமலையாக, பெருமாளின் வாகனமாக வீற்றிருப்பதால் ஈஸ்வரனின் திருக்கழுத்தை அலங்கரிக்கின்ற பல விதமான குடகு நாகதேவமூர்த்திகளே இங்கு வந்து தரிசிப்போர்க்கு சூட்சும ஜோதியாய் நாகதோஷங்களை நிவர்த்தி செய்கின்றார்கள். நாகதேவதைகளே முன் வந்து நாக தோஷங்களைத் தீர்க்கின்ற ஒரு சில அபூர்வத் தலங்களில் கருங்குளம் வகுளகிரியும் ஒன்றாகும்.

ஏனென்றால், இப்புனித பூமிக்கு அத்தகைய தெய்வீக சக்தி நிறைய உண்டு. Inferiority Complex என்று சொல்லப்படுகின்ற தாழ்வு மனப்பான்மை இன்று உலகில் பலருக்கும் இருந்து வருகின்றது. குட்டையாக இருத்தல், ஆங்கிலம் பேசவராது இருத்தல், அதிகப்படிப்பு இல்லாமை, விகாரரூபத்துடன் இருத்தல், தலை வழுக்கை, மனைவியை விடக் குள்ளமாக இருத்தல் இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் பலவிதமான தாழ்வு மனப்பான்மைக் குறைபாடுகளால் தம்மைத்தாமே தாழ்த்திக் கொள்கின்றான்! தம்முடைய உடல் அமைப்பு யாவுமே பூர்வ ஜென்மக் கர்மவினைகளால் ஏற்படுவது என்று தெளிந்தால்தான் தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட முடியும். இல்லையென்றால் உள்ளிருந்து ஒழிக்கும் நோயாக இந்த Inferiority Complex என்ற தாழ்வுமனப்பான்மை நோயானது மனம், உள்ளத்தில் பெருகி கர்மவினைகளையும் பெருக்கிவிடும் மேலும் உடலையும் பாதிக்கும். மேற்கூறிய அனைத்து நோய்களும் தீர வழி வகுப்பதே மேலபரங்கிரி மகாதீபத்தில் குடகு நீர் கொண்டு சந்தனம் அரைத்து அளிக்கும் கைங்கர்யம்.

பிரம்மச்சரிய நிலை விளக்கம்

சந்தனம் அரைக்கும் போது

மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே

என்ற அப்பர் சுவாமிகள் அருளிய தேவார பதிகத்தைப் பாடி அரைக்க வேண்டும். இறைவனின் திருவடி பெருமைகளைப் பற்றி பாடிய அப்பர் சுவாமிகள் இசைக் கருவிகளில் தலைசிறந்த வீணையின் மாசு இல்லாத கீதம் போன்றும், பொழுதில் சிறப்பான மாலை நேரத்தைப் போன்றும், காலங்களில் சிறப்பான வசந்தகாலம் போன்றும், தலைசிறந்த வண்டுகள் சூழ்ந்த குளம் போன்றும் இனிமையானவன் என்றும் கூறுகிறார். இத்தகைய சிறப்புகளைக் கூறிய அப்பர் பிரான் வண்டுகள் சூழ்ந்த குளம் என்று கூறுகிறாரே தவிர, குளத்தில் நிரம்பி இருக்கும் தாமரை மலர்களில் மொய்க்கும் வண்டுகள் என்று கூறவில்லை. ஏனெனில் அப்பர் சுவாமிகள் பிரம்மச்சரியத்தில் உச்சநிலையில் உள்ளவர். தாமரை மலர்களில் வண்டுகள் மொய்த்தல் என்பது ஒரு விதமான இனசேர்க்கையாகும். அதனால் பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொள்பவர் அவ்வாறு கூறுதல் கூடாது என்று பாடல் இயற்றியுள்ளார் என்றால் அப்பர் சுவாமிகளின் பிரம்மச்சரிய நிலையைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். எனவேதான் நாம் சந்தனம் அரைக்கும் போது இந்த தேவாரத்தைப் பாட வேண்டும் என்று நம் சற்குரு அளியுள்ளார். நம் சற்குரு அப்பர் சுவாமிகளை UPPER என்றே அழைப்பார், அவர் ஒருவர்தான் உண்மையான UPPER என்றும் கூறுவார். இவ்வாறு வாழ்ந்த அப்பர் சுவாமிகள் இறைவனின் கையிலாய தரிசனத்தைக் காணத் தன் கால் தேய, கை தேய, உடல் முழுவதும் தேய கையிலாயம் செல்கிறார். அவ்வாறு சென்ற போது இறைவனே வேடன் வடிவில் வந்து அவர் நிலையைக் கண்டு அவரை அருகில் இருக்கும் குளத்தில் முழ்கும்படி கூறுகிறார். அப்பரும் அவ்வாறே மூழ்கி எழும் போது திருவையாற்றில் அப்பன் குட்டையில் எழுகின்றார். அங்கு இறைவனின் கையிலாய காட்சியையும் காண்கிறார். இறைவனின் கையிலாய காட்சியை விளக்கும் அப்பர்

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப் போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன் யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன் ஐயா றடைகின்ற போது கோழி பெடையொடுங் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன் வரிக்குயில் பேடையொ டாடி வைகி வருவன கண்டேன்

என்றெல்லாம் பாடுகிறார். மலர் வண்டின் இனச்சேர்க்கையைக் கூட கூற விரும்பாத உத்தம பிரம்மச்சரிய நிலையில் உள்ள அப்பர் இவ்வாறு பாடுகிறார் என்றால் நமக்கு குழப்பம் வராமல் இருக்குமா என்ன?

பிரம்மச்சரிய நிலை என்பதே உலகின் உண்மையான உத்தம நிலையாகும். அவ்வாறே உலகம் இருந்தால் இயக்கம் என்பது இல்லாது நின்று விடும் அல்லவா? அதனால் தான் தூய பிரம்மச்சரிய நிலையில் இருக்கும் அப்பரே இவ்வாறு உலக இயல்பிற்கு ஏற்ற தத்தவத்தைக் கூறுகிறார்.

எனவே நாம் மாசில் வீணையும் என்ற பதிகத்தைப் பாடி சந்தனம் அரைத்து அதனை வில்லையாக்கி தீபத்தில் சேர்க்கும்படி கூறுகிறோம். மாசில் வீணையும் என்ற பதிகத்தின் கடைசி பத்தியில் “விறகிற் தீயினன் பாலிற் படு நெய்போல்” என முடிப்பார் அப்பர் சுவாமிகள். விறகில் தீ எவ்வாறு மறைந்திருக்கிறதோ அது போல இறைவன் அக்னி சக்தியில் மறைந்திருக்கிறார். சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருப்பது அமாவாசை, சூரியனுக்கு எதிரே ஏழாம் இடத்தில் சந்திரன் இருப்பது பௌர்ணமி ஆகும். இந்த பௌர்ணமியில்தான் ஸ்ரீகிருஷ்ண பகவான் இராசலீலையை நிகழ்த்தினார்.

அதேபோல் அப்பழுக்கற்ற பிரம்மச்சாரி என்றால் அது பகவான் கிருஷ்ணரே ஆவார் என்று நம் சற்குரு கூறுவார்.

இந்த 2024ம் ஆண்டின் கூட்டுத் தொகையான 8 என்பது கிருஷ்ண பகவானைக் குறிக்கும். எனவே இந்த ஆண்டில் வரக்கூடிய தீபவழிபாடு அப்பழுக்கற்ற பிரம்மச்சாரியான கிருஷ்ணருக்கு உரித்தானதாகும். ராதையுடன் சேர்ந்து ராசலீலையில் திழைத்த கிருஷ்ண பகவானை எவ்வாறு நம் சற்குரு அப்பழுக்கற்ற பிரம்மச்சாரி என்று கூறுகிறார் என்று பலருக்கும் குழப்பம் நேரிடலாம். அதற்கும் நம் சற்குரு விளக்கம் கூறுகிறார், ராதையும் கிருஷ்ணரும் வேறு அல்லர், ஒருவரே ஆவர். ராதை என்பவள் கிருஷ்ணரின் சூக்சும சரிரம் ஆவாள். கிருஷ்ணர் என்பது அவரின் தூல சரிரம் ஆகும். அதனால் தான் ராதையை கிருஷ்ணரை விட மூத்தவள் என்று கூறுவர். ராதையும் கிருஷ்ணரும் ஒருவரே வேறு இல்லை என்ற போதே அவரின் பிரம்மச்சரிய நிலை நமக்கு புரிகின்றது அல்லவா?

உலகிற்கு 21 ராசலீலை தத்துவங்களை தந்தவரே ஸ்ரீகிருஷ்ண பகவான் ஆவார். இந்த தத்துவங்களை எல்லாம் விளக்கவே நம் சற்குரு 21ம் தேதி அன்று பிறப்பெடுத்துள்ளார். 21 என்ற எண் எத்தகைய சிறப்புமிக்கது என்று எண்ணிப்பாருங்கள். அதனால்தான் நாமும் மூன்று ஏழு(777) 21 என்ற கணக்கில் இனிப்புகளை வைத்து பூஜைகளைச் செய்தோம். அதே போல் லிங்காயத்து என்று ஒரு தத்துவம் உண்டு. லிங்காயத்து என்றால் சிவலிங்கத்தை இதயத்தில் இருத்தும்படி கழுத்தில் அணிந்து பூஜிப்பது ஆகும். லிங்கம் என்பது சிவசக்தி ஐக்கியத்தைக் குறிக்கும் ஓர் உயர்ந்த தத்துவம் ஆகும். இதயத்தில் தாங்க வேண்டியது எது? இந்த உயர்ந்த தத்துவமாய் நிற்கும் லிங்கமே ஆகும். இவ்வாறு லிங்கத்தை இதயத்தில் தாங்கிய லிங்காயத்து பரம்பரையில் வந்தவரே கோவை லிங்கப்பா கவுண்டர் ஆவார். இவர் 21 வகையான காய்கறிகளை வைத்து பத்மநாப விரதம் பூண்டு அன்னதானம் செய்தவர். இந்த அன்னதானத்திலேயே நம் சற்குருவும் இடியாப்ப சித்தரும் கலந்து கொள்வர் என்றால் 21 என்ற எண்ணின் மகத்துவத்தை என்னவென்று சொல்வது?

சிவலிங்க தத்துவம்

சிவலிங்க தத்துவம் என்பது மனித கற்பனைக்கு எட்டாதது ஆகும். இந்த தத்துவம் நமக்குப் புரிந்தால் நாம் பிரம்மிப்பில் மூழ்கி விடுவோம். சிவலிங்க தத்துவத்தில், சிவன் நடுவில் அமைதியாக இருக்க, சக்தி ஆவுடையாக வீற்றிருக்கிறாள். இதுவே தியாகத்தின் உச்ச கட்ட நிலையாகும். இதை உணர்ந்தவரே மார்கண்டேயர் ஆவார். அதனால்தான் அவர் சிவலிங்கத்தை விட்டுப் பிரிய மனம் வரவில்லை. அவருக்கு தன் உயிர் மீதோ வேறு எந்த வித பற்றுமோ இல்லாதவர்.

இந்த தியாகத்தை உணர்ந்ததால் அதில் மெய்மறந்து லிங்கத்தோடு ஒன்றி விட்டார். இருப்பினும் எமதர்மர்தன் கடமையை ஆற்ற வேண்டும் அல்லவா? அதனால் பாசகயிற்றை வீசி உதை வாங்கிச் செல்கிறார். சிவலிங்கத்தோடு ஒன்றியதால் தான் மார்க்கண்டேயரை எமதர்மராலேயே பிரிக்க முடியவில்லை. இந்த மார்க்கண்டேய தத்துவமே மனிதர்களுக்கு ஏற்றதாகும். ஏனெனில் மனிதனுக்கு மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என உலகில் உள்ள அனைத்தின் மீதும் எண்ணற்ற ஆசைகளோடு வாழ்கிறான். ஆசை இல்லாமல் மனிதன் இருக்க முடியாது. எனவே நம் சற்குரு ஆசைகளை இறைவனோடு சேர்த்து விட வேண்டும் என்கிறார். அவ்வாறு நம் ஆசைகளை இறைவனோடு சேர்த்து விட்டால் எமதர்மராலும் நம்மை இறைவனிடம் இருந்து பிரிக்க முடியாது. இதைத்தான் நம் சற்குரு நாம் காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுக்கும் வரை எவ்வாறு இறைவனோடு ஒன்றிய வாழ்வை வாழ வேண்டும் என்பதை எளிய முறையில் கூறியுள்ளார். கர தரிசனம் முதல், பல் துலக்குதல், குளித்தல், உண்ணுதல், இரவு உறங்கும் போது கூறும் இராத்திரி சூக்தம் வரை இறைதுதிகளைப் பாடி ஒவ்வொரு செயலையும் செய்து இறைவனோடு ஒன்றும் வழியினை கூறி நம் வாழ்வினை முழுமையானதாக மாற்றியுள்ளார்.

வெம்மையும்,குளுமையும்

இறைமூர்த்திகளும் மகான்களும் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலும் நமக்காகவும் சமுதாய நலனுக்காகவுமேயாகும். அதை போல தான் சிவபெருமான் தலையில் இருக்கும் நாகமும் ஆகும். சிவபெருமான் தலையில் இருக்கும் நாகம் சசபிந்து மகரிஷி ஆவார். சச என்றால் குளிர்ச்சி, பிந்து என்றால் உச்சம், எனவே குளிர்ச்சியின் உச்சமாக இருக்கக்கூடிய வரை சிவபெருமான் தன் தலையில்அணிந்துள்ளார். மனிதனின் ஆசை பெருகும் போது அவன் உடல் சூடு அடைகிறது. இந்த சூடு அதிகரிக்கும் போது மனிதனுக்கு மனத்தடுமாற்றம் ஏற்படுகிறது. இதனை சரி செய்யவே எம்பெருமான் தன் தலையில் சசபிந்து மகரிஷியை வைத்திருக்கின்றார்.

இதை போலவே மாதா அமிர்தானந்தமயி அவர்களும் ஒரு சமயம் தன் தலையில் பாம்பினை வைத்துஅமர்ந்திருப்பார். மனிதர்களின் ஆசை வெப்பத்தைத் தன் தலையில் ஈர்த்து வைத்துக் கொண்டு தியாக உருவாய் இருக்கும் குளிர் நாகத்தைத் தன் தலையில் வைத்துக் கொண்டு உலகில் உள்ள ஆசை வெப்பத்தைத் தணிக்கின்றார்.

அதே போல் மாதா அமிர்தானந்தமயி அனைவருக்கும் முத்தம் கொடுப்பார். முத்தம் கொடுக்கும் போது தன் உதட்டின் வழியாக இந்த வெப்பத்தை ஈர்த்து அருள்புரிகிறார்.

அது போல் ஜடபொருளாய் பிறப்பதற்கும் கர்மவினைகளே காரணம் ஆகும். பார்ப்பதற்கு அவை ஜடபொருளாய் தெரிந்தாலும் அவை உண்மையில் என்ன கர்மாவுடன் இருக்கிறது என்பது நமக்குத் தெரிவதில்லை. உதாரணமாக ஒருவன் தன் அலுவலகத்தில் பணியற்றிய காலத்தில் 20 ஆண்டு கால வாழ்வை வேலை செய்யாமல் ஏமாற்றினான் என்று வைத்துக் கொள்வோம். அவ்வாறு அவன் ஏமாற்றிய அந்த 20 ஆண்டுகள் அவன் மேசை, நாற்காலியாய் அந்த அலுவலகத்தில் இருக்க வேண்டும். இதுவே விதியாகும். அவன் முற்பிறவிகளில் ஆற்றிய நற்காரியங்களின் அளவைப் பொருத்து அதிலிருந்து அவனுக்கு விடுதலை கிடைக்கும். மாதா அமிர்தானந்தமயி அவர்கள் இவ்வாறு ஜடபொருள்களுக்கும் முத்தமிடுவதற்கு இதுவே காரணம் ஆகும். முத்தம் என்பது பல விதமான கர்மவினைகளைப் போக்க வல்லது. அதனால்தான் இறைவன், இறைவியைப் பிள்ளையாக கருதி பாடும் பிள்ளைத் தமிழ்பாடல்களில் இறைவனை, அம்பாளை முத்தமிடுவாய் முத்தமிடுவாய் என வரும் முத்தப்பருவ பாடல்கள் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

இவ்வாறே தன்னுடைய வாழ்நாளில் 40 வருடம் தொடர்ந்து ஒரு லட்சம் முறைக்கு மேல் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்த சேஷாத்திரி சுவாமிகள் ஒரு முறை கிரிவலம் சென்று கொண்டிருக்கும் போது தன் எதிரே வந்த தாசி பெண் ஒருவளைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து அவளை பவித்ரம் மிக்க பதிவிரதையாக மாற்றினார். அவ்வாறு நடந்த மறுநாளே அந்த பெண்ணை ஒரு ஜமீன்தார் வந்து மணந்து கொள்வார். தான் திருந்தி வாழ வேண்டும் என்று மனதார எண்ணிய உடனே அவளின் கர்மவினைகளை சேஷாத்திரி சுவாமிகள் ஏற்று அருள்புரிந்தார். அதே போல் அவர் ஒரு நாள் கோவிலில் அமர்ந்திருக்கும் போது ஒரு நாகம் அவர் தலையில் ஏறி நிற்கும். இந்த நிகழ்விற்கு முன் சேஷாத்திரி சுவாமிகள் “காமோகார்ஷீத் மன்யுரகார்ஷீத்” மந்திரத்தை ஒரு லட்சம் முறை ஓதி உலகில் உள்ள காம எண்ணங்களைத் தம் தலையில் ஏற்றி அந்த நாகத்தின் மூலமாக அதனை தீர்த்து உலகில் அமைதியை நிலை நாட்டுகிறார்.

அதே போல் மகாபெரியவரை காமகோடி என்பர். “காமகோடி” என்றால் காமம் என்றால் என்ன என்பதை, காமத்தைக் கோடிட்டுக் காட்டுபவர்” என்று பொருள். இதில் அன்னை காமாட்சியின் பங்கும் பெரிதாகும். காமாட்சி என்றால் காமத்தைக் கண்களால் போக்குபவள் என்று பொருள். ஒரு முறை பிறவி ஊமையாக உள்ள ஒருவன் அன்னை காமாட்சியைப் பாட நினைப்பான். அப்போது காமாட்சி அம்மையின் உதட்டில் இருந்த எச்சில் அவன் மீது படுகிறது. உடனே அவன் வாய் திறந்து பாடல் பாடும் அளவிற்கு ஞானத்தையும் பெறுகிறான். இதுவே மூக பஞ்சகம் என அழைக்கப்படுகிறது.

எனவே உடல் சூட்டினைத் தீர்த்தால்தான் ஆசைகள் அகலும். இத்தகைய உடல் சூட்டை நீக்கி குளிர்ச்சி ஊட்டக்கூடிய எந்தபொருளும் உலகில் இல்லை. இதற்கு உள்ள ஒரே வழி குற்றால நீர்வீழ்ச்சியில் குளிப்பதேயாகும். குற்றாலம் என்பதற்குக் குறுகிய ஆலம் என்று பொருள். பனியினை ஆலம் என்பர், ஆலங்கட்டி மழை என்று கூறுவது வழக்கம். எனவே விரைவில் குளிர்ச்சியைத் தந்து ஆசை, காமத்தை போக்கக் கூடியது குற்றால நீர்வீழ்ச்சியில் குளிப்பதே ஆகும். இதை செய்ய வல்லவர் அகஸ்தியர் பாரம்பரியத்தில் வந்த நம் சற்குரு ஒருவரே ஆவார். அதே போல் பழைய குற்றாலத்தில் குளிப்பதனால் கர்பப்பை கோளாறுகள் நீங்கும். பழைய குற்றாலம் என்றால் மூத்த என்ற பொருளும் உண்டு எனவே நாம் பல பிறவிகளில் செய்த வினைகளும் நீங்கும் என்பதற்காகவே பழைய குற்றாலத்தில் குளிக்கும் படி நம் சற்குரு கூறுகிறார். ஆனால் எல்லோராலும் இவ்வாறு பழைய குற்றாலத்தில் குளிக்க இயலாது அல்லவா? அவ்வாறு குளிக்க இயலாதவர்கள் அங்கு இருக்கும் வனதுர்கையை வழிபட்டு பொங்கல் படைத்து தானம் அளித்தல் சிறப்பானதாகும். Cesarean ல் பிறந்த குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் இத்தகைய தானங்களைச் செய்வதால் நல்ல நிலையை அடையலாம்.

சற்குருவின் ஜீவகாருண்யம்

மகான்களின் பிறவிபயன் பிற உயிர்களுக்கு சேவை செய்வதையே தன்னுடைய உயிர் மூச்சாக கொள்வர். எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே என்று இறைவனை வேண்டியவர் தாயுமான சுவாமிகள். சற்குரு ஒவ்வொரு நொடியும் தன்னுடைய எண்ணம், சொல், செயல் என அனைத்திலும் பிற உயிர்கள் மேன்மை அடையவே வாழ்ந்து வந்தார்.

காரைக்கால் அம்மையார் “அரவா, நீ ஆடும் போது அடியேன் உன் அடியின் கீழ் இருக்க வேண்டும், பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்பு உண்டெனில் உனை என்றும் மறவாதிருக்க வேண்டும்…” என்று நடராஜ பெருமானை வேண்டி வழிபாடு செய்வதை நாம் அறிவோம். நம் சற்குருவோ “அரவா, நீ ஆடும் போது அடியேன் உன் அடியின் கீழ் இருக்க வேண்டும், பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்பு உண்டெனில் உனை என்றும் மறவாதிருக்க வேண்டும், மீண்டும் மகிழ்ந்து பாடி அரவா, நீ ஆடும் போது அடியேன் என்றும் உன் அடியின் கீழ் இருக்க வேண்டும் சிவ சிவ சிவ ஓம்” என்று இறைவனுக்கு நன்றி கூறி தன்னுடைய ஆன்மீக சொற்பொழிவை பூர்த்தி செய்வார். இவ்வாறு சற்குரு இறைவனுக்கு நன்றி கூறும் இந்த வாசகத்தில் முதலாவதாக வரும் “அரவா.. வேண்டும்.” என்னும் வாசகத்தை தனக்கும், இரண்டாவதாக வரும் “மீண்டும் மகிழ்ந்து பாடி ... இருக்க வேண்டும்” என்னும் வாசகம் மூலமாக உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் இறைவனுடைய அனுக்ரஹத்தை பெற்றுத்தர வேண்டுகிறார். சுவாமி சிவானந்தர் இமய மலையில் உள்ள ரிஷிகேஷில் வாழ்ந்து வந்து போது இமய மலையை தந்தையாகவும், கங்கை நதியை தாயாகவும் பாவித்து தினமும் கங்கையில் நீராடும் போது இரண்டு முறை முழ்கி எழுவார். முதல் முழுக்கு தனக்கும், இரண்டாவது முழுக்கு உலகத்தார்க்கும் என அர்ப்பணம் செய்து அனைத்து உயிர்கள் மேன்மை அடைய வாழ்ந்தார்.

இறைவனை காட்டும் பிந்து தர்ப்பணம்

தினமும் காலையில் சிறிது நீரருந்தியவுடன் தேனில் தோய்ந்த சிறு இஞ்சித்துண்டுகளை “இவை எமது பித்ருகளுக்கு ஆஹுதியாக அமைய இறைவா, அருள்புரிவாயாக!”என்று பிரார்த்தித்து இஞ்சித் துண்டுகளை நன்குமென்று விழுங்க வேண்டும், இதனையே கலியுகத்திற்குரிய பிந்து தர்ப்பணமாகச் சித்தர்கள் அருள்கின்றனர். எந்த லோகத்திலும் கிடைக்கின்ற பொருட்கள் ஒரு சிலவே. அவற்றுள் வில்வம், தர்ப்பை, தேன், இஞ்சி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. எனவேதான் திதித்திவசங்களில், இஞ்சி, தேன் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. பொதுவாக பித்ருக்கள் தங்கள் உணவினை நீர்மூலமாகவே பெற வேண்டும் என்பது விதி. ஆனால் தேன், இஞ்சி ஆகியவற்றின் மூலிகைத் தன்மைகளால், இவற்றை நேரிடையாகப் பெற்று விடுகின்றனர். எனவே மேற்கண்ட முறையில் தேனில் தோய்ந்த இஞ்சியை உண்டு தினசரி பிந்து தர்ப்பணம் செய்வது பித்ருதேவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுத்தரும்.

பொதுவாக மனித உடலில் பித்தம் அதிமாகும் போது உடற்சூடும் அதிமாகின்றது இதனால் மனமும் பாதிக்கின்றது. சூடாக உள்ள உடம்பு, மனம் குளிர்ந்தால் மட்டுமே இறைவனை காட்டும். இதற்கு உதவுதே மிகவும் எளிமையான நித்ய பூஜையான பிந்து தர்ப்பணம். நித்யமும் தொடர்ந்து பிந்து தர்ப்பணம் செய்வது பித்ருதேவர்களின் ஆசீர்வாதத்தை மட்டுமல்லாது உடல், மன சூட்டை குளிரச் செய்து இறைவனை காட்டுகிறது. இவ்வாறு சற்குரு எளிமையாக இறைவனை காட்டும் வழிகளை, பூஜைகளை அளித்தாலும் எல்லா அடியார்களும் பிந்து தர்ப்பணத்தை செவிமடுத்து வாழ்க்கையில் செயல் படுத்துவார்கள் என்று கூற முடியாது. இதையும் அறிந்து தாயினும் சால பரிந்து, சாட்சாத் சிவ பரம்பொருளான சற்குரு மேலபரங்கிரியில் நிகழும் மகாதீபத்தை தரிசனம் செய்வதன் மூலமாக அடியார்களின் உடல், மனச்சூட்டை குளிர செய்து பல பிறவிகள் எடுத்தாலும் எளிதில் கிட்டாத, அரிதிலும் அரிதான இறைவனை காட்டும் வாய்ப்பினை என்றும் மங்காத குரு பிரசாதமாக அளிக்கின்றார்.

பூஜ்ய சக்தி

மேலப்பரங்கிரி பூஜ்ய சக்திக்கு உரித்தான இடம். பூஜ்ய வடிவில் ஒரு குழாய் உள்ளதாக எண்ணிக் கொள்வோம். அந்த பூஜ்ய குழாயின் மேல் பக்கமும் கீழ் பக்கமுமாக திருப்பினோமானால் பூஜ்யம் என்பது எட்டாகும் அல்லவா? மேல் ஒரு பூஜ்யம் கீழ் ஒரு பூஜ்யம் சேர்ந்தால் எட்டாகும் அல்லவா? அந்த குழாயில் இருந்து நம்கையினை எடுத்து விட்டால் இரண்டு பூஜ்யமும் மறைந்து ஒரே பூஜ்யமாகும். இதைப் போன்றதே ஆண், பெண் என்ற இரண்டும் பார்ப்பதற்குத் தனித்தனியானதாக வேறு வேறாக தோன்றும். ஆனால் இரண்டும் ஒரே சக்தியாகும். இதுவே சிவசக்தி ஐக்கியமாகும். அதனால்தான் இந்த இணைப்பை திருமணம் என்று கூறுகிறோம். பெரும்பாலும் திரு என்ற புணைப் பெயர் இறைவனுக்கோ அல்லது இறைவிக்கோ வழங்கக் கூடியதாகும். அந்த அளவிற்கு திருமணம் என்பதற்கு முக்கியத்துவம் தருவதற்கு இதுவே காரணம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அடியார் துண்டு பிரசுரம் ஒன்றில் சிவசக்தி ஐக்கிய தரிசனத்திற்கு எதிரே அமைந்த நம் ஆஸ்ரமத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக ஸ்ரீலஸ்ரீ லோபமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் என்று குறிப்பிட்டு இருந்தார். லோபம் என்றால் கருமித்தனமாகும். ஒரு துணைகால் என்பது அகஸ்தியரின் பத்தினியான லோபாமாதா என்பதனையே வேறு விதமாக மாற்றி விட்டது. இதனை எழுதிய அடியார் விதிவசத்தால் தன் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த துண்டுவிழாத மனதுடைய நம் சற்குரு துண்டு பிரசுரத்தில் கூட துணையில்லாமல் இருக்கக் கூடாது என்று அந்த அடியாரை அழைத்து விளக்கினார். விதி வசத்தால் தன் மனைவியைப் பிரிந்து வாழும் அந்த அடியார் நம் சற்குருவின் அருள்வாக்கினால் என்றாவது தன் மனைவியுடன் சேர்ந்து வாழ்வார். இவ்வாறு ஒரு அடியாருக்கும் மட்டும்தான் அருள்புரிவாரா? நாம் அனைவருக்கும் இத்தகைய அருளினை எப்போதும் வழங்குபவரே நம் சற்குரு. இரண்டு பூஜ்யம் மறைந்து ஒரே பூஜ்யமாகும் தத்துவம் இப்போது நமக்கு எளிமையாக புரியுமல்லவா? பிரிந்த உறவுகள், பிரிந்த சொந்தங்களைச் சேர்ப்பதே இந்த தீப வழிபாட்டினால் நாம் பெறக்கூடிய பலன்களில் ஒன்றாகும்.

ஆரண மையம்

நடு மையம், மைய மையம், ஆரண மையம் என மூன்று மையம் உண்டு. இதில்ஆரண மையத்தில் அமைந்ததே கர்பப்பை ஆகும். கர்பப்பையில் இருந்து குழந்தை வெளியே வருவதற்கு ஒருவிதமான அழுத்ததைக் கொடுக்க வேண்டும். அந்த அழுத்தமானது ஒரு இரும்பு கம்பியையே வளைத்து விடும் அளவிற்கு கடுமையானதாக இருக்கும். இதில் குழந்தை தலைகீழாக இருக்கும் போதே குழந்தைப் பிறக்கிறது. இதற்காகத்தான் நம் முன்னோர்கள் காளி ஆசனம் என்ற ஆசனத்தை வைத்துள்ளனர். ஆனால் தற்போது காளி ஆசனத்தைப் பற்றிய ஞானம் எவருக்கும் இல்லை.

இதற்காகவே நம் சற்குரு

“தாயுமான வெண்ணையாகி தயை கூர்ந்துருகி மாயமான் மழுவும் ஏந்தி மயிர்க் கூச்செறிந்து ஏழையென் உடல் வலி தெரிந்திடாமல் பிழை பொறுத்து மகவு ஈந்திட அருள்வாயே”

என்ற பாடலைக் கூறியுள்ளார். இந்த பாடலைத் தொடர்ந்து பாடும் போது வெண்ணை எவ்வாறு உருகி வருமோ அது போல குழந்தையானது சுகமாக கர்பப்பையில் இருந்து வெளியே வரும் என்கிறார். நம் சற்குருவின் கருணை வெள்ளத்தைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். கர்பப்பையில் இருந்து குழந்தை வெளியே வரும் வரை 32 விதமான தசைகளைக் கடந்து வர வேண்டும். இந்த 32 தசைகளும் ஒன்றிற்கு பின் ஒன்றாக நிலை கொள்ள வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால்தான் அது சுகமான மகப்பேறாக இருக்கும். இந்த 32 விதமான தசைகளையும் வெண்ணெய் பாதை போல கடந்து வருவதற்காகவே நம் சற்குரு 32 பதிகங்களை அளித்துள்ளார். இதற்கு அருள்புரிபவரே தாயுமானவராவார். ஸ்ரீராமர் ஒரு பாணம் எய்தால் அது ஒரு லட்சம் ராமபாணமாக, ஒரு லட்சம் பாணசக்தியாகச் சென்று தாக்குமாம். அது போல இந்த 32 பதிகங்கள் அனைத்தும் ஒரு சில விநாடிகளில் 32 தசைகளையும் தளர்த்தி சுகமான பிரசவமாக மாற்றுகிறது. திருத்தவத்துறை கோவிலில் வெளிபிரகாரத்தில் உள்ள நான்கு கால் மண்டபத்தில் உள்ள தூணில் அருள்பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீகாளிதேவியின் முறையான தான, தர்மங்களுடன் செய்யும் வழிபாடு தாம்பத்ய பிரச்சனைகளுக்கான தீர்வு, கர்ப்பபை சம்பந்தபட்ட நோய் நிவாரணத்திற்கும், சுகமான பிரசவத்திற்கும் வழி காட்டும். திருச்சியில் உள்ள உச்சிபிள்ளையார் மலையில் வீற்றிருக்கும் தாயுமான ஈசனை தாம்பத்ய குறைபாடுள்ள தம்பதியர் தொடர்ந்து 9 முறைக்கு குறையாமல் வலம் வருவதால் தாம்பத்ய குறைபாடுகள் நீங்க தாயுள்ளம் கொண்ட தாயுமான ஈசன் அருள்புரிகின்றார்.

வெண்ணெய் உருகும் போது நெய்யாகிறது. எனவேதான் தீபவழிபாட்டில் நாம் நெய்யினை சேர்க்கிறோம்.

இவ்வாறான ஆரண மையத்தில் தோன்றியவரே ஸ்ரீவாஸ்து மூர்த்தி ஆவார். அதனால்தான் அவர் குழந்தை வடிவில் இருக்கிறார். இதனால்தான் அக்காலத்தில் திருமணத் தம்பதிகள் திருமணம் முடிந்தவுடன் புது வீட்டில் குடிசெல்வர். ஆனால் இதற்கான வாய்ப்புகள் இக்காலத்தில் கிடைப்பது அரிதாகும். ஆனால் இந்த 32 பதிகங்களைப்பாடி குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தையும் அதன் சந்ததிகளும் முழுமையான வாஸ்து சக்திகளுடன் திகழ்வார்கள். நாமும் இனி வரும் பிறவிகளில் இத்தகைய வாஸ்து சக்திகளையும் பெறலாம்.

செவலை சக்திகள்

பிரவசத்திற்கு உதவும் 32 தசைகள் பற்றி சற்குரு அளிக்கும் இன்னொமொரு சுவையான விளக்கம்.

நான்கு சக்கர வாகனங்களில் வேகமாக சென்று கொண்டிருக்கும் வேளையில் திடீரென்று வாகனத்தை நிறுத்த வேண்டிய சூழ்நிலையில் வாகனம் பாதையிலிருந்து விலகி விபத்துக்கள் நிகழாமல் பாதுகாப்பாக நிற்க உதவுவதே தற்போதைய விஞ்ஞான கண்டுபிடிப்பான “ABS” என்னும் தொழில்நுட்பம். இதை ஆன்மீகமாக பார்க்கும் போது சிவபெருமான் குழந்தை பிறக்கும் சுக பிரசவத்தில் நேரத்தில் “ABS” போலவே ஒரு அனுக்ரஹத்தை தன்னுடைய கரத்தில் ஏந்தியிருக்கும் மான், மழு வழியாக அளிக்கின்றார் என்பதை சற்குரு தெரிவிக்கின்றார்.

சுக பிரசவத்திற்கு தயாராகும் குழந்தை தலைகீழாக வர 32 தசைகள் சுருங்கி, தளர்ந்து வழி கொடுக்க இறுதியில் தலை முதலாக முழு உடம்பும் வெளியே வரும். சிவபெருமான் கரத்தில் இருக்கும் மான் குறிப்பது வேகத்தை, மழு குறிப்பது வேக கட்டுப்பாட்டை. இவ்வாறு சிவபெருமானின் திருஅருளால் மான் குறித்த சக்திகள் தலைகீழாக உள்ள குழுந்தையை வேகத்துடன் கீழே தள்ள, மழு குறித்த சக்திகள் தேவையான அளவு வேக கட்டுப்பாட்டை அளிக்க இறுதியில் குழந்தை சுகமாக பிரசவிக்கின்றது. இவ்வாறு பிரசவ நேரத்தில் சுக பிரசவத்திற்காக 32 தசைகள் முழுவதும் வியாபகம் ஆகி தசைகள் சுருங்கி தளர அருள் புரிவதே செவலை சக்திகள். இந்த செவலை சக்திகள் முழுவதும் நிறைந்த இடமேபுதுகோட்டை மாவட்டதில் உள்ள செவலூர் ஸ்ரீஆரணவல்லி சமேக பூமீஸ்வரர் திருத்தலம். இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது மனித வாழ்க்கையில் குழந்தை சுக பிரசவமாக பிறப்பதற்கு காரணமாய் இருப்பது சிவபெருமானின் ஈடில்லாத, மட்டற்ற கருணையே.

ஆரண மைய வழிபாடு

நாம் வாழும் இந்த பூமியானது தன்னை தானே சுற்றிக் கொள்வது, தன்னுடைய அச்சில் சுற்றிக்கொள்வது, சூரியனை சுற்றுவது என மூன்று விதமான வலத்தை மேற்கொள்ளும். இதைப் போலவே நிலாபுரந்தர வாசுமாமுனி தன்னை தானே சுற்றிக் கொண்டு, திருஅண்ணாமலையாரை சுற்றுவது என்ற முறையில் கிரிவலத்தை மேற்கொண்டார். இதுவும் ஒரு வகையான பூமி பூஜையாகும்.

சுக பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் பிரசவத்திற்கு சிறிது நேரத்திற்கு முன் தலைகீழாக சுற்றி முதலில் தலை வெளியே வர பின் பிற உடல் உறுப்புகள் வெளியே வருகிறது. இது சுழல் கிரிவல முறையின் முதல்படி. இவ்வாறு எந்த சோதனைகளும் இன்றி இனிதே குழந்தை தலைகீழாக சுற்றி சுக பிரசவம் நடைபெற உதவுவதே பழைய குற்றாலத்தில் உள்ள வனதுர்க்கை வழிபாடு.

இவ்வாறு இறை அருளால் தலைகீழாக பிறக்கும் குழந்தைகள் மேல்நிலையை அடைய வாழ்நாள் முழுவதும் இறைவனை வணங்க வேண்டும் என்னும் இறைநியதியை உலகத்திற்கு உணர்த்தி அதை தன் வாழ்நாள் முழுவதும் செயல்படுத்தி காட்டியவரே காரைக்கால் அம்மையார். காரைக்கால் அம்மையார் தன் வாழ்க்கை முழுவதும் தலைகீழாக பல திருத்தலங்களை வலம் வந்து, திருஅண்ணாமலையை கிரிவலம் செய்து இறுதியில் திருக்கைலாயம் அடைந்தார். அப்பொழுது அங்கு சிவபெருமானுடன் வீற்றிருந்த அம்பாள் ஒன்றும் தெரியாதவர் போல் “சுவாமி கைலாயத்திற்கு பேய் வந்திருக்கிறதே” என்று சிவபெருமானை நோக்கி கேட்க அதற்கு சிவபெருமான் “வந்திருப்பது எம் அம்மையே” என பதில் கூறி காரைக்கால் அம்மையை “அம்மையே” என்று கூறி வரவேற்றார். இதுமட்டுமல்லாது நமக்கு தெரிந்த 63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருக்கும் ஒரே நாயன்மார் காரைக்கால் அம்மையார் மட்டுமே. தன் வாழ்க்கை முழுவதும் தலைகீழாக இருந்து இறைவழிபாடு செய்த உன்னத இறையடியாருக்கு நடராஜ அவதாரத்தில் என்றும் தன் அடியில் கீழிருந்து வழிபாடு செய்ய இருக்க வேண்டி செய்த விண்ணப்பதை சுவாமி ஏற்று அதை வரமாக அளித்தது நாம் அறிந்ததே.

ராக பக்தி

அன்பும், ராகமும் நிஷ்டா பக்தி என்று மகான் ராமகிருஷ்ண பரஹம்சர் கூறுகின்றார். நிஷ்டா பக்தி என்பது ஒரு விஷயத்தை மட்டுமே உறுதியாக பற்றி கொள்வது. உதாரணத்திற்கு குரு நிற்கிறார் என்றால் குரு நிற்பதை பற்றி மட்டுமே யோசிப்பது. குரு வேறு எந்த கோணத்தில் இருந்தாலும் குரு நிற்பதை பற்றி மட்டுமே யோசிப்பதே ராக பக்தியாகும்.

ஒரு முறை கோகுலத்தில் உள்ள கோபியர்கள் கிருஷ்ணரை தரிசனம் செய்ய துவாரகைக்கு சென்றார்கள். துவாரகைக்கு ராஜாவான கிருஷ்ணர் ராஜ அலங்காரத்தில் ராஜ உடை, கிரிடம் முதற்கொண்டு சர்வாலங்கார பூஷிதராக காட்சியளித்தார். இதை கண்ட கோபியர்கள் இவர் யாரோ அந்நியன் என்று எண்ணி தங்களுடைய பாரம்பரிய வழக்கமான உடையால் முகத்தை மூடி கொண்டார்கள்.

சர்வமும் அறிந்த கிருஷ்ண பரமாத்மா கோபியர்களின் ஆழ்ந்த கிருஷ்ண பக்தியை அறியாதவரா என்ன ? தன்னை அந்நியன் என நினைத்து கோபியர்கள் தங்களுடைய முகங்களை மூடிக்கொண்டதை கண்ட கிருஷ்ணர் புன்சிரிப்பு சிரித்து அரண்மனையின் உள்ளே சென்று சாதரணமான ஒரு மஞ்சள் உடை அணிந்து, கொண்டை வைத்து அதில் ஒரு மயில் இறகை சொருகி வைத்து கோபியர்கள் முன் தோன்றினார். இதைக் கண்ட கோபியர்கள் ஆஹா இதோ நமது கிருஷ்ணர் வந்து விட்டார் என்று ஆனந்தமடைந்து, கொண்டாடி பக்தி மிகுதியால் கிருஷ்ணரை சூழ்ந்து கொண்டனர். இதுவே ராக பக்தியின் இலக்கணம்.

இந்த ராக பக்தியை அளிக்கும் சக்திகளே குடகு, கொள்ளிட தீர்த்தத்தில் பெருகி உள்ளது. குடகு, கொள்ளிட தீர்த்தத்தில் சந்தனம் அரைத்து மேலபரங்கிரி மகாதீப திருவிழாவில் அளிக்கும் கைங்கரியத்தில் எவ்வகையிலாவது பங்கு பெறும் அடியார்களுக்கு ராக பக்தியை குரு பிரசாதமாக அளிக்கிறார் சற்குரு என்பதை அறியும் போது எல்லையில்லா கருணாசாகர மூர்த்தியே சற்குரு என்பதை அடியார்கள் அறிந்து கொள்ளலாம்.

ஆசானின் காலம் கடந்த அர்ப்பணிப்பு

ஒரு முறை சற்குரு தன்னுடைய துணைவியார் மற்றும் அடியாருடன் சதுரகிரி மலை ஏறும் பொழுது ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து மேலே செல்ல கயிற்றில் ஏற வேண்டிய சூழ்நிலை. சற்குருவுடன் வந்த அடியார் முதலில் கயிற்றில் ஏறியவுடன் சற்குரு தன்னுடைய துணைவியாரை முதுகில் ஏற்றிக் கொண்டு கயிற்றில் ஏறி மேலே சென்றடைந்து மலையில் உள்ள குறிப்பிட்ட ஒரு குகையில் தொடர்ந்து மூன்று நாட்கள் தவமிருந்தார். சற்குருவின் இந்த மூன்று நாட்கள் தவமே பிற்காலத்தில் குருவருளால் மேலபரங்கிரியில் நிகழப் போகும் மூன்று நாட்கள் நடக்க உள்ள மகாதீப திருவிழாவிற்கான தியாகமாக கனிந்தது என்பதை அறியும் போது குருவின் கருணைக்கு எல்லை உண்டோ என்பதை அடியார்கள் தெரிந்து கொள்ளலாம். நிலாபுரந்தர வாசுமாமுனி என்னும் பெயரை கூட்டினால் 12 எழுத்துகளாக இருக்கும் இதையும் கூட்டினால் குருவின் எண்ணான 3ம் எண் வரும். ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் வெளியிடப் பட்டுள்ள நிலாபுரந்தர வாசுமாமுனி, பட்டாம் பூச்சி சிறகடி சித்தர், கஜதூளி பாத சித்தர் போன்ற எண்ணற்ற அரிய சித்தர்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கவே முடியாது. காரணம் என்ன? இவை அனைத்தும் நம் சற்குரு முந்தைய பிறவிகளில் பூமியில் எடுத்த அவதாரங்களே !

சற்குரு சதுரகிரியில் உள்ள குகையில் என்ன தவம் செய்தார், யாரை நோக்கி தவம் செய்தார் என பல அடியார்களின் மனம் அறிய ஆசைப்படும். எப்பொழுது ஒருவர் அளிக்கும் பிரசாத்தை சுவாமி ஏற்று கொள்கிறாரோ அப்பொழுது தான் வெள்ளியங்கிரி மலையில் ஏறுவதற்கான தகுதி அவருக்கு கிடைக்கிறது என்று கோவணாண்டியான பெரிய வாத்தியார் உறுதிபட கூறியுள்ளார். இவ்வாறிருக்க ஒரு முறை கோவணாண்டி அளித்த சுவையான சர்க்கரை பொங்கலை சற்குரு ஸ்ரீஅங்காளம்மனுக்கு இலையில் வைத்து நைவேத்தியம் செய்து விட்டு அமர்ந்திருக்கையில் கோவணாண்டி “டேய், ரெண்டு கண்ணையும் நல்லா மூடிக்கோ” என்று உத்தர விட்டார். சற்குருவும் கண்களை இறுக மூடிக்கொண்டார். சிறிது நேரத்தில் சற்குருவிற்க்கு ஸ்ரீஅங்காளியின் கொலுசு சத்தம், பின்னர் சர்ரென்று இலை இழுக்கப்படும் சத்தம், கோவணாண்டியிடம் ஸ்ரீஅங்காளி தேனினும் இனிய குரலில் சற்குருவிற்க்கு புரியாத ஒரு தேவ மொழியில் பேசும் சத்தமும் நன்றாக கேட்டது.இதெல்லாம் முடிந்து சிறிது நேரத்தில் கோவணாண்டி “டேய், கண்ணை திறடா” என்று கூற பலத்த யோசனைக்கு பிறகு சற்குரு கண்களை திறந்தார்.

சற்குரு கண்களை திறந்த பின் இலையில் உள்ள பாதி சர்க்கரை பொங்கலை ஸ்ரீஅங்காளி சாப்பிட்டதற்கான அறிகுறியை கண்டார். இவ்வாறு கிடைத்த ஸ்ரீஅங்காளியின் பிரசாதத்தை சற்குருவும், கோவணாண்டியும் சாப்பிட்ட பின் வெள்ளியங்கிரி மலை ஏற புறப்பட்டு சென்றார்கள்.

வெள்ளியங்கிரி மலை போகும் வழியில் ஆர்வ மிகுதியால் சற்குரு கோவணாண்டியிடம் “வாத்தியாரே நீயும் அங்காளியும் என்ன பேசிகிட்டீங்க ?” என்று கேட்டார். இதற்கு கோவணாண்டி “ஒன்னு தெரிஞ்சுக்க நைனா அங்காளியும் நானும் பேசினது உனக்கு புரியணும்னு அங்காளி நினைச்சிருந்தா உனக்கு புரிந்த மொழியிலேயே பேசி இருப்பாளே. இதுல இருந்து நீ புரிஞ்சுக்க வேண்டியது இந்த சப்ஜக்ட் பத்தி தெரிஞ்சுக்க உனக்கு விதியில்லை” என்று பதிலளித்து சற்குருவின் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதே போல் கோவணாண்டியும், சற்குருவும் குலுமனாலி சென்ற போது கோவணாண்டி அங்குள்ள ஒரு அவதூது மகானிடம் சற்குருவை மகானின் காலில் விழ வைத்து ஆசி வாங்கி தந்து கோவணாண்டியும் அந்த அவதூது மகானும் வெகு நேரம் சற்குருவிற்கு புரியாத ஒரு மொழியில் உரையாற்றி விட்டு கோவணாண்டியும், சற்குருவும் அந்த இடத்தை விட்டு புறப்பட்டு விட்டார்கள். சிறிது தூரம் கடந்த பின் ஆர்வ மிகுதியால் சற்குரு கோவணாண்டியிடம் “வாத்தியாரே நீயும் அந்த அவதூது மகானும் என்ன பேசிகிட்டீங்க ?” என்று கேட்டார். இதற்கு கோவணாண்டி “டேய் அந்த அவதூது மகானும் நானும் பேசினது உனக்கு புரியணும்னு அந்த அவதூது மகான் நினைச்சிருந்தா உனக்கு புரிந்த மொழியிலேயே அவர் பேசி இருப்பாரே. இதுல இருந்து நீ புரிஞ்சுக்க வேண்டியது இந்த சப்ஜக்ட் பத்தி தெரிஞ்சுக்க உன் தலையில எழுதல”.

சற்குருவின் சதுரகிரி மலை, மேலபரங்கிரி தீப தீயாகத்திற்கு தொடர்பான மேலும் ஒரு சுவை கூட்டும் நிகழ்ச்சி. ஒருமுறை ஒரு அடியாரின் திருமணத்திற்காக மதுரை சென்றிருந்த போது அங்குள்ள சதுரகிரி மலையை தரிசனம் செய்து வருவதற்காக சில அடியார்கள் சேர்ந்த குழு ஒன்று புறப்பட்டது. அவர்கள் புறப்படும் போது மதிய நேரம் கடந்து விட்டதால் அவர்கள் சதுரகிரி மலையில் இறைவனை தரிசனம் செய்து திரும்புவதற்குள் நன்றாக இருட்டி விட்டது. ஒரு சிலர் வைத்திருந்த டார்ச் உதவியால் தான் அவர்கள் அடுத்த காலடியையே வைக்கும் அளவிற்கு அந்த மலைப்பகுதி இருட்டாகஇருந்தது.

ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு சில ஓடைகளை அவர்கள் கடக்கும்படியும் ஆகி விட்டது. ஆனால், அவர்கள் புறப்பட்டது முதல் அடிவாரத்தை அடையும் வரை எட்டு பைரவ மூர்த்திகள் நாய் வடிவில் அவர்களைத் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தனர். அடிவாரம் வந்த பின் அந்த பைரவ மூர்த்திகள் எங்கோ சென்று மறைந்து விட்டனர். இது பற்றி நம் சற்குருவிடம் கேட்ட போது தமக்கே உரிய பாணியில் சிறுநகையுடன், “அவர்கள் வேறு யாரும் அல்ல, பைரவ மூர்த்திகள் தான் உங்களுக்கு வழி காட்டியது... அஷ்ட பைரவ மூர்த்திகளையே தரிசிக்கும் பேறு உங்களுக்குக் கிட்டி விட்டது என்றால் நீங்கள் இப்பிறவியில் இனி சாதிக்க வேண்டியது என்ன? பெற வேண்டிய இறை அனுகிரகம்தான் என்ன?” என்றார்.

இதைக் கேட்ட அடியார்கள் எல்லாம், அதிலும் சதுரகிரிக்குச் சென்ற அடியார்கள், பிரமிப்பின் எல்லைக்கே சென்று விட்டார்கள்.

சற்குரு தொடர்ந்தார், “அதனால் இந்த அடியார்கள் எவரும் இனி சதுரகிரிமலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை...”, என்றார். அஷ்ட பைரவ மூர்த்திகளை இனங்கண்டு கொண்டு அவர்களைப் புகழ்கிறார் என்றால் நம் சற்குரு சாட்சாத் சிவபெருமானைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? இவ்வாறு சதுரகிரியில் அடியார்களுக்கு அஷ்ட பைரவர்கள் காட்சியளித்த இடத்தின் எதிரே உள்ள ஒரு குகையில் தான் சற்குரு தொடர்ந்து மூன்று நாட்கள் தவத்தில் இருந்தார்.

Sweet 16
Sweet 16

வெள்ளியில் வள்ளி தியானம்

ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று ஈசனுடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்று கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்று குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று மாறுபடும் சூரரை வதைத்த முகம் ஒன்று வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று ஆறுமுகம் ஆன பொருள் நீயருள வேண்டும் ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே

என்று அருணகிரிநாதர் வள்ளியை மணந்த முகம் என்று முருகனைச் சிறப்பித்துப் பாடுகிறார். முருகப்பெருமான் முதலில் தெய்வானையைத் தான் மணந்து கொள்கிறார். தெய்வானை இந்திரனின் மகளும் ஆவாள். இருப்பினும் அருணகிரிநாதர் வள்ளியைச் சிறப்பித்து பாடுவதற்குக் காரணம் இல்லாமல் இருக்குமா என்ன? முருகனை மணந்து கொள்வதற்காக வள்ளி தினமும் காலையில் கிழக்குத் திசையில் இருந்து மேற்குத் திசைக்கும், மாலையில் மேற்குத்திசையில் இருந்து கிழக்கிற்கும் சென்று வழிபாடு செய்தாள். தெய்வானை காலையில் மேற்கிலிருந்து கிழக்கிற்கும் மாலையில் கிழக்கிலிருந்து மேற்கிற்கும் சென்று வழிபாடு செய்தாள் என்று பொதுவாக ஒரு கதை உண்டு. வள்ளி நிழலில் சென்று நிழலிலேயே வந்ததால் தான் பூலோகத்தில் பிறந்து முருகனை மணந்தாள் என்றும், தெய்வானை வெயிலில் சென்று வெயிலிலேயே வந்து வழிபாடு செய்ததால் இந்திரனின் மகளாகப் பிறந்து முருகனை மணந்தாள் என்றும் கூறுவர். உண்மையில் அவர்கள் இருவரும் தேவகன்னிகைகள் அவர்களுக்கு நிழல் என்பது கிடையாது. அதேபோல் பூலோகத்தில் பிறப்பெடுக்கும் நம் சற்குரு, மாதா அமிர்தானந்தமயி போன்ற மகான்களுக்கும் நிழல் என்பது கிடையாது. ஆனாலும் அவர்கள் பிறரின் “நிழலாகப் படிந்த கர்மவினைகளைத்” தாம் ஏற்று அருள்புரிகின்றனர். அது போல வள்ளி தினமும் மற்றவர்களின் நிழல் கர்மவினைகளைத் தாங்கி அவற்றைத் தீர்த்து பூஜித்ததால்தான் தியாகத்தின் உருவமாகி முருகப்பெருமானை மணந்து கொள்கிறாள் என்று தியாகமே வடிவமாக இருக்கும் நம் சற்குரு கூறகிறார். “வெள்ளியில் வள்ளியை தியானிப்பது” மிகவும் சிறப்பானதாகும். வெள்ளிக் கிழமையில் வரும் இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருநாளில் வள்ளியையும் தியானிப்பது எத்துணைச் சிறப்பாக இருக்கும். தியாகமே வடிவமாக இருக்கும் நம் சற்குருவால் மட்டுமே இத்தனைப் பலன்களையும் ஒன்றாக்கிக் கொடுக்க முடியும்.

மேலபரங்கிரி நிலாபுரந்தர வாசுமாமுனி ஜோதி ஜீவாத்மா, பரமாத்மா சங்கம அனுபூதி

மேல என்பது ஜீவாத்மாவையும்,

பரம் என்பது பரமாத்மாவையும்,

கிரி என்பது மலையை குறிக்கும்!

மேலபரங்கிரி மலையில் ஏற்றப்படும் நிலாபுரந்தர வாசுமாமுனி ஜோதி குருவருளாலும், திருவருளாலும் ஜீவாத்மாவையும், பரமாத்மாவையும் அல்லது மனிதனை இறைவனுடன் இணைக்கும் அரிய அனுபூதியை பெற்றுத்தரும் நிகழ்வாகும். அடியார்களும், பக்த கோடிகளும் எவ்வகையிலாவது இந்த மகாதீப திருவிழாவில் பங்கு கொண்டு இயன்ற தான, தருமங்கள் செய்து இவ்வரிய ஜீவாத்மா, பரமாத்மா சங்கம ஆசி, அனுபூதிகளை குருவருளாலும், திருவருளாலும் பெற்றுக் கொள்ளும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்
Sweet 16
எண் கணிதம் இறை கணிதமே !
நிலாபுரந்தர வாசுமாமுனி ஜோதி

புரந்தர விஸ்தீர்ணம்

கார்த்திகை மாதத்தில் சோமவாரம் மிகவும் சிறப்பானதாகக் கருப்படுகிறது. இவ்வாறு இரண்டு சோமவரத்திற்கு இடையே இருக்கும் செவ்வாய் கிழமை(10/12/2024) முதல் ஞாயிற்று கிழமை(15/12/2024) வரை இருக்கும் ஆறு நாட்களிலும் சந்திர சக்திகள் பூரித்து இருக்கும். 2018ம் ஆண்டு கார்த்திகை மாத தீப வழிபாடு ரோகிணி நட்சத்திரத்தில் தான் கொண்டாடப்பட்டது. ஏனெனில் 2018 ன் கூட்டுத்தொகையான 2 என்பது சந்திரனுக்கு உரித்தானதாகும். எனவே அந்த ஆண்டு தீபம் ஏற்றும் போது தாமதம் ஆகி ரோகிணி நட்சத்திரமே வந்து விட்டது எனில் ரோகிணி நட்சத்திரத்திரத்தின் சிறப்பினை எண்ணிப்பாருங்கள். வரும் 15ம் தேதி அன்று இரவு 10.30 மணிக்கு மேல் சூரிய பகவன் தனுசு ராசிக்கு வருகிறார். இது இரவு ராகுகால நேரம் மற்றும் இரவு எமகண்ட நேரத்தைக் கடந்து, புனிதமான புத ஹோரையில் மார்கழி மாதம் பிறக்கிறது. இதுவும் ஒரு அரிய அனுகிரத்தைத் தரவல்லதாகும். ஞாயிறு அன்று தீபத்தின் மூன்றாம் நாள் வாசுமாமுனி தீபம் ஆகும். இந்த வாசுமாமுனி தீபமானது மார்கழி வரை விஸ்தீர்ணமாகிறது. விஸ்தீர்ணம் என்றால் நீளுதல், பெருகுதல் என்று பொருள். இதனை புரந்தர விஸ்தீர்ணம் என்கிறார் நம் சற்குரு. இவ்வாறு விஸ்தீர்ணமடைவதால் என்ன பலன் என்பதே மனிதனின் கேள்வி. இறை அவதாரங்களும், மகான்களும் எவருமே அற்புதங்களைச் (miracle) செய்வதில்லை. பார்ப்பதற்கு அவை miracle போல தெரிந்தாலும் அதற்கு அவர்கள் உரித்தான பூஜைகளைச் செய்தாக வேண்டும். உதாரணமாக அப்பர் சுவாமிகளைச் சுண்ணாம்பு காளவாயில் இட்ட போது, அவர் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் வெளியே வந்தார். அவர் எந்த விதமான miracle ம் செய்யவில்லை. அவர் இறைவனின் பெருமையை

“மாசில் வீணையும் மாலை மதியமும் வீசுதென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே”

என்று பாடும் போது சுண்ணாம்பு காளவாயே குளிர்ந்து விடுகிறது. ஒரு முறை கிருஷ்ண பரமாத்மா பாண்டவர்களிடம் குளிப்பதற்காக வெந்நீர் கேட்பார். அவர்களும் வெந்நீருக்காக அடுப்பை ஏற்றி வைப்பார்கள். தண்ணீர் சூடேறாமலேயே இருக்கும். அப்போது பீமன் காட்டில் உள்ள விறகுகள் அனைத்தையும் கொண்டு அடுப்பில் ஏற்றுவான். அப்போதும் தண்ணீர் சூடேறாது. அனைவரும் கிருஷ்ணரிடம் சரணடைவர். கிருஷ்ண பரமாத்மா ஒன்றும் தெரியாதது போல், பீமா வேண்டுமானால் அந்த பாத்திரத்தின் நீரை கீழே ஊற்றிப் பார் என்பார். தண்ணீர் முழுவதையும் கீழே ஊற்றிய பிறகு அதிலிருந்து ஒரு சிறிய தவளை ஒன்று தவ்வி தவ்வி ஓடும். பாத்திரம் சூடேறாமல் இருந்ததற்குக் காரணம் அந்த தவளைதான் என்று அனைவரும் அறிந்து கொண்டனர். அந்த தவளையே மயிலை சுந்தர் ராம் குருஜீ ஆவார். அவரின் அருளாசியிலேயே நாம் பரங்கிரிக்குத் தீப கொப்பறையை ஏற்றினோம். இவ்வாறு அவர்கள் செய்வது miracle போல இருந்தாலும் அவை miracle அல்ல. இறைவன் ஒருவரே miracle செய்யவல்லவர். கிருஷ்ண பரமாத்மா திரௌபதிக்கு ஆடையைத் தருவதற்காக அவர் இரண்டு எட்டு முழ வேட்டிகளை விரித்து திருஅண்ணாமலையை கிரிவலம் வரும் முறைப் பற்றி முன்பு விளக்கியிருந்தோம்.

அது போல கிருஷ்ண பரமாத்மாவின் ராச லீலை மிகவும் உயர்ந்த தத்துவமாகும். ராச லீலை என்பது கிருஷ்ணர் ஆயிரம் கோபியர்களுடனும் தனித்தனியே ஆயிரம் கிருஷ்ணராய் மாறி நடனமாடுவதாகும். அதாவது ஆயிரம் cloning செய்து ராச லீலையை உலகிற்குத் தருகிறார். இந்த cloning சக்தியை கிருஷ்ணர் எங்கிருந்து பெருகிறார்? ஆம் திருஅண்ணாமலையிலிருந்துதான் பெறுகிறார்.

புரந்தர விஸ்தீர்ணம் கிரிவலம்

கிடைப்பதற்கு மிகவும் அரிதான இதைப் போன்ற ஒரு புரந்தர விஸ்தீர்ணம் பெற்ற ஆறு நாட்களில் கிரிவலம் வந்துதான் இந்த சக்தியைப் பெருகிறார். பல முறை நம் சற்குரு தன்னுடைய குருவான இடியாப்ப சித்தருடன் யாத்திரை செல்வார். அவ்வாறு செல்லும் போது நம் சற்குருவின் cloning யை இடியாப்ப சித்தர் உருவாக்கி விடுவார். அந்த cloning சிறுவனும் நம் சற்குரு மீண்டும் வரும் வரை வீட்டில் இருப்பது பள்ளிக்குச் செல்வது என்று இருப்பான். திருமாலின் பூர்ண அவதாரமான கிருஷ்ண பரமாத்மாவே cloning செய்ய பல பூஜைகள் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இடியாப்ப சித்தர் இதனை எளிமையாக செய்கிறார் என்றால் அவர் எம்பெருமான் சிவனேயாவார். எனவே கிடைப்பதற்கு மிகவும் அரிதான இந்த புரந்தர விஸ்தீர்ணம் பெற்ற ஆறு நாட்களிலும் கிரிவலம் வருவதால், இறைவனின் மீதுள்ள நம் பக்தியானது எட்டு மடங்காக அதிகரிக்கும். பக்தியைப் பற்றி நம் சற்குரு கூறும் போது, ஒரு மனிதனின் பக்தியின் அளவு 0.001 என்று இருக்கும் எனில் பூரண இறை நம்பிக்கையோடு இருக்கும் அந்த மனிதனின் பக்தியின் அளவை நம் சற்குருவை போன்றவர்களே 0.002 என்ற அளவிற்கே கூட்ட முடியும் என்பார். எனில் இந்த ஆறு நாள் கிரிவலத்தினால், நாம் எட்டு மடங்கு பத்தியைப் பெற முடியும் என்றால் இதன் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளுங்கள். நம் சற்குரு நமக்கு அளித்துள்ள குசா தோப்பு கரணம் எவ்வாறு தோப்புகரண சக்தியை எட்டுமடங்காக்கித் தருகிறதோ அதைப் போலவே இந்த ஆறு நாள் கிரிவலம் நமக்கு எட்டு மடங்கு பக்தியைத் தருகிறது.

ருக்மணியின் சுயம்வரத்தில் பல நாட்டு மன்னர்களும் வந்திருப்பர். அதில் கிருஷ்ணரும் தன்னுடைய cloning கிருஷ்ணருடன் வந்திருப்பார். இதில் ருக்மணி சரியான கிருஷ்ணரை அடையாளம் கண்டு மாலையிடவேண்டும். இது எவ்வாறு சாத்தியம்? சிந்தியுங்கள். ஆனால் ருக்மணி சரியான கிருஷ்ணரை அடையாளம் கண்டு மாலை அணிவாள். இது எவ்வாறு நடந்தது? கிருஷ்ணரின் கண் அருகே ஒரு மச்சம் இருக்கும். அது மச்சம் அல்ல. ஒரு அணில் பல ஆண்டு காலம் தவம் செய்து கிருஷ்ணா உன் தாமரை விழி அழகை எப்போதும் பார்த்தவாரே இருக்க வேண்டும் என்ற ஒரு வரத்தினைப் பெருகிறது. கிருஷ்ணரும் அவ்வாறே அந்த வரத்தை அளித்து தன் கண்ணருகே அந்த அணிலுக்கு இடம் தருகிறார். எனவே அந்த cloning கிருஷ்ணருக்கு அந்த மச்சம் இருக்காது. ஏனெனில் பக்தியை cloning செய்ய முடியாது. கிருஷ்ணரையே cloning செய்ய முடியும், ஆனால் கிருஷ்ணர் மீது கொண்ட பக்தியை cloning செய்ய முடியாது என்றால் பக்தியின் சிறப்பைப் புரிந்து கொள்ளுங்கள்.

இதனை எண்ணும் போது மெய்சிலிர்க்கிறதல்லவா? இதனை அறிந்து ருக்மணி சரியான கிருஷ்ணரை அடையாளம் கண்டு கொள்கிறார் என்றால் ருக்மணியின் நிலை என்னவாய் இருக்கும்?

இவ்வாறு இந்த ஆறு நாட்களிலும் கிரிவலம் வருவதால், தனக்கென இல்லாமல் உலக நன்மைக்காக cloning technologyயைப் பயன்படுத்த நினைப்பவர்களுக்கு அதற்கான ஞானம் கிட்டும். அதே போல் ரப்பர் ஸ்டாம்ப் (Rubber stamp) போல் copy வேலைகளைச் செய்வோருக்கும் சிறப்பான பலன்கள் கிட்டும்.

இவ்வாறு இந்த ஆறு நாட்கள் கிரிவலம் செல்ல முடியாதவர்கள், தீபம் இருக்கும் மூன்று நாட்கள்(வெள்ளி,சனி,ஞாயிறு) மட்டுமாவது கிரிவலம் செல்லலாம். இதுவும் முடியாதவர்கள் ஞாயிற்று கிழமை மட்டுமாவது கிரிவலம் செல்லலாம். திருஅண்ணாமலையை மட்டுமல்லாது நாம் அய்யர் மலை, பழநி, பரத்வாஜரின் விஸ்தார ஜீவ ஒடுக்கம் இருக்கும் தவசிமடை, பரத்வாஜ தீர்த்தம் உள்ள காளஹஸ்தி என நாம் எந்த மலையை வேண்டுமானாலும் கிரிவலம் வரலாம். அதுவும் இயலாதவர்கள் எந்த கோயிலையும் ஸ்வஸ்திக் முத்திரையில் சுழல் வலம் வரலாம்.

Sweet 16

இந்த தீபத்திற்கு Sweet 16 என்று அச்சிட்ட cupல் டீ தானம் அளிப்பதனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளோம். இதில் 16 என்பது இந்த ஆண்டிற்கான குசா எண்ணான 7யைக் குறிக்கும். Sweet 16 என்னும் போது அது குருவை குறிக்கும் மூன்றாக மாறுகிறது. தண்ணீர் என்பது ஒரு ஆக்ஸிஜன் இரண்டு ஹைட்ரஜனின் சேர்க்கையாகும். இது வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முழுமையான முருக தத்துவமாகும். அதனால் தான் சிலந்தி வலையில்

“சதுர் புஜம் துவிநேத்திரம் ஸ்ரீசண்முக பலப்ரதம்”

என்ற மந்திரத்தை அச்சிடும் படி சற்குரு கூறியுள்ளார். எல்லாவிதமான அடிப்படை அனுகிரங்களையும் தரவல்லது முருக வழிபாடாகும். புனித நதி தீர்த்தம் கொண்டு சந்தனத்தை வில்லைகளாக்கிப் பரங்கிரி தர்ப்பணம் செய்பவர்களுக்கு இந்த அனுகிரகம் முழுமையாக கிடைக்கின்றது. அவர்களுக்கு இவ்வாறான ஆறு நாள் கிரிவலம் என்பதும் தேவையில்லை. குருமுத்திரை மந்திர வலிமையோடு இந்த தீபம் பிரகாசிப்பதால் இந்த அனுகிரகம் அவர்களுக்கு முழுமையாக கிடைக்கின்றது. இதனை அவர்களின் மூதாதையர்களே வழங்கிவிடுகின்றனர்.

Sweet 16 டீ தானம்

பல்லாயிரமல்ல பல லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறையே கிட்டும் இந்த கிடைப்பதற்கு மிகவும் அரிய புரந்தர விஸ்தீர்ண தீப சக்திகளை அடியார்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்
ஸ்ரீ அகஸ்திய விஜயம்
பூஜ்ய சக்தி (0) நிறைந்த பேரையூர் – மேலப்பரங்கிரி
(மதுரை – கல்லுப்பட்டி அருகே கல்லுப்பட்டியிலிருந்து 7 கி.மீ தொலைவில் மேலப்பரங்கிரி மலை உள்ளது.)
ஸ்ரீமல்லிகார்ஜுன லிங்கம்

1.1.2004ல் அமையும் எண் சக்திகளில் பூஜ்யவாரி சங்கமத்தைக் கொண்டு அர்ஜூன சக்திகள் நிறைந்த தலங்களில் 2004ம் ஆண்டில் வழிபடுதல் மிகவும் சிறப்புடையதாகும். பாண்டவ அர்ஜுனன் எண் சக்திகளில் வல்லமை கொண்டவன். ஒவ்வொரு நாணிலும், எவ்வளவு அம்புகள் எய்திடில் இலக்கு வெற்றி பெறும் என்ற அம்புக் கூட்டு இலக்கணத்தில் வல்லவன். எண் கணிதத்தில் சரஸ்வதி கடாட்சம் பெற்றவனாகிய சகாதேவனிடம் பல எண் ரகசியங்களைக் கற்றவன்.

இத்தகைய அபரிமிதமான எண் சக்திகளை அவன் பெற்றதற்குக் காரணமே பரங்கம் என்னும் எண் வித்தையில் சிறப்புற்ற தலங்களில் வழிபட்டதுதான். பரங்க எண் சக்திகள் திகழும் சில தலங்களுள் மதுரை கல்லுப்பட்டி அருகே பேரையூர் – மேலப்பரங்கிரி மலையில் உள்ள மல்லிகார்ஜுன லிங்கமும் ஒன்றாகும். பலரும் அறியாத மிகவும் சக்தி வாய்ந்த தலம். ஏறுதற்கு மிகவும் சிரமமான மலை! ஏறி வழிபட்டாலோ ஏற்றமிகு எண் சக்திகளைத் தரும் அற்புத லிங்கம், தற்போது மலையில் முறையான பூஜையின்றி இருக்கின்றது. ஸ்ரீகிருஷ்ணன் அருளியபடி சகாதேவன் மிகவும் விருப்பத்துடன் ஜோதிடம், எண் கணிதம், வானசாஸ்திரத்தில் அற்புத ஆற்றல்களைப் பெற வழிபட்ட லிங்க மூர்த்தி, அர்ஜுனனுக்கு தனுர் வேத எண் சக்திகளைத் தந்த தலம்.

பூஜ்யம் (Cypher) எண்ணின் பரிபூரண சக்தி கொழிக்கும் தலமே பேரையூர் – மேலப்பரங்கிரி, பரங்கம் என்பது விசேஷமான ஒரு வகை பூஜ்யத்தைக் குறிக்கும் பூஜ்ய வடிவில் ஒரு யுகத்தில் திகழ்ந்த மலை! எண்களில் பூஜ்யம் இங்குதான் பிறந்தது. பூஜ்யஸ்ரீ என்று போற்றப்படுபவர்கள் இங்கு கட்டாயமாக வழிபடுதல் வேண்டும். ஜோதிடர்களும், எண் கணித வல்லுனர்களும், கணிதத்தில் மேன்மை பெற்றோரும் கண்டிப்பாக வழிபட வேண்டிய தலம்! இத்தலத்தைச் சிறப்பிக்க வைப்போர் எண் சக்திகளால் வாழ்வில் ஏற்றம் பெறுவர்.

இரண்டு பூஜ்யங்கள் சேர்ந்து வருவது தரிஸ்சம் எனப்படும். ஆண்டு 2004ல் இரண்டு கிரக சக்திகளுக்கு இடையே (இங்கு சந்திரன், ராகு) தரிஸ்சம் வரும் போது, அவரவர் ஜாதகக் கட்டத்தில் சந்திர, ராகு கிரகங்களுக்கு இடையே உள்ள ரத, சித்ர பாவங்களில் பல மாறுதல்கள் ஏற்படும். இவற்றை பூஜ்ய சக்திகள் கொண்டு நல்வழிப் படுத்துவதே பேரையூர் – மேலப்பரங்கிரி லிங்க முர்த்தி! நான்கு எண்ணைக் குறிக்கும் ராகு சக்திகள் இரண்டைக் குறிக்கும் சந்திர மூர்த்திக்குரிய குசா சக்திகளுடன் பொலிவதால் 2004 வருடம் இத்தகைய மேம்பட்ட குசா சக்திகளுடன் பொலிய அருள்புரியும் இறைமூர்த்தியும் ஸ்ரீமல்லிகார்ஜூன ஈசன் ஆவார்.

குரு பகவான் ஆட்சி பெறும் பங்குனி மாதத்தில் செவ்வாய்க் கிழமையும் கிருத்திகை நட்சத்திரத்துடன் அமிர்தயோகம், சித்தயோகம் கூடும் சுபதினத்தில் சூரிய பகவான் தன்னுடைய பொற் கிரணங்களால் ஸ்ரீமல்லிகார்ஜுன லிங்க மூர்த்திக்கு அபிஷேகம் இயற்றும் இனிய வைபவத்தை இளநீர் அபிஷேகத்தால் நிறைவு செய்து நம் அடியார்கள் நிறைவேற்றிய திருப்பணியை இங்குள்ள படத்தில் அடியார்கள் கண்டு இரசிக்கலாம். இத்தகைய அபிஷேக ஆராதனைகள் சொந்தமாக வீடு, நிலம் அமைவதற்கும்,சொத்துத் தகராறுகள் சுமுகமாக தீர்வடையவும் உறுதுணையாக அமையும். நெடுநாள் வரவேண்டிய கடன்கள் வசூலாகவும் இத்தகைய திருப்பணிகள் உதவும்.

நாம் நினைப்பது போல் மனிதர்கள் மேல் ‘விழும்’ சூரிய கிரணங்களும் லிங்க மூர்த்திகளைத் ‘தழுவும்’ சூரிய கிரணங்களும் ஒன்றே ஆனவை அல்ல. உதாரணமாக, மேலப்பரங்கிரி ஈசனை ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் தழுவும் சூரிய கிரணங்கள் விமலாதித்ய கிரணங்கள் எனப்படும். இந்த சூரிய கிரணங்களால் அபிஷேகிக்கப்படும் இறைவன் பக்தர்களுக்கு சமராதித்ய சூரிய சக்திகள் என்ற அபூர்வ சக்திகளை அனுகிரகமாக வர்ஷிக்கின்றார். மேலும் மேலப்பரங்கிரி திருத்தலத்தில் மட்டும் பொலியும் சில நட்சத்திர சக்திகள் உண்டு. இவற்றில் முக்கியமான சர்வதூலம், உதயத்பானு, விக்ரீடிதம் என்ற மூன்று நட்சத்திரங்களின் கிரணங்கள் இறைவன் பாஸ்கர பூஜையை ஏற்கும்போது அதில் ஐக்யமாவதால் இந்த நட்சத்திர கிரண சக்திகளும் மேற்கண்ட பாஸ்கர பூஜை பிரசாதமாக ஸ்ரீமல்லிகார்ஜுன மூர்த்தியால் அளிக்கப்படுகின்றன என்பதே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் தெய்வீக விந்தையாகும்.

சமர் என்றால் போர் என்று பொருள். முள்ளம்பன்றிகளின் மேல் உள்ள முட்களும் சமர் என்று அழைக்கப்படும். இந்த முட்களின் விசேஷத் தன்மை என்னவென்றால் இவை மனிதர்களின், விலங்குகளின் உடலில் தைத்து விட்டால் இவற்றை எளிதில் பிடுங்கி விட முடியாது. அறுவை சிகிச்சை மூலம்தான் இவற்றை வெளியேற்ற முடியும். இதுவே சமராதித்ய சூரிய கிரணங்களின் தன்மை. சமராதித்ய கிரணங்களின் சக்தியை ஒருவர் பெற்று விட்டால் அவரிடம் உள்ள தீய குணங்கள் முழுவதும் மறையும் வரை அந்த கிரண சக்திகள் அவர் உடலை விட்டு அகலாது. இதுவே ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரர் அருளும் அனுகிரகத்தின் அபூர்வ சக்தியாகும்.

சுயம்பு லிங்க மூர்த்திகளைப் போல நம் சற்குரு போன்ற உத்தம மகான்களும் தங்கள் மேல் நிலைகொள்ளும் சூரிய கிரண சக்திகளை இந்த பிரபஞ்சத்திற்கு அர்ப்பணித்து அற்புத சேவை ஆற்றுவது உண்டு. திருக்கோஷ்டியூர் திருத்தலத்தில் ஸ்ரீராமானுஜர் எட்டெழுத்து மந்திர கீதத்தை ஓதி பக்தர்களுக்கு அருள்புரிந்ததைப் போல் நம் சற்குருவும் இத்தலத்திற்கு எழுந்தருளியபோது இத்தலத்தில் அமைந்துள்ள சர்வக்ஷேம விமானத்தில் தோன்றிய சக்திகளை சூரிய கிரணங்களுடன் இணைத்து அந்த சக்திகளை எல்லாம் இத்திருத்தலத்தை வலம் வரும்போது தன் திருக்கரங்களில் ஏந்திய பெருமாள் பிரசாதமாக அளித்த விந்தையை உடனிருந்து அனுபவித்தோர் இன்றும் பரமானந்தத்துடன் நினைவு கூர்வர்.

எண் 2004ல் இந்த இரண்டு ஆகர்ஷண சக்திகளுக்கும் இடையில், அதாவது இரண்டு பூஜ்யங்களுக்கு இடையே, கிரக சந்தி (சாந்தி) ஏற்படுகின்றது. கிரக சந்திகள், கிரக சாந்தி சக்திகளைப் பெற்றுத் தந்திட, பல வழிபாட்டு முறைகள் உண்டு. அந்தந்த கிரகங்களின் தன்மைகளுக்கேற்ப இவை பல்வகைப்படும். இங்கு, சந்திரனால் ஆகர்ஷிக்கப்பட்ட பூஜ்யத்திற்கும், ராகு கிரகத்தால் ஆகர்ஷிக்கப்பட்ட பூஜ்யத்திற்கும் இடையே உள்ள சந்தி, பரங்கிரிச் சந்தி எனப்படும்.

கடந்த இதழில் அளித்துள்ளது போல, மதுரை கல்லுப்பட்டி அருகே உள்ள மேலைப் பரங்கிரி (பேரையூர்) மலையில் உள்ள ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரர், பூஜ்ய சக்திகளைப் பிரபஞ்சத்திற்கு அருளும் பெரிய லிங்க வடிவினர். ‘பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்’ என்பது போல், பரமபதம் என்பதில் பரம் என்பது பரிபூரணமான இறைமையின் பூஜ்ய சக்திகளைக் குறிப்பதாகும். கிரி என்பது மலையாகும்.

திருஅண்ணாமலை
திருஅண்ணாமலை

வட்டமான பூஜ்யத்தில் மேல் பகுதியே பரங்கிரி, பூஜ்யத்தின் கீழ்ப் பகுதி அடிவாரம் ஆகும். இதை ஒட்டித்தான் திருஅண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் ஆலயத்திற்குப் பின்புறத்தில், மலைக்கு மறுபுறம் அடி அண்ணாமலை அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கிட்டும் பல முக்கியமான அருணாசல தரிசனங்களில் முக்கியமானவை மல்லிகார்ஜுன தரிசனம், பூஜ்யஸ்ரீ தரிசனங்களாம், அனைத்துச் சுயம்பு மூர்த்திகளின் ஆதாரத் தலமாக அருணாசல மலை துலங்குவதால், மல்லிகார்ஜுன தரிசனத்தில் உற்பவிப்பவையே உலகெங்கும் உள்ள சுயம்பு மல்லிகார்ஜுன சுயம்பு லிங்க மூர்த்திகள் ஆவர். பகவத்பாதாள் ஸ்ரீஆதிசங்கரர் அருணாசல கிரிவலத்தில் அடி அண்ணாமலையில் கிட்டும் மல்லிகார்ஜுன தரிசனப் பகுதியை நோக்கி அமர்ந்து பெருந்தவம் புரிந்தார். பூரண பூஜ்யத்தில், பூஜ்யஸ்ரீ தரிசனத்தை இங்கு அவர் அடைந்ததுடன், இதன் பலனாய் பூர்ண சூக்த மந்திரங்களையும், சக்திகளையும் நமக்குப் பெற்றுத் தந்தார்.

“பூர்ணமத பூர்ணமிதம்
பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய
பூர்ணமே வாவசிஷ்யதே”

என்பது பூர்ண சூக்த உபநிஷத் மகாமந்திரமாகும்.

“இனிப்புப் பூரணத்தில் எப்பகுதியைக் கிள்ளி எடுத்தாலும் அதன் இனிப்புத் தன்மை குறைவதில்லை! இதே போலவே அமிர்தமய இறைமை நிறைவுடன், எக்குறைவு இன்றிப் பிரபஞ்சமெங்கும் நிறைந்துள்ளது.”

எனவே 2004ம் ஆண்டில் பூஜ்யஸ்ரீ சக்திகள் நிறைந்த அடி அண்ணாமலை, மேலப்பரங்கிரி போன்ற தலங்களில் வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும்.

திருஅண்ணாமலையில் 2004ம் ஆண்டில் 10, 20, 30 என்ற பூஜ்ய சக்தி நாட்களில் கிரிவலம் வந்து, அடி அண்ணாமலையில் பூஜ்யஸ்ரீ மலை தரிசனம், மல்லிகார்ஜூன மலை தரிசனம் கண்டு, மேற்கண்ட பூர்ண சூக்த மாமந்திரம் ஓதி, பூரண வகை இனிப்புப் பண்டங்களான கொழுக்கட்டை, சுய்யம், போளி போன்றவற்றைத் தானமாக அளித்து வருவோருக்கு, வாழ்வில் கல்வி, சொத்து, தொழிலில் தடைப்பட்டுள்ள நற்காரியங்கள் சித்தியாகும்.

பூஜ்யம் என்றால் ஒன்றும் இல்லாதது என்று பொருள் அல்லவா! பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பூஜ்யங்கள், பூஜ்ய வடிவுடைப் பொருட்களை உருவாக்குவதற்கு ஸ்ரீசாகம்பரி தேவிக்கு அனுகிரகம் செய்த மூர்த்தியே (பேரையூர்) மேலப் பரங்கிரி ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரர்! வட்ட வடிவம் உடைய அனைத்துக் கோளமூர்த்திகளும் தினமும் வழிபடுகின்ற மூர்த்தி. ஜோதிடம், வான சாஸ்திரம், நியூமராலஜி, ஜாதகப் பொருத்தம் மற்றும் எண் சாஸ்திரம், சகுன சாஸ்திரங்களில் வல்லமை பெற வேண்டுவோர் திங்கள், பிரதோஷ நாள், மற்றும் 10, 20, 30 ஆகிய பூஜ்யத் தேதி நாட்களில் வழிபட்டு வர, தீர்க தரிசன சக்திகளைப் பெறத் துணை புரியும் பூஜ்ய சிவபதத் தலமே மேலைப் பரங்கிரி.

கம்ப்யூட்டர் என்பது 0வாகிய பூஜ்யத்தை மூலமாக வைத்துப் பணி ஆற்றுவதால், திருச்சி – திருஎறும்பீஸ்வரர் தலம் போல, கம்ப்யூட்டர் துறையில் இருப்பவர்கள் வழிபட வேண்டிய உன்னதத் தலங்களில் மேலைப் பரங்கிரியும் ஒன்றாம்.

வருங்காலத்தில் மேலைப் பரங்கிரித் (பேரையூர்) திருத்தலம், பூஜ்யவாரித் திருத்தலமாக மகிமை பெற உள்ளது. பேரையூர் எனப் பல ஊர்கள் உண்டு. நன்கு கவனித்து அறியவும். புதுக்கோட்டை – குழிபிறை – பொன்னமராவதி மார்கத்தில் உள்ள மற்றொரு பேரையூர், நாக தோஷங்கள், கால சர்ப்ப தோஷங்களை நீக்கும் தலமாகும். நாம் இங்கு குறிப்பது மதுரை – கல்லுப்பட்டி அருகே உள்ள பேரையூர் எனும் மேலைப்பரங்கிரி ஆகும்.

பொதுவாக, ஆன்மீகத்தில், ஆண் அல்லது பெண், கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதைத் தார்மீக ரீதியாக ஏற்பதில்லை. எந்த இயற்கையையும் தடுக்க இனிமையான இறைமையானது எப்போதும் ஒப்புவது கிடையாது. இதற்குப் பரிகாரம் பெறுதலும் மிக மிகக் கடினமே. ஜீவ விந்துக்கள் “பூஜ்ய வடிவில் பூஜ்யத்தின் ஜீவ த்வனியில்” இருந்து தோன்றுவதால், அறிந்தோ, அறியாமலோ பிள்ளைப் பிறப்பைச் செயற்கையான முறையில் தடை செய்தவர்கள், இதற்குக் காரணமான மருத்துவர்கள், தக்க முறையில், மேற்கண்ட இரண்டு பேரையூர்த் தலங்களிலும், பஞ்சமித் திதியில் ஒரே நாளில் வழிபட்டு வாழை இலை நிறைய அன்னதானம் செய்து வருவதால், இதுவரையில் பிறப்புத் தடையால் பெருகி உள்ள மாமலை போலான கர்ம வினைகள் சந்ததிகளைத் தாக்காது ஓரளவு கழியவும், ஓரளவு பரிகார வழிகளும், அவரவர் பித்ருக்கள் அனுமதித்திடில் ஓரளவு காட்டப் பெறும். ஆனால் இது அவ்வளவு எளிதன்று. மேலும் செயற்கைக் கருச்சிதைவிற்குப் பரிகாரமே கிடையாது.

அரிய பலன்களைத் தரும் சந்தனக் குழம்பு அபிஷேகம்

ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரருக்கு மிகவும் ப்ரீதியான அபிஷேகமாக விளங்குவது சந்தனக் குழம்பு அபிஷேகமாகும். வில்வம், வன்னி, மகிழம்பூ, துத்தி போன்ற மூலிகைத் தளங்கள் ஊறிய இலைத் தீர்த்தம், கங்கை, யமுனை, காவேரி போன்ற புண்ணிய தீர்த்தங்களைக் கொண்டு, சந்தனத்தை அரைத்துக் குழம்பாக்கி அபிஷேகித்து, சுவாமியை வழிபட வேண்டிய ஸ்ரீவாஞ்சியம், தேரழுந்தூர், திருச்சி – குளித்தலை – அய்யர்மலை அருகே உள்ள சிவாயம், திருப்பத்தூர் அருகே திருக்கோளக்குடி போன்ற சந்தனாமிர்த சக்தித் தலங்கள் சில உண்டு. இத்தலங்களில் மூலவருக்கும், நவகிரகங்களுக்கும், சந்தனக் குழம்பு அபிஷேகத்துடன், சப்தமித் திதி நாட்களில் குறைந்தது ஆயிரம் பேருக்காவது, தம்பதிகள் தம் கைப்பட அன்னதானம் செய்து வழிபட்டு வர, குறைந்த சந்ததிகளுடன் நிறைவற்று இருக்கின்ற குடும்பப் பாரம்பரியம், நன்கு விருத்தியாகத் தடையாக இருக்கும் பித்ரு சாபங்கள், காலசர்ப்ப தோஷங்கள் தணியப் பரிகார வழிகள் கிட்டும்.

பொதுவாக வளையல், சதங்கை, சிலம்பு, திருவெண்டயம், ம்ருதுள மணி கங்கண், ஸ்திர கங்கண், தீனக் காப்பு, ருத்திராட்சம், மோதிரம், கடுக்கன், தோடு, மூக்குத்தி போன்ற வட்ட வடிவமான ஆன்மீகச் சாதனங்களை அணிந்து திருஅண்ணாமலையில் கிரிவலம் வருதல் விசேஷமானதாக, காரிய சித்திகளைத் தருவதாகத் துலங்குகின்றது.

(பெரிய) லட்டுத் தான மகிமை

பொதுவாக வட்ட வடிவமாக உள்ள பண்டங்கள், பொருட்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இவை ஒவ்வொன்றும் லௌகீகமாகவும், ஆன்மீக ரீதியாகவும் அளப்பரிய பலாபலன்களை அளிக்கவல்லவை. இதில் லட்டு தானம் என்பது மிகச் சிறந்த நல்வரப் பலன்களைத் துரிதமாக அளிக்க வல்லதாகும். அனைத்து நவகிரகங்களுமே வட்ட வடிவைக் கொண்டு இருக்கின்றமையால், பூமியில், பரவெளியில் உள்ள வட்டமான நட்சத்திரங்களின், வட்ட கிரகங்களின், வட்டப் பொருட்களின் ஆகர்ஷண சக்திகளை ஈர்க்க வல்லவையாம்.

“கோளத்தின் கோளம்
கோலத்துள் கோலம்
கோழம்பக் கோழம்
கோளகோமல் கோபிதமாய்
கோமள லட்டூகமாய்க் கொழியுமே!”

-என்ற பரிபாஷைச் சூத்திரமானது ழ, ள, ல வின் அட்சர மேன்மைகளையும், லட்டுக் கோள வடிவிற்கும், பூஜ்யத்திற்கும் உள்ள ஆன்மீகப் பிணைப்பையும் குறிக்கின்றது. எனவே ழ, ள, ல ஆகிய மூன்று எழுத்துக்களும் இணைந்து வரும் சொல்லுக்கு அதிமகா சக்திகள் உண்டு. இந்த ழளல யோக சக்திப் பிரவாகத்தைத் திருப்புகழில் அருணகிரிநாதர் அற்புதமாகக் கையாண்டு உள்ளார்.

ஜெயவர்த்திக சக்திகள்

“வழிவளாகக் கோயில், கள்ளழகலோகம், கோமள லட்டூகக் கொழியல்” என்பது போல, தார்மீக அர்த்தங்களுடன், ஒரு தமிழ் வார்த்தையில் அல்லது சொற்றொடரில் ல, ழ, ள என்ற மூன்று எழுத்துக்களுமே அமைவது வ(வா)ர்த்திகம் ஆகும். இது மட்டுமல்லாது இந்த வ(வா)ர்த்திகத்தில் உள்ள மூன்று லழள வகை அட்சரங்களுமே, அர்த்தம் தருவதில் ஒரு வட்ட வடிவப் பொருளுடன் அர்த்தப் பிணைப்பைக் கொண்டிருந்தால், அது ஜெயவர்த்திகமாக மாறி, அப்பொருட்களின் தெய்வீகச் சிறப்பினை விருத்தி செய்கின்றன. இதுவே ழளல யோகம் எனப்படும்.

ஜெயவர்த்திக சக்தித் தலத்துள் ஒன்றாக விளங்குவதே தஞ்சாவூர் – பாபநாசம் இடையில் உள்ள தாழமங்கைத் தலமாகும். தமிழுக்கே உரித்தான ‘ழ’கர அட்சரம் பிறந்த தெய்வீகத் தமிழ்த் தலம். இங்கு சந்திர நட்சத்திர நாட்களில் (ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம்) சந்தனக் குழம்பு அபிஷேகத்துடன், பெரிய லட்டுகளைப் படைத்துத் தானமாக அளித்துப் பூஜித்து வர, கல்வியில் நல்ல வெற்றி கண்டும் தகுந்த வேலை கிடைக்காமை, நல்ல திறமை, அனுபவம் இருந்தும் கூடுதல் சம்பளம், பதவி உயர்வு, விருது கிட்டாமை, கோர்ட் வழக்கில் வெற்றி அடைந்தும் பலன் இல்லாமை போன்ற குறைபாடுகள் நீங்கும்.

பெயர் மாற்றலா? யோசியுங்கள்!

கோளம், கோலம், கோழம் ஆகிய மூன்று சொற்களுமே பூஜ்யத்துடன் நெருங்கிய ஆன்மீகத் தொடர்பு கொண்டவை. இம்மூன்று சக்திகளும் பூஜ்யத்தின் பல சிறப்பு அம்சங்களை நமக்கு ஈர்த்துத் தருகின்றன. எண்களை மதியாது, அவற்றைத் தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் எண் வகையிலான தோஷங்கள் நம்மைப் பற்றாமல் இருக்க நாம், முதலில், பூஜ்ய சக்திகளை நன்றாக விருத்தி செய்து கொள்ள வேண்டும். இதற்கு வட்ட வடிவக் கோலங்களை, ஆலயங்களில், இல்லங்களில் இட்டு வழிபட வேண்டும்.

தேவை இல்லாமல், பெயர் மாற்றம் செய்யக் கூடாது. இதிலும் தெய்வ மூர்த்தியின் பெயரைக் கொண்டவர்கள், பெரியோர்கள் அளித்த நல்ல சக்தி வாய்ந்த இறைநாமப் பெயரைக் கொண்டவர்கள். தம் பெயரை மாற்றும் முன் மிக, மிகக் கவனமாக இருக்க வேண்டும். இதில் ஜோதிடர்களும், எண் கணிதக் கணிப்பினரும்., (numerologists) எண் தோஷங்கள், நாம தோஷங்களைப் பெற்றிடாது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கரணம் தவறினால், அட்சரண தோஷங்கள் சேரும்.

இயன்றவரை, பெயரில் உள்ள நாம அட்சரங்களை (spelling changes, the divine way) எண் சக்திகளுக்கு ஏற்ப அமைத்துக் கொண்டு, இறைநாமப் பெயர்களை மாற்றாது இருப்பதே சிறப்புடையது.

ல, ள, ழ இவை மூன்றும் கூடிய அட்சரங்களால் ஜீவன்களுக்கு நன்மைகளைப் பெற்றுத் தரவும். எண்களை அவமதிப்பதால் உண்டாகும் தோஷங்களால் மக்களுக்கு எந்தவிதமான கஷ்டமும் ஏற்படக் கூடாது என்பதற்காகவும், 2004ல் கோளம், கோலம், கோழம்ப சக்திகள் கூடிய, பூஜ்ய சக்திகள் நிறைந்த மேலைப்பரங்கிரி மலைத் தல வழிபாடு நிர்ணயிக்கப்படுகின்றது. குறிப்பாக பூஜ்யஸ்ரீ என்று அழைக்கப்படுவோர் இங்கு வழிபடுவதன் மூலம் உத்தம மகரிஷிகளின் ஆசிகளையும், உத்தம தெய்வீக நிலைகளையும் பெற்றிடலாம்.

ஜோதிடர்கள் அனைவரும் வழிபட வேண்டிய திவ்ய மூர்த்தியே (பேரையூர்) மேலைப்பரங்கிரி ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரர். சப்போட்டா, சாத்துக்குடி, மாதுளை போன்ற வட்ட (பூஜ்ய) வடிவப் பழங்களின் சாற்றால் அபிஷேகம் செய்து வழிபட்டு, அபிஷேக நீரைக் கோமுகத் தீர்த்தப் பிரசாதமாகப் பெற்றுத் தினமும் அருந்தி வருவதால் ஜோதிடக் கணித அறிவு விருத்தி ஆகும். சித்தர்கள் பூஜ்யத்தைப் பற்றி அளிக்கின்ற விளக்கங்கள் வேறு. ஆனால் கணித விஞ்ஞானம் தற்போது அவற்றை ஏற்காது. எனினும் வருங்காலத்தில் பூஜ்யத்தின் தெய்வீக மதிப்புப் பற்றி அறிந்து, தற்போதையப் பூஜ்யக் கணித விளக்கங்களை மாற்றி அமைத்துப் புதுக் கணித விளக்கங்கள் எழும். அப்போதுதான் பூஜ்யத்தின் உண்மையான ஆன்ம சக்தியை மனித சமுதாயம் உணரும் நன்னிலை உண்டாக இருப்பதாகச் சித்தர்கள் குறிக்கின்றனர். இதற்குள் மேலைப்பரங்கிரித் (பேரையூர்) திருத்தலம் நன்கு பிரசித்தி பெற்று விடும்.

பெயர் மாற்றம் கொண்டவர்கள், மேலைப் பரங்கிரியில் அடிக்கடி வழிபட்டு வர வேண்டும். இதனால் பெயர் மாற்ற தோஷங்கள், அட்சரவழி தோஷங்கள் அகல வழி பிறக்கும். அட்சரவழி தோஷமெனில் அழகான, சக்தி வாய்ந்த பெயரைச் சுருக்கி அட்சரங்களை வெட்டுவதால் ஏற்படும் தோஷங்கள் ஆகும் (உ-ம் வெங்கடசுப்ரமணியன் – வெங்கட்), நல்ல இறைநாமத்தைக் கர்நாடகமாக, பழங்காலப் பெயராக இருக்கிறது என்று அட்சரங்களை வெட்டி, modern ஆக இருக்க வேண்டும் என்பதற்காக அர்த்தமில்லாத, அல்லது negativeவாக, தீயசக்தி நிறைந்ததாக மாற்றுவதும் பலத்த அட்சர தோஷங்களுக்கு ஆளாக்கும்.

இங்கு பூஜைகள் நன்கு நடைபெற பக்தர்களும், ஜோதிடர்களும் தகுந்த இறைப் பணிகளை நிறைவு பெறச் செய்து, மனித சமுதாயத்திற்கு அருள்வளம் நிறைந்த ஆலயத்தைச் சமுதாய வழிபாட்டிற்கு அளித்திட அரும்பணி ஆற்றுதல் பெறுதற்கரிய பாக்யம்தானே!

ஓம் ஸ்ரீகுருவே சரணம்!
யதாஸ்தானம்
om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam