கந்த சஷ்டிக்குரித்தான ஆறுநாட்களும் விரதமிருந்து ஸ்ரீசுப்ரமண்ய அஷ்டோத்திரம், த்ரிசதி, சஹஸ்ரநாமம், திருப்புகழ், கந்த சஷ்டிக்கவசம், ஸ்ரீபாம்பன் சுவாமிகள் அருளிய சண்முகக் கவசம், பகை கடிதல், கந்தர்கலிவெண்பா, கந்தரனுபூதி போன்றவற்றைப் பாராயணம் செய்திட, கோழைத்தனம் விலகிப் பகைவர்களால் வருந்துன்பங்கள் மறைந்து அற்புதமான முறையில் மனோதைர்யம், வீடு, வாகன வசதிகள் கிட்டும். தன்னால் உண்மையான மனத்துடன் பூஜை செய்ய முடியவில்லையே என ஏங்குவோர்க்கு கந்த சஷ்டி உற்சவத்தின் ஆறு நாட்கள் விரதமானது கைமேல் பலனளிக்கும். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் குலதெய்வ வழிபாட்டோடு இஷ்ட தெய்வ மூர்த்தி ஒன்றையுந் தேர்ந்தெடுத்து அம்மூர்த்தியைத் தினந்தோறும் பூஜிக்க வேண்டும். ‘ஒருவனே தேவன்’ என்பது உண்மையே. ஆனால் ஒருமுகப்பட்ட நிலையில் இறைவனை வழிபடும் உயர்ந்த நிலை கிட்டும்வரை ஒரே தேவனைப் பல உருவங்களில் வழிபடுதலே இறைவனை அடையும் எளிய வழி ஆகும். பெரும்பான்மையான ஆத்திகப் பெருமக்கள் ஸ்ரீமுருகப் பெருமானையே இஷ்ட மூர்த்தியாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
‘அப்பனே முருகா! காப்பாத்துடாப்பா’ என்று உரிமையோடு நாம் பேசுகின்ற தெய்வ மூர்த்தி முருகப் பெருமானே! ‘முருகா! ஏண்டாப்பா இவ்வளவு சோதனை தந்து கஷ்டப்படுத்துறே’ என்ற வாத்ஸல்யத்துடன் சிநேக பாவனையில் நாம் உரிமையோடு பேசக்கூடிய தெய்வம் கந்தவேளே!
‘சூர சம்ஹாரம்’ எனில் நம்மிடம் குடி கொண்டிருக்கும் கோபம், லோபம், மதம், மாச்சரியம், விரகம், பொறாமை, பகைமை போன்ற அசுரகுணங்கள் சம்ஹரிக்கப்பட வேண்டியவையாகும் என்பதையே உணர்த்துகிறது. ஆறு நாட்களிலும் ஆறுமுகப் பெருமானின் ஆறு சிரசுகளும் விதவிதமான அனுகிரஹங்களை அருள் பாலிக்கின்றன. நம்மிடம் உள்ள அசுர குணங்களைச் சம்ஹாரம் செய்தால் தான் உண்மையான பக்தியைப் பெறுவோம். இறை தரிசனம் பெறுவோம், பிறவிப்பிணி அகலும். இம் மூன்றையும் ஒருங்கே தரவல்லது குருவருளே. குருகுஹனாகிய குமரப் பெருமானே சற்குருமார்களாக எங்கும் வியாபிக்கின்றார். தந்தைக்குபதேசித்த ஞானத் தந்தையாம் வடிவேலன் எளிமையான பூஜையிலேயே மகிழ்வடைகின்றான்.
ஆறுநாள் கந்தசஷ்டி விரதத்தினை வருடந்தோறுங் கொண்டாடிட நம்மிடம் உறையும் சூரபதுமஅசுர குணங்களை எளிதில் வென்று பிறவிப் பிணியை சம்ஹாரம் செய்யும் வழி காணலாம். நவராத்திரி பூஜை, கந்த சஷ்டி விரதம், தீபாவளி, பொங்கல், மாளய பட்ச தர்ப்பணங்கள் போன்ற பல பண்டிகைகளும் தான தர்மங்களுடன் கூடிய பூஜைகளையே உன்னத பக்தி நிலை தரும் மார்கம் என வலியுறுத்துகின்றன. தான, தர்மங்களும் இறைப் பணிகளுமே பல தீய குணங்களை அழித்துக் கர்மவினைகளைப் போக்கித் தூய மனதை பக்தி நெறிக்கு மூலதனமாக்குகின்றன.
ஆறு திதிகளில் முதல் திதியான பிரதமைக்குரிய பூஜையில், தாயை இழந்தவர்கள் தன் தாய் உயிரோடிருந்தால் என்ன வயதாகியிருக்குமோ குறைந்தது அத்துணை வருடங்கள் பழைமையான திருக்கோயிலைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். உதாரணமாக இவ்வருடம் தன் தாய் உயிரோடிருந்தால் 80 வயது ஆகியிருக்கும் என்று கணக்கிட்டால் 80 வருடங்களுக்கு மேல் தொன்மையான கோயிலைத் தேர்ந்தேடுத்தல் வேண்டும். 60, 65, 71, 82 ...... என்றவாறு தாயின் வயதமைந்திருந்தால் முதல் இலக்கத்தைக் கொண்டு 7 அல்லது 8 புடைவைகளை தானமாக அக்குறிப்பிட்ட கோயிலில் ஏழைகளுக்கு அளிக்க வேண்டும். ரவிக்கை துணி, உள்ளாடைகளோடு சேர்த்துத் தானமளித்தல் விசேஷமானதாகும். இவ்வாறு தானம் செய்திட, இறந்த தாய் மேற்கண்ட தானத்தைப் பெறுபவர்களாக உருக்கொண்டு அல்லது தானத்தைப் பெறுபவர்களின் உருவத்தில் ஆவாகனமாகி தானத்தைப் பெற்று நிறைந்த ஆசிகளை வழங்கிச் செல்கின்றனர். ‘மேலுலகில் இருந்து தன் தாய் நேரடியாகவே ஆசி வழங்குதல் கூடாதா’ என்று கேட்டிடலாம். மேலுலகம் சென்றவுடன் அத்தாய் ஆன்மாவிற்கு இப்பிறவிப் பிள்ளைகள் மட்டுமின்றி எத்தனையோ பிறவிகளில் பெற்ற ஆயிரமாயிரம் பிள்ளைகளைக் கவனித்து ஆளாக்கி ஆசீர்வதிக்கின்ற பெரிய பொறுப்பு அமைகின்றது. ஏழைகளுக்குச் சேவைகள் புரிந்து நல்வழியில் நடக்கும் சந்ததியினருக்கு மிகுந்த ஆசீர்வாதங்களை அருள்கின்றனர். இவ்வாறாகத் தர்ப்பணங்கள், தான தர்மங்கள் செய்வோர்க்கே இறந்த தாயின் பரிபூரண ஆசிகள் கிட்டும்.
தற்காலத்தில் தர்ப்பணங்கள் முறையாகச் செய்வது அருகிவிட்டமையால் மேற்கண்ட முறையில் சித்தர்கள் அருள்கின்ற தானங்களே தக்க பரிகாரங்களாக அமைந்து பித்ருக்களின் சாபங்களிலிருந்து அவர்தம் வம்சா வழியினரைக் காப்பாற்றுகின்றது.
பொதுவாக அமாவாசையன்று அனைத்துப் பித்ருக்களும் பூலோகத்தில் கடல் ஆறு, கோயில்கள், குறித்த தீர்த்தங்கள் போன்றவற்றில் கூடித் தர்ப்பணங்களை நேரடியாகப் பெறுகின்றனர். ஏனைய இடத்தில் செய்யும் தர்ப்பணங்களை ஸ்வதா என்னும் தேவி பெற்றுச் சென்று பித்ரு லோகத்தில் சமர்ப்பிக்கின்றாள்.. திருவிடைமருதூர், காசி, திருவள்ளூர், கும்பகோணம் சக்கரப் படித்துறை, கயா, பிரயாகை, திருப்புல்லாணி – தர்ப்பசயனம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி மற்றும் இதர புண்ணிய நதிகள், தீர்த்தங்கள், சமுத்திரங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களை ஸ்வதா தேவி இத்தலங்களில் கூடுகின்ற பித்ருக்களிடம் நேரடியாகவே அளிக்கின்றாள். இத்தலங்களில் பித்ருக்களின் மூர்த்திகளின் ஆசி பன்மடங்காகப் பெருகி இத்திருத்தல தெய்வ மூர்த்திகளின் திரண்ட அனுக்ரஹத்தையும் பெற்றுத் தருகிறது.. அமாவாசைக்குப் பிறகு பித்ருக்கள் தங்களுடைய ஆன்மீக முன்னேற்றத்திற்காக தெய்வ தரிசனத்திற்காகப் பல பூஜைகளையும், தங்களுடைய வம்சாவழியினரைக் கரையேற்றுவதற்காக அவர்கள் மூலம் தான தருமங்களையும் ஆற்றுகின்றனர். இவ்வகையில் தாய்வர்கத்தைச் சேர்ந்த பித்ருக்கள் சுக்ல பக்ஷ ப்ரதமைத் திதியில் (அமாவாசைக்கடுத்த ப்ரதமைத் திதியில்) சந்திர மண்டலத்தில் ஹோம, யாக, வேள்விகளை நட்த்த ஸ்ரீபரமசிவனின் சிரஸில் ஒளிரும் பாக்யம் பெற்ற ஸ்ரீநட்சத்திர பூஷண சந்திர பகவானைத் துதிக்கின்றனர். ஜன்ம நக்ஷத்ரத்திற்கும், சந்திர கிரஹத்திற்கும், நெருங்கிய தொடர்புண்டு. எனவேதாம் ப்ரதமைத் திதியில் தாய்வர்க்கப் பித்ருக்கள், தம் வம்சாவளியினருக்காக சந்திர பகவானிற்குப் பூஜைகள் செய்கின்றனர். இத்திதியில் மேலே கூறியவாறு குறித்த காலத் தொன்மையுடைய கோயில்களில் செய்யும் தான தர்மங்கள், சந்திர பகவானையும் தாய் வர்கப் பித்ருக்களையும் திருப்திப்படுத்தும்.
இறந்த தந்தையின் வயதுகால அளவிற்கேனும் தொன்மை பெற்ற பெருமாள் கோயிலைத் தேர்ந்தெடுத்து அவருடைய தற்போதைய வயதின் முதல் இலக்கத்திற்கேற்ப எண்ணிக்கையிலான வேஷ்டி சட்டை துண்டுகளைத் தானமாக அளிக்க வேண்டும். (உம்) 1992ல் 81 வயதில் காலமான தந்தைக்குத் தற்போது (1994ம் வருட கந்த சஷ்டியில்) 83வயது ஆகியிருத்தலால் அவர்தம் வம்சாவழியினர் எட்டுப் பேருக்கு வேஷ்டி, சட்டை, துண்டு (பெருமாள் கோயிலில்) தானமளிக்க இறந்த அத்தந்தையர் திருப்தியடைந்து ஆசிகள் வழங்குவர். மேலும் தந்தைவழிப் பித்ருக்கள் மேற்கண்ட துலாமாத சுக்லபக்ஷ த்விதியைத் திதியன்று பெருமாள் கோயிலில் மேற்கூறியவாறு அளிக்கப்படும் தானங்கள் தந்தை வழிப் பித்ருக்களையும், ஸ்ரீசூர்ய நாராயண ஸ்வாமியையும் திருப்தியடைவிக்கச் செய்வதால் அவர்கள் ஆசி நமக்கு எளிதில் கிட்டும். இதனால் தீர்க்கமான அறிவு, நல்ல சந்ததியும் உண்டாகும். மேற்கண்ட ப்ரதமை திதியில் தாய்க்குப் பிடித்தமான உணவினையும் அரிசியால் ஆன உணவு உப்புமா ஆகியவற்றைத் தானம் செய்தல் வேண்டும்.
த்விதியைத் திதியில் தந்தைக்குப் பிடித்தமான உணவினையும் அல்லது கோதுமையால் ஆன உணவு/ உப்புமா ஆகியவற்றைத் தானம் செய்தல் வேண்டும்.
இத்திருதியைத் திதியில் இறந்த தன் சகோதரியின் (தற்போதைய வயதைக் கணக்கிட்டு) அவ்வயதுள்ள ஏதேனும் ஒரு பெண்ணிற்கு சப்த கன்னிகள், கன்னியாகுமரி, கன்யா பரமேஸ்வரி போன்ற கன்னித் தெய்வங்கள் எழுந்தருளியுள்ள கோயிலகளில் இயன்ற தான தர்மங்கள் செய்ய வேண்டும். கன்னிப் பெண்ணாயிருப்பின் தாவணி, குங்குமம், மஞ்சள், வளையல் செட் அளித்தல் விசேஷமானதாகும். இதனால் பிள்ளைகள்/பெண்களுக்கு எவ்விதத் தடங்கலுமின்றித் திருமணம் கைகூடும். தம் பெண் குழந்தைகளைப் பற்றிய கவலைகள் தணியும்.
எங்கும் சிவலிங்க மூர்த்திகளைச் சுற்றியிருக்கும் நாக தேவதைகட்கு நாகராஜ தேவதைகள் என்று பெயர். ஏனைய நாகங்கள் பெண் நாக தேவதைகளாகும். இறந்த தன் சகோதரனுக்காகப் பிரார்த்தித்துச் சதுர்த்தி திதியில் நாகராஜ தேவதைகள் அமைந்துள்ள கோயில்களில் கல்யாணாமாகாத பிரம்மச்சாரிகளுக்கு உணவு, உடை, மருத்துவ உதவி போன்ற இயன்ற சேவைகளைப் புரிந்திடல் வேண்டும். இதனால் பிள்ளைகள் எவ்விதக் கெட்ட பழக்கங்களுக்கும் ஆகாமல் ஒழுக்கத்தோடு வாழ்வர்.
பஞ்சமித் திதியில் 60 வயதிற்கும் மேற்பட்ட சுமங்கலித் தம்பதிகளை ஏதேனும் மலைக்கோயிலுக்கு (திருநீர்மலை, திருக்கச்சூர், த்ரிசூலம், குன்றக்குடி, மலைக்கோட்டை.....) அழைத்துச் சென்று தரிசனம் செய்ய ஆவன உதவிகள் செய்ய வேண்டும். அவர்களை பத்திரமாக அழைத்துச் சென்று வருதல், புடவை, வேஷ்டி அளித்தல், அவர்கட்குக் கண்ணாடி, கைத்தடி போன்றவை அளித்தல், அவர்கட்குப் பிரியமான உணவளித்தல், மனதாரப் பேசுதல் போன்றவை நற்சேவைகளாகும். இதனால் வயதானபின் தம் பிள்ளைகள் நல்ல முறையில் கவனித்து உதவுவர்.
இறந்த தன் சகோதரனுக்காக இத் திதியில் காவடி எடுத்தல், தீமிதித்தல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்ற முருக பக்தர்களுக்கு இயன்ற பண உதவி, தாக சாந்தி, சந்தனம் அரைத்துக் கொடுத்தல், தைலமளித்தல் போன்ற சேவைகளைச் செய்தல் வேண்டும். இத்தகைய ஆறு வகையான சேவைகளையே ‘கந்தசஷ்டி விரதம்‘ எனச் சித்தர்கள் போற்றுகின்றனர். உபவாசம், பூஜை முறைகளை அனுஷ்டிக்க இயலாதோர் மேற்கண்ட தான தருமங்களை நிறைவேற்றிட முறையான விரதத்திற்கீடான பலன்களை இவை அளித்திடும் எனச் சித்தர்கள் அருள்கின்றனர். உபவாசம், நியம நிஷ்டைகளுடன் மேற்கண்ட தான தர்மங்களை நிறைவேற்றிட முருகனின் திரண்ட அருளைப் பெற்று மகிழலாம்.
- தாய், தந்தை சகோதர சகோதரிகள் உள்ளோர் அவரவர் வயதிற்கு ஈடான வறியோர்களுக்குச் சேவை செய்திடல் வேண்டும்.
- சகோதர , சகோதரி இல்லாதோரும் கன்னிப் பெண்கள்/பிரம்மச்சாரிகளுக்கு தான தர்மங்கள் செய்திட வேண்டும்.
- இறையருளால் அனைவருடனும் வசிப்போர் அவரவர் வயதிற்கேற்ற சகோதர, சகோதரிகளின் எண்ணிக்கைக் கேற்ப ஏழைகளுக்கு இயன்ற உதவிகளைச் செய்தல் வேண்டும்.(உதாரணமாக) 2 சகோதரர்களுடனும், 2 சகோதரிகளுடனும் உள்ள ஒருவர் தம் சகோதரர்களின் வயதுள்ள 2 பெண்களுக்கும் சகோதரிகளின் வயதுள்ள 2 ஆண்களுக்கும் தானம் செய்திடல் வேண்டும்.
- இறந்த தாய் தந்தையரின் வயது 100 ஆண்டுகளைத் தாண்டினால் முதல் 2 இலக்கங்களை மூன்றாவது இலக்கத்துடன் கூட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.உதாரணமாக : இறந்த தந்தையின் தற்போதைய வயது 115 என்றால் 11+5=16 என்ற முறையில் கணக்கிட்டு 16 பேருக்குத் தான தர்மங்களைச் செய்திடல் வேண்டும்.
கந்தசஷ்டி விரத தான தருமங்களில் முதல், அல்லது முதலிரண்டு இலக்கங்களைக் கொண்டு தான தருமங்களை நிர்ணயிப்பதின் தாத்பரியம் என்ன? ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஒவ்வொரு 10 ஆண்டும் ஒவ்வொரு பருவத்தைக் குறிக்கின்றது. பால பருவம், விடலைப் பருவம், இளம் பருவம், நடுப் பருவம் என்றவாறாக பல பருவங்கள் விதிக்கப்பட்டுள்ளன. சத்சங்கத்தில் கூட குறைந்தது 10 ஆண்டுகள் குருவோடு ஒட்டி வாழ்வோருக்குத்தான் பொதுவாக கர்மங்களை உணர்ந்து, தாங்கி வாழ்ந்து வரும் பக்குவம் உண்டாவதாகச் சித்த புருஷர்கள் அருள்கின்றனர். 10 ஆண்டுகள் தொடர்ந்து திருஅண்ணாமலைத் தீப அன்னதானம், 10 வருட சபரிமலை யாத்திரை, 10 வருடம் வருடமொரு முறையாவது காவடி எடுத்தல் என்றவாறாகப் பத்து ஆண்டுகளுக்குச் செய்யும் நற்காரியங்கள் பெரிய விண்ணுலக உயர்நிலைகளையும், அருள் பாக்கியங்களையும் அளிக்கின்றது. இறந்த தன் எண்பது வருடத் தாயாருக்கு கந்த சஷ்டிப்பிரதமைத் திதியில் செய்யும் தான தருமங்களினால் அந்த தேகம் 7 பத்து ஆண்டுகளில் செய்த நற்காரியங்களின் புண்ணிய சக்தி ஆசீர்வாதமாக மாறுகிறது. அதாவது பிள்ளைப் பேறாக, பணவரவாக உயர்ந்த உத்யோகமாக, வீடு, வாகன வசதிகளாக, இவ்வாறான பயன்களைத் தரவல்லதாகும். பத்து, பத்தாம் நாள் கிரியை எனப்படுபவை எல்லாம் பத்தாண்டு கால கர்மவினைப் பாங்கினைத் தான தர்மங்களால் பரிபாலனம் செய்வதையே குறிக்கின்றது.
ஓம் குருவே சரணம்
ஐப்பசி மாத வளர்பிறைப் பிரதமைத் திதியில் தொடங்கி சஷ்டி திதி வரையிலான ஆறு நாட்கள் மிக முக்கியமான கந்த சஷ்டி விரத நாட்கள். 2026 பராபவ வருடத்தில் இவை:
நாள் 2 (துவிதியை): 11 நவம்பர் 2026 (புதன்)
நாள் 3 (திரிதியை): 12 நவம்பர் 2026 (வியாழன்)
நாள் 4 (சதுர்த்தி): 13 நவம்பர் 2026 (வெள்ளி)
நாள் 5 (பஞ்சமி): 14 நவம்பர் 2026 (சனிக்கிழமை)
நாள் 6 (சஷ்டி): 15 நவம்பர் 2026 (ஞாயிறு)
பூவுலகில் வாழும் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த ஆறு நாட்களும் மிகவும் முக்கியமான புண்ணிய காலங்களாகும். ஏனெனில், இந்நாட்களில் பிரபஞ்சம் முழுவதும் “வேலாக்னிச் சக்திகள்” மற்றும் “சஸ்த்ராக்னிச் சக்திகள்” நிரம்பியிருக்கும்.
கலி யுகத்தில் நமது மனதிற்குள்ளும் உடலிலும் மறைந்திருக்கும் அசுர சக்திகளையும் தீய எண்ணங்களையும் அடியோடு அழிப்பதற்குக் கந்த சஷ்டி விரதம் மிகச் சிறந்த ஆன்மீக வழிகாட்டியாகும். இந்நாட்களில் முருகப்பெருமானை வழிபட்டுச் செய்யப்படும் பூஜைகள், சுலோக பாராயணம் மற்றும் அன்னதானங்கள் பன்மடங்கு புண்ணியப் பலன்களை அள்ளித் தரும். சஷ்டி விரதம் இருக்கும் அடியார்கள் தினமும் ‘தேனும் தினைமாவும்’ நிவேதனம் செய்துத் தானம் வழங்குவது அளப்பரிய நன்மைகளை விளைவிக்கும்.
முருகப் பெருமானின் தீவிர பக்தராகத் திகழ்ந்த ஸ்ரீபாம்பன் சுவாமிகளைப் பற்றி அறியாத ஆன்மீக அன்பர்கள் இருக்க முடியாது. சுவாமிகள் சிறு குழந்தையாக இருந்தபோதே, அவரது உள்ளங்கையில் அமைந்திருந்த தெய்வீகக் கைரேகையைக் கணித்த ஒருவர், “இக்குழந்தை சாதாரணமானவன் அல்ல; பிற்காலத்தில் மாபெரும் ஞானியாக விளங்கி உலகைக் காப்பான்” என்று தீர்க்கதரிசனமாகக் கணித்துக் கூறினார். ஸ்ரீபாம்பன் சுவாமிகளின் திருக்கரங்களில் சூட்சுமமான ‘தண்டாயுதபாணி ரேகை’ என்று ஒன்று உண்டு. குகப்பெருமானை நேரில் தரிசித்த மாபெரும் ஞானிகளுக்கு மட்டுமே இத்தகைய தெய்வீக ரேகை வெளிப்படும்.
சுவாமிகள் தனது வாழ்நாள் முழுவதும் முருக உணர்விலேயே மூழ்கி, ‘குக சாயுஜ்ய நிலை’ என்னும் உயர்ந்த முக்தி நிலையை அடைந்து அருள் பாலித்தார். சுவாமிகள் அருளிய அனைத்துச் சுலோகங்களும் எளிய தமிழில் அமைந்திருந்தாலும், அவற்றுள் சக்தி வாய்ந்த ‘பீஜாட்சரங்கள்’ நிறைந்திருக்கின்றன.
முருக நாமத்தின் மகிமையும்
ஸ்ரீபாம்பன் சுவாமிகள் ராமேஸ்வரம் அருகில் உள்ள பிரப்பன்வலசை என்னும் புண்ணியத் தலத்தில் தீவிர தவத்தில் ஈடுபட்டிருந்தபோது, பல துஷ்ட சக்திகளும் எதிர்மறை ஆற்றல்களும் அவரது தவத்தைக் கலைக்க முயன்றன. தொடக்கத்தில் சுவாமிகள் தற்காப்பிற்காகத் தனது கையில் இருந்த ஒரு தடியைப் பயன்படுத்தி அந்தத் தீய சக்திகளை விரட்டினார். ஆனால், ஒரு கட்டத்தில், “முருகப் பெருமானின் திருநாமத்தை விடவும் சக்தி வாய்ந்தது இந்த உலகத்தில் வேறு என்ன இருக்க முடியும்?” என்ற ஆழமான ஆன்மீகச் சிந்தனை அவருக்குள் உதித்தது. மறுகணமே கையில் இருந்த தடியைத் தூக்கி எறிந்துவிட்டு, ஸ்ரீகார்த்திகேயனின் திருநாமத்தை மனதார உச்சரிக்கத் தொடங்கினார். என்ன ஆச்சரியம்! அந்தத் திருநாம அதிர்வைக் கேட்ட மாத்திரத்திலேயே தீயசக்திகள் அனைத்தும் பயந்து ஓடி மறைந்தன.
பிரப்பன்வலசையில் ஸ்ரீபாம்பன் சுவாமிகளுக்கு அகத்தியப் பெருமான், அருணகிரிநாதர் மற்றும் சாட்சாத் முருகப் பெருமான் ஆகியோர் நேரில் காட்சியளித்து அருள்புரிந்த மாபெரும் தெய்வீக நிகழ்வை, இன்றும் திருவான்மியூரில் உள்ள அவரது ஜீவசமாதித் திருக்கோயிலில் அழகிய சுதைச் சிற்பமாகத் தரிசிக்கலாம்.
பொதுவாக, ஸ்ரீசண்முக கவசம் உடலின் நோய்களைக் குணமாக்கவும், ‘பகைக்கடிதல்’ சுலோகம் பகையையும் எதிரிகளையும் வெல்லவும் உதவும் என்று நாம் அறிவோம். ஆனால், இந்த லௌகீகப்பலன்களையும் தாண்டி ஆன்மீக முன்னேற்றத்திற்கு இவை பேருதவியாக விளங்குகின்றன.
சண்முக கவசம் நோய்களைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், உடலின் ஒவ்வொரு உறுப்பிற்கும் அளப்பரிய ஆன்மீகச் சக்தியை வழங்கி, உடலில் உள்ள ஒவ்வொரு அணுவையும் (cell) முக்தி நிலைக்குத் தயார்செய்கிறது. சண்முக கவசத்தில் சுவாமிகள் உடலின் ஒவ்வொரு பகுதியையும் இறைவனுக்கு அர்ப்பணித்திருக்கிறார். நம் உடலையே இறைவனுக்கும் அடியார்களுக்கும் சேவை செய்யும் ஆன்மீகக் கருவியாக மாற்றும் சக்தி வாய்ந்தது இச்சுலோகம்.
அதேபோல், ‘பகை கடிதல்’ சுலோகம், ஆன்மீகப் பாதையில் முன்னேறும்போது குறுக்கிடும் அத்தனை சூட்சுமத் தடைகளையும் அகற்றி வெற்றி பெறச் செய்கிறது. சுவாமிகள் பிரப்பன்வலசையில் தவத்தில் இருந்தபோது, அசுர சக்திகளை எதிர்கொள்ள இந்தச் சுலோகத்தின் வல்லமையையே பயன்படுத்தினார் என்று நம் குருபரம்பரைச் சித்தர்கள் கூறுவர்.
கந்த சஷ்டி விரதத்தின் ஆறு நாட்களிலும் எவ்விதம் சுலோகங்களைப் பாராயணம் செய்ய வேண்டும் என்பதை நம் குருபரம்பரைச் சித்தர்கள் தெளிவாக வரையறுத்துள்ளனர். எந்தவொரு பாராயணத்தைத் தொடங்குவதற்கு முன்பாகவும், தினமும் ‘விநாயகர் கவசம்’ பாடி முழுமுதற் கடவுளாம் கணபதியை வழிபடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகே கீழ்க்கண்ட முறையில் முருகப்பெருமானின் சுலோகங்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.
இந்த இரு நாட்களிலும் ஸ்ரீபாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவச சுலோகத்தை 6/15/108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
இந்தத் திதிகளில், ஆன்மீகப் பாதையில் வரும் சூட்சுமத் தடைகளை அகற்றும் ‘பகை கடிதல்’ சுலோகத்தைத் தினமும் 6/51/108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
விரதத்தின் இறுதி இரு நாட்களிலும், மகா சக்தி வாய்ந்த ‘வேல் மாறல்’ சுலோகத்தைத் தினமும் 5/12/108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
கந்தன் கைப் புனித வேல் சாட்சாத் ஆதிபராசக்தியிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்ட சக்தி வடிவமாகும். சஷ்டி விரதத்தின் ஆறு நாட்களிலும் ஸ்ரீவேல் ஆயுதத்திற்குத் தூய நீரினாலும், பாலாலும், விபூதியாலும் அபிஷேகம் செய்து வழிபடுவது அளப்பரிய நன்மைகளைத் தரும்.
மேலும், வெள்ளி அல்லது பித்தளையிலான சிறிய வேலினை வாங்கி, வேல் மாறல் புத்தகத்துடன் சேர்த்து அடியார்களுக்குத் தானமாகக் கொடுத்துக் கந்த சஷ்டியின் மகிமையையும் வேல் வழிபாட்டின் புனிதத்தையும் அவர்களுக்கு அன்போடு எடுத்துரைக்க வேண்டும். இறைவனின் தெய்வீகச் செய்தியைப் பரப்புவதும் அடியார்களுக்குச் செய்யும் மிக உன்னதமான ஆன்மீகச் சேவையாகும்.
வேல் வேல்! வெற்றி வேல்!
வீர வேல்! ஞான வேல்!
ஸ்கந்த வேல்! சக்தி வேல்!
அருணை வேல்! அக்னி வேல்!
– ஸ்ரீஅகஸ்திய விஜயம், நவம்பர் 2026
ஓம் குருவே சரணம்
அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள (து) ஆகித் தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி எண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆன திண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க.1
ஆதியாம் கயிலைச் செல்வன்அணிநெற்றி தன்னைக் காக்க தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க சோதியாம் தணிகை ஈசன் துரிசுஇலா விழியைக் காக்க நாதனாம் கார்த்தி கேயன் நாசியை நயந்து காக்க.2
இருசெவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க, வாயை முருகவேள் காக்க, நாப்பல் முழுதும்நல் குமரன் காக்க துரிசஅறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ர மணியன் காக்க.3
ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க தேசுறு தோள் விலாவும் திருமகள் மருகன் காக்க ஆசிலா மார்பை ஈராறு ஆயுதன் காக்க, எந்தன் ஏசிலா முழங்கை தன்னை எழில் குறிஞ்சிக்கோன் காக்க.4
உறுதியாய் முன்கை தன்னை உமையிள மதலை காக்க தறுகண் ஏறிடவே என்கைத் தலத்தை மாமுருகன் காக்க புறம்கையை அயிலோன் காக்க, பொறிக்கர விரல்கள் பத்தும் பிறங்கு மால்மருகன்காக்க, பின்முதுகைச் சேய் காக்க.5
ஊண்நிறை வயிற்றை மஞ்ஞை ஊர்த்தியோன் காக்க, வம்புத் தோள்நிமிர் சுரேசன் உந்திச் சுழியினைக் காக்க, குய்ய நாணினை அங்கி கெளரிநந்தனன் காக்க, பீஜ ஆணியை கந்தன்காக்க, அறுமுகன் குதத்தைக் காக்க.6
எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு இறைவனார் காக்க காக்க அம்சகனம் ஓர் இரண்டும் அரன்மகன் காக்க காக்க விஞ்சிடு பொருள் காங்கேயன் விளரடித் தொடையைக் காக்க செஞ்சரண நேச ஆசான் திமிரு முன் தொடையைக் காக்க.7
ஏரகத் தேவன்என்தாள் இரு முழங்காலும் காக்க சீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலைவாய்த்தே காக்க நேருடைப் பரடு இரண்டும் நிகழ் பரங்கிரியன் காக்க சீரிய குதிக்கால் தன்னைத் திருச்சோலை மலையன் காக்க.8
ஐயுறு மலையன்பாதத்து அமர் பத்து விரலும் காக்க பையுறு பழநி நாத பரன், அகம் காலைக் காக்க மெய்யுடன் முழுதும், ஆதி விமல சண்முகவன் காக்க தெய்வ நாயக விசாகன் தினமும் என் நெஞ்சைக் காக்க.9
ஒலியெழ உரத்த சத்தத் தொடுவரு பூத ப்ரேதம் பலிகொள் இராக்கதப்பேய் பலகணத்து எவை ஆனாலும் கிலிகொள எனைவேல் காக்க, கெடுபரர் செய்யும் சூன்யம் வலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடாது அயில்வேல் காக்க.10
ஓங்கிய சீற்றமே கொண்டு உவணிவில் வேல் சூலங்கள் தாங்கிய தண்டம் எஃகம் தடி பரசு ஈட்டி யாதி பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின், தீங்கு செய்யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க.11
ஒளவியமுளர் ஊன் உண்போர் அசடர் பேய் அரக்கர் புல்லர் தெவ்வர்கள் எவர் ஆனாலும் திடமுடன் எனைமல் கட்டத் தவ்வியே வருவா ராயின், சராசரம் எலாம் புரக்கும் கவ்வுடைச் சூர சண்டன் கைஅயில் காக்க காக்க.12
கடுவிடப் பாந்தள் சிங்கம் கரடி நாய் புலிமா யானை கொடிய கோணாய் குரங்கு கோல மார்ச்சாலம் சம்பு நடையுடை எதனா லேனும் நான் இடர்ப் பட்டி டாமல் சடுதியில் வடிவேல் காக்க சானவிமுளை வேல் காக்க.13
ஙகரமே போல் தழீஇ ஞானவேல் காக்க, வன்புள் சிகரிதேள் நண்டுக் காலி செய்யன் ஏறு ஆலப் பல்லி நகமுடை ஓந்தி பூரான் நளிவண்டு புலியின் பூச்சி உகமிசை இவையால், எற் குஓர் ஊறுஇலாது ஐவேல் காக்க.14
சலத்தில் உய்வன்மீன் ஐறு, தண்டுடைத் திருக்கை, மற்றும் நிலத்திலும் சலத்திலும் தான் நெடுந்துயர் தரற்கே உள்ள குலத்தினால், நான் வருத்தம் கொண்டிடாது அவ்வவ்வேளை பலத்துடன் இருந்து காக்க, பாவகி கூர்வேல் காக்க.15
ஞமலியம் பரியன்கைவேல், நவக்கிரகக்கோள் காக்க சுமவிழி நோய்கள், தந்த சூலை, ஆக்கிராண ரோகம், திமிர்கழல் வாதம், சோகை, சிரமடி கர்ண ரோகம் எமை அணுகாமலே பன்னிருபுயன் சயவேல் காக்க.16
டமருகத்து அடிபோல் நைக்கும் தலையிடி, கண்ட மாலை குமுறு விப்புருதி, குன்மம், குடல்வலி, ஈழை காசம், நிமிரொணா(து) இருத்தும்வெட்டை, நீர்பிரமேகம் எல்லாம் எமை அடையாமலே குன்று எறிந்தவன் கைவேல் காக்க.17
இணக்கம் இல்லாத பித்த எரிவு, மாசுரங்கள், கைகால் முணக்கவே குறைக்கும் குஷ்டம், மூலவெண்முளை, தீமந்தம் சணத்திலே கொல்லும் சன்னி சாலம் என்று அறையும் இந்த பிணிக்குலம் எனை ஆளாமல் பெரும்சக்தி வடிவேல் காக்க.18
தவனமா ரோகம், வாதம், சயித்தியம், அரோசகம், மெய் சுவறவே செய்யும் மூலச்சூடு, இளைப்பு, உடற்று விக்கல், அவதிசெய் பேதி சீழ்நோய், அண்டவாதங்கள், சூலை எவையும் என்னிடத்து எய்தாமல் எம்பிரான் திணிவேல் காக்க.19
நமைப்புறு கிரந்தி, வீக்கம் நணுகிடு பாண்டு, சோபம் அமர்த்திடு கருமை வெண்மை ஆகுபல் தொழுநோய் கக்கல் இமைக்குமுன் உறு வலிப்போடு எழுபுடைப்பகந்த ராதி இமைப்பொழுதேனும் என்னை எய்தாமல் அருள்வேல் காக்க.20
பல்லது கடித்து மீசை படபடென்றே துடிக்கக் கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உருட்டி நோக்கி எல்லினும் கரிய மேனி எமபடர், வரினும் என்னை ஒல்லையில் தார காரி ஓம் ஐம் ரீம் வேல் காக்க.21
மண்ணிலும் மரத்தின்மீது மலையிலும் நெருப்பின் மீதும் தண்ணிறை ஜலத்தின் மீதும்சாரி செய் ஊர்தி மீதும் விண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறு எந்த இடத்தும் என்னை நண்ணிவந்து அருள் ஆர்சஷ்டி நாதன் வேல் காக்க காக்க.22
யகரமேபோல் சூல் ஏந்தும் நறும்புயன் வேல்முன் காக்க அகரமே முதலாம் ஈராறு அம்பகன் வேல்பின் காக்க சகரமோடு ஆறும் ஆனோன் தன்கைவேல் நடுவில் காக்க சிகரமின் தேவ மோலி திகழ் ஐவேல் கீழ்மேல் காக்க.23
ரஞ்சித மொழி தேவானை நாயகன் வள்ளி பங்கன் செஞ்சய வேல் கிழக்கில் திறமுடன் காக்க, அங்கி விஞ்சிடு திசையில் ஞான வீரன் வேல் காக்க, தெற்கில் எஞ்சிடாக் கதிர்கா மத்தோன் இகலுடைக் கரவேல் காக்க.24
லகரமே போல் காளிங்கன்நல்லுடல் நெளிய நின்று தகர மர்த்தனமே செய்த சங்கரி மருகன் கைவேல், நிகழ்எனை நிருதி திக்கில் நிலைபெறக் காக்க, மேற்கில் இகல் அயில்காக்க, வாயுவினில் குகன் கதிர்வேல் காக்க.25
வடதிசை தன்னில் ஈசன்மகன்அருள் திருவேல் காக்க விடையுடை ஈசன் திக்கில் வேத போதகன் வேல் காக்க நடக்கையில் இருக்கும்ஞான்றும் நவில்கையில் நிமிர்கையில், கீழ்க் கிடக்கையில் தூங்குஞான்றும் கிரிதுளைத்துள வேல்காக்க.26
இழந்துபோகாத வாழ்வை ஈயும் முத்தையனார் கைவேல், வழங்கும் நல் ஊண் உண்போதும் மால்விளையாட்டின் போதும் பழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்து நெஞ்சு அடக்கும் போதும் செழும்குணத்தோடே காக்க, திடமுடன் மயிலும் காக்க.27
இளமையில் வாலிபத்தில் ஏறிடு வயோதிகத்தில் வளர் அறுமுகச் சிவன்தான் வந்தெனைக் காக்க காக்க ஒளிஎழு காலை, முன்எல் ஓம் சிவ சாமி காக்க தெளிநடு பிற்பகல் கால், சிவகுரு நாதன் காக்க.28
இறகுடைக்கோழித் தோகைக்கு இறைமுன் இராவில் காக்க திறலுடைச் சூர்ப்பகைத்தே, திகழ்பின் இராவில் காக்க நறவுசேர் தாள் சிலம்பன் நடுநிசி தன்னில் காக்க மறைதொழு குழகன் எம்கோன் மாறாது காக்க காக்க.29
இனம்எனத் தொண்டரோடும் இணக்கிடும் செட்டி காக்க தனிமையில் கூட்டந் தன்னில் சரவண பவனார் காக்க நனி அநுபூதி சொன்ன நாதர்கோன் காக்க இத்தைக் கனிவோடு சொன்ன தாசன் கடவுள்தான் காக்கவந்தே.30
ஸ்ரீசண்முக கவசம் முற்றிற்று.
ஓம் குருவே சரணம்
அருளிய பகை கடிதல்
திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவே அருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவே இருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரே குருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே.1
மறைபுகழ் இறைமுனரே மறைமுதல் பகருருவே பொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே இறையிள முக உருவே எனநினை எனதெதிரே குறைவறு திருமயிலே கொணர்தியுன் இறைவனையே.2
இதரர்கள் பலர்பொரவே இவணுறை எனதெதிரே மதிரவி பல வென தேர் வளர் சரணிடை எனமா சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே குதிதரு மொரு மயிலே கொணர்தியுன் இறைவனையே.3
பவநடை மனுடர்முனே படருறும் எனதெதிரே நவமணி நுதல் அணியேர் நகைபல மிடர் அணிமால் சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே குவலயம் வருமயிலே கொணர்தியுன் இறைவனையே.4
அழகுறு மலர் முகனே அமரர்கள்பணி குகனே மழவுறு உடையவனே மதிநநி பெரியவனே இழவிலர் இறையவனே எனநினை எனதெதிரே குழகதுமிளிர் மயிலே கொணர்தியுன் இறைவனையே.5
இணையறும் அறுமுகனே இதசசி மருமகனே இணரணி புரள்புயனே எனநினை எனதெதிரே கணபண வரவுரமே கலைவுற எழுதருமோர் குணமுறு மணிமயிலே கொணர்தியுன் இறைவனையே.6
எளிய என் இறைவ குகா எனநினை எனதெதிரே வெளிநிகழ் திரள்களைமீன் மிளிர்சினையென மிடைவான் பளபள எனமினுமா பலசிறை விரிதருநீள் குளிர்மணி விழிமயிலே கொணர்தியுன் இறைவனையே.7
இலகயில் மயில்முருகா எனநினை எனதெதிரே பலபல களமணியே பலபல பதமணியே கலகல கல எனமா கவினொடுவருமயிலே குலவிடுசிகைமயிலே கொணர்தியுன் இறைவனையே.8
இகலறு சிவகுமரா எனநினை எனதெதிரே சுகமுனிவரர் எழிலார் சுரர்பலர் புகழ் செயவே தொகுதொகு தொகு எனவே சுரநட மிடுமயிலே குகபதி அமர் மயிலே கொணர்தியுன் இறைவனையே.9
கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே அருண் அயன் அரன் எனவே அகநினை எனதெதிரே மருமலர் அணிபலவே மருவிடு களமயிலே குருபல வவிர்மயிலே கொணர்தியுன் இறைவனையே.10
ஸ்ரீபகை கடிதல் முற்றிற்று.
ஓம் குருவே சரணம்
தொகுத்தருளிய 'வேல் மாறல்'
வேலும் மயிலும் துணை
திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.
( ... இந்த அடியை முதலில் 12 முறை ஓதவும் ... )
( ... பின்வரும் ஒவ்வோரடியின் முடிவிலும் "திரு" என்ற இடத்தில் மேற்கண்ட முழு அடியையும் கூறவேண்டும் ... )
பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்( திரு )1
திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே( திரு )2
சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை அறுத்(து)எறிய உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும்( திரு )3
தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை கழற்குநிகர் ஆகும்( திரு )4
பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்( திரு )5
சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள் சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து)அலற மோதும்( திரு )6
துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர் நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு)ஓர் துணை ஆகும்( திரு )7
தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்கவளை(வு) ஆகும்( திரு )8
பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு கவிப்புலவன் இசைக்(கு)உருகி வரைக்குகையை இடித்துவழி காணும்( திரு )9
திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என முகட்டின்இடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும்( திரு )10
சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்( திரு )11
தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு வலத்தும்இரு புறத்தும்அரு(கு) அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்( திரு )12
பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும்( திரு )13
திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்( திரு )14
சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும் இடுக்கண்வினை சாடும்( திரு )15
சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர் சிவத்ததொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும்( திரு )16
சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும் இடுக்கண்வினை சாடும்( திரு )17
சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர் சிவத்ததொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும்( திரு )18
பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும்( திரு )19
திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்( திரு )20
சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்( திரு )21
தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு வலத்தும்இரு புறத்தும்அரு(கு) அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்( திரு )22
பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு கவிப்புலவன் இசைக்(கு)உருகி வரைக்குகையை இடித்துவழி காணும்( திரு )23
திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என முகட்டின்இடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும்( திரு )24
துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர் நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு)ஓர் துணை ஆகும்( திரு )25
தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்கவளை(வு) ஆகும்( திரு )26
பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்( திரு )27
சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள் சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து)அலற மோதும்( திரு )28
சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை அறுத்(து)எறிய உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும்( திரு )29
தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை கழற்குநிகர் ஆகும்( திரு )30
பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்( திரு )31
திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே( திரு )32
தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை கழற்குநிகர் ஆகும்( திரு )33
சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை அறுத்(து)எறிய உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும்( திரு )34
திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே( திரு )35
பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்( திரு )36
தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்கவளை(வு) ஆகும்( திரு )37
துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர் நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு)ஓர் துணை ஆகும்( திரு )38
சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள் சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து)அலற மோதும்( திரு )39
பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்( திரு )40
தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு வலத்தும்இரு புறத்தும்அரு(கு) அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்( திரு )41
சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்( திரு )42
திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என முகட்டின்இடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும்( திரு )43
பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு கவிப்புலவன் இசைக்(கு)உருகி வரைக்குகையை இடித்துவழி காணும்( திரு )44
சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர் சிவத்ததொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும்( திரு )45
சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும் இடுக்கண்வினை சாடும்( திரு )46
திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்( திரு )47
பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும்( திரு )48
திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்( திரு )49
பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும்( திரு )50
சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர் சிவத்ததொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும்( திரு )51
சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும் இடுக்கண்வினை சாடும்( திரு )52
திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என முகட்டின்இடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும்( திரு )53
பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு கவிப்புலவன் இசைக்(கு)உருகி வரைக்குகையை இடித்துவழி காணும்( திரு )54
தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு வலத்தும்இரு புறத்தும்அரு(கு) அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்( திரு )55
சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்( திரு )56
சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள் சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து)அலற மோதும்( திரு )57
பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்( திரு )58
தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்கவளை(வு) ஆகும்( திரு )59
துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர் நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு)ஓர் துணை ஆகும்( திரு )60
திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே( திரு )61
பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்( திரு )62
தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை கழற்குநிகர் ஆகும்( திரு )63
சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை அறுத்(து)எறிய உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும்( திரு )64
திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே( திரு )65
( ... முடிவிலும் இந்த அடியை 12 முறை ஓதவும் ... )
தேரணி யிட்டுப் புரம் எரித் தான்மகன் செங்கையில்வேற் கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர் நேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப் பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் தொளைத்தவேல் உண்டே துணை.
வேலும் மயிலும் துணை
ஓம் குருவே சரணம்
'கந்தர் சஷ்டி கவசம்'
துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம், நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும், நிஷ்டையுங் கைகூடும், நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.
அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி.
சஷ்ட்டியை நோக்க சரவணபவனார் சிஷ்ட்டருக் குதவும்செங்கதிர் வேலோன் பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாட கிண்கிணி யாட மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார்5
கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து வர வர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திர முதலா எண்திசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக10
வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக15
சரஹணபவனார் சடுதியில் வருக ரஹண பவச ரரரர ரரர ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி விணபவ சரஹண வீரா நமோ நம நிபவ சரஹண நிறநிற நிறென20
வசர ஹணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண்டா யுதம் பாச அங்குசமும் பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க25
விரைந்தெனைக் காக்க வேலோன்வருக ஐயும் கிலியும் அடைவுடன்செளவும் உய்யொளி செளவும் உயிர் ஐயும் கிலியும் கிலியும் செளவும் கிளரொளி ஐயும் நிலை பெற் றென்முன் நித்தம் ஒளிரும்30
சண்முகம் நீயும் தணியொளி யொவ்வும் குண்டலி யாம் சிவ குகன்தினம் வருக ஆறுமுகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்35
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகு குண்டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல் பூஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்40
முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழகுடைய திருவயிறு உந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீராவும் இருதொடை அழகும் இணைமுழந்தாளும்45
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககண செககண செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண50
ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து55
முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா வினோதனென்று60
உன்திரு வடியை உருதி யென்றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க65
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க நாசிகளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க70
முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்ன வடிவேல் காக்க75
சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க80
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க85
வட்டக் குதத்தை வல்வேல் காக்க பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க கைக ளிரண்டும் கருணைவேல் காக்க90
முன்கையிரண்டும் முரண்வேல் காக்க பின்கையிரண்டும் பின்னவள் இருக்க நாவில் சரஸ்வதி நற்றுணை ஆக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனை வேல் காக்க95
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனக வேல் காக்க வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அறையிருள் தன்னில் அனையவேல் காக்க100
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க105
பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்110
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும் அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும் எல்லினும் இருட்டினும் எதிர்படும் அண்ணரும்115
கனபூசை கொள்ளும் காளியோடனே வரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட ஆனை அடியினில் அரும்பாவைகளும்120
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைகளுடனே பலகலசத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்125
காசும் பணமும் காவுடன் சோறும் ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட கால தூதாள் எனைக்கண்டாற் கலங்கிட130
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட்டலறி மதிகெட்டோட படியினில் முட்ட பாசக்க யிற்றால் கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு கட்டி உருட்டு கால்கை முறிய135
கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால்140
பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி தணலது வாக விடு விடு வேலை வெருண்டது வோட புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோட145
தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்150
சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி பக்கப் பிளவை படர் தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத்து அரணை பருஅரை யாப்பும்155
எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால் நில்லா தோட நீ எனக் கருள்வாய் ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்160
உன்னைத் துதிக்க உன் திருநாமம் சரஹண பவனே சைலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே பவம்ஒளி பவனே அரிதிரு மருகா அமரா பதியைக்165
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வேலவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே இடும்பனை ஏற்ற இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா170
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே175
காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நா இருக்க யான் உனைப் பாட எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவசமாக ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை180
நேச முடன்யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னருளாக அன்புடன் இரக்ஷி அன்னமுஞ் சொன்னமும் மெத்த மெத் தாக வேலா யுதனார்185
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்190
வாழ்க வாழ்க வாரணத்துவசம் வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செய்தால் பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்195
பெற்றவள்குறமகள் பெற்றவளாமே பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து மைந்தனென் மீது உன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட அருள் செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய200
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி நேச முடன்ஒரு நினைவது வாகி கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்205
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஓதியே செபித்து உகந்து நீறணிய அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் செயலது அருளுவர்210
மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளுமீ ரெட்டா வாழ்வர் கந்தர்கை வேலாம் கவசத் தடியை215
வழியாற் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிப் பொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி220
அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்துண வாகச் சூரபத்மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்225
சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி230
திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேளே போற்றி உயர்கிரி கனக சபைக்கு ஓரரசே235
மயில்நட மிடுவோய் மலர் அடி சரணம் சரணம் சரணம் சரஹண பவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்.
ஸ்ரீகந்தர் சஷ்டி கவசம் முற்றிற்று.
ஓம் குருவே சரணம்
பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்
சுப்பிரமணிய பெருமான் சூரபத்மனுடன் போரிடும் மகிமை. முருகனின் போர் வெற்றி குறித்து ஜெயகோஷம். பிணிபோக்க விண்ணப்பம்.
1 - 1இலங்கு நன்கலை விரிஞ்சனோடு
அனந்தனும் சத மகன்சதா
வியன்கொள் தம்பியர்களும் பொனாடு
உறைந்த புங்கவர்களும் கெடாது
என்றும் கொன்றை அணிந்தோனார்
தந் தண் திண் திரளும் சேயாம்
என்றன் சொந்தமினும் தீதேது
என்று அங்கங்கு அணி கண்டு ஓயாது
ஏந்து வன்படைவேல் வலி சேர்ந்த திண்புயமே
ஏய்ந்த கண்டகர்கால் தொடை மூஞ்சி கந்தரமோடு
எலும்புறும் தலைகளும் துணிந்திட
அடர்ந்த சண்டைகள் தொடர்ந்துபேய்
எனும் குணுங்குகள் நிணங்கள் உண்டு அரன்
மகன் புறஞ்சயம் எனும்சொலே . . . . . . களமிசையெழுமாறே
துலங்குமஞ்சிறை அலங்கவே
விளங்க வந்தவொர் சிகண்டியே
துணிந்திருந்து உயர்கரங்கண் மா
வரங்கள் மிஞ்சிய விரும்புகூர்
துன்றும் தண்டமொடு அம்பு ஈர்வாள்
கொண்டு அண்டங்களில் நின்றூடே
சுண்டும் புங்கம் அழிந்து ஏலாது
அஞ்சும் பண்டசுரன் சூதே
சூழ்ந்தெழும்பொழுதே கரம் வாங்கி ஒண் திணிவேல்
தூண்டி நின்றவனே கிளையோங்க நின்றுளமா
துவந்துவம் பட வகிர்ந்து வென்று அதி
பலம்பொருந்திய நிரஞ்சனா
சுகம்கொளும் தவர் வணங்கும் இங்கிதம்
உகந்த சுந்தர அலங்க்ருதா . . . . . . அரிபிரமருமேயோ
அலைந்து சந்ததம் அறிந்திடாது
எழுந்த செந்தழல் உடம்பினார்
அடங்கி அங்கமும் இறைஞ்சியே
புகழ்ந்து அன்றுமெய் மொழிந்தவா
அங்கிங் கென்பது அறுந்தேவா
எங்கும் துன்றி நிறைந்தோனே
அண்டும் தொண்டர் வருந்தாமே
இன்பம் தந்தருளும் தாளா
ஆம்பி தந்திடுமா மணி பூண்ட அந்தளையா
ஆண்டவன் குமரா எனை ஆண்ட செஞ்சரணா
அலர்ந்த இந்துள அலங்கலும் கடி
செறிந்த சந்தன சுகந்தமே
அணிந்து குன்றவர் நலம் பொருந்திட
வளர்ந்த பந்தனண எனும் பெணாள் . . . . . . தனை அணை மணவாளா
குலுங்கிரண்டு முகையும்களார்
இருண்ட கொந்தள ஒழுங்கும்வேல்
குரங்கும் அம்பகம் அதும் செவாய்
அதும் சமைந்துள மடந்தைமார்
கொஞ்சும் புன்தொழிலும் கால் ஓரும்
சண்டன் செயலும் சூடே
கொண்டு அங்கம் படரும் சீழ்நோய்
அண்டம் தந்தம் விழும்பாழ் நோய்
கூன்செயும் பிணிகால் கரம் வீங்கழுங்கலும் வாய்
கூம்பணங்கு கணோய் துயர் சார்ந்த புன்கணுமே
குயின்கொளும் கடல் வளைந்த இங்கெனை
அடைந்திடும்படி இனும்செயேல்
குவிந்து நெஞ்சமுளணைந்து நின்பதம்
நினைந்து உய்யும்படி மனம்செயே . . . . . . திருவருள் முருகோனே
முப்பெரும் தேவிகளான மலைமகள், அலைமகள், கலைமகள், மற்றும் தெய்வயானையின் சிறப்பியல்புகள்.
மேலும் வள்ளியை நாடிச் சென்று அவளுக்குத் தன்னைத் தந்து கடிமணம் புரிந்து கொண்டது.
கடித்துணர் ஒன்றிய முகிற்குழலும் குளிர்
கலைப்பிறை என்றிடு நுதல் திலகம் திகழ்
காசு உமையாள் இளம் மாமகனே
களங்க இந்துவை முனிந்து நன்கு அது
கடந்து விஞ்சிய முகம் சிறந்தொளி
கால் அயிலார் விழிமா மருகா . . . . . . விரைசெறிஅணிமார்பா
கனத்துயர் குன்றையும் இணைத்துள கும்ப
கலசத்தையும் விஞ்சிய தனத்திசை மங்கைகொள்
காதலன் நான்முக னாடமுதே
கமழ்ந்த குங்கும நரந்தமும் திமிர்
கரும்பெனும் சொலை இயம்பு குஞ்சரி
காவலனே குகனே பரனே . . . . . . அமரர்கள் தொழுபாதா
உடுக்கிடையின் பணி அடுக்குடையுங்கன
உரைப்பு உயர் மஞ்சுறு பதக்கமொடு அம்பத
ஓவிய நூபுர மோதிரமே
உயர்ந்த தண்தொடைகளும் கரங்களில்
உறும் பசுந்தொடிகளும் குயங்களில்
ஊர் எழில்வாரொடு நாசியிலே . . . . . . மினும்அணி நகையோடே
உலப்பறு இலம்பகமினுக்கிய செந்திரு
உருப்பணி யும்பல தரித்து அடர் பைந்தினை
ஓவலிலா அரணே செயுமாறு
ஒழுங்குறும் புனமிருந்து மஞ்சுலம்
உறைந்த கிஞ்சுக நறும் சொல் என்றிட
ஓலமதே இடுகானவர் மா . . . . . . மகளெனும் ஒருமானாம்
மடக்கொடிமுன் தலை விருப்புடன் வந்து அதி
வனத்துறை குன்றவர் உறுப்பொடு நின்றள
மானினியே கனியே இனிநீ
வருந்தும் என்றனை அணைந்து சந்ததம்
மனம் குளிர்ந்திட இணங்கி வந்தருளாய்
மயிலே குயிலே எழிலே . . . . . . மட வனநினதேர் ஆர்
மடிக்கொரு வந்தனம் அடிக்கொரு வந்தனம்
வளைக்கொரு வந்தனம் விழிக்கொரு வந்தனம்
வாஎனும் ஓர் மொழியே சொலுநீ
மணங்கிளர்ந்தநல் உடம்பு இலங்கிடு
மதங்கி யின்றுளம் மகிழ்ந் திடும்படி
மான்மகளே எனைஆள் நிதியே . . . . . . எனும் மொழி பலநூறே
படித்தவள் தன்கைகள் பிடித்துமுனம் சொன
படிக்கு மணந்துஅருள் அளித்த அனந்த
கிருபா கரனே வரனே அரனே
படர்ந்த செந்தமிழ் தினம் சொல் இன்பொடு
பதம் குரங்குநர் உளம் தெளிந்து அருள்
பாவகியே சிகியூர் இறையே . . . . . . திருமலிசமர் ஊரா
பவக்கடல் என்பது கடக்கவுநின் துணை
பலித்திடவும் பிழை செறுத்திடவும் கவி
பாடவும்நீ நடமாடவுமே
படர்ந்து தண்டயை நிதம் செயும்படி
பணிந்த என்றனை நினைந்து வந்தருள்
பாலனனே எனையாள் சிவனே . . . . . . வளர் அயில் முருகோனே.
வஞ்சகரின் கூட்டு இல்லாமலும், தொண்டர்களின் அணிமையும், சிவ - சக்தியரின் தாண்டவக் கோலமும், கந்தபிரானின் காட்சிக்காக ஏங்கும் தன்மையும் காண்மின்.
3 - 1வஞ்சம் சூதொன்றும்பேர் துன்பம் சங்கடம் மண்டும் பேர்
மங்கும்பேய் நம்பும்பேர் துஞ்சும் புன்சொல் வழங்கும் பேர்
மான் கணார் பெணார் தமாலினான்
மதியதுகெட்டுத் திரிபவர்தித்திப்பு
என மது துய்த்துச் சுழல்பவர் இச்சித்தே
மனமுயிர் உட்கச் சிதைத்துமே
நுகர்த்தின துக்கக் குணத்தினோர்
வசையுறு துட்டச் சினத்தினோர்
மடிசொல மெத்தச் சுறுக்குளோர்
வலிஏறிய கூரமுளோர் உதவார்
நடு ஏதுமிலார் இழிவார் களவோர்
மணமலர் அடியிணை விடுபவர் தமையினும்
நணுகிட எனைவிடுவது சரி இலையே . . . . . . தொண்டர்கள் பதிசேராய்
விஞ்சும்கார் நஞ்சம் தான் உண்டுந் திங்கள் அணிந்தும்கால்
வெம்பும்போதொண்செந்தாள் கொண்டஞ்சு அஞ்சஉதைந்தும்
பூமீன் பதா கையோன் மெய்வீயு மா
விழியை விழித்துக் கடுக எரித்துக்
கரியை உரித்துத் தனுமிசை சுற்றிக்கோள்
விழைவறு சுத்தச் சிறப்பினார்
பிணைமழு சத்திக் கரத்தினார்
விஜய உடுக்கைப் பிடித்துளார்
புரமது எரிக்கச் சிரித்துளார்
விதி மாதவனார் அறியா வடிவோர்
ஒருபாதி பெணாய் ஒளிர்வோர் சுசிநீள்
விடைதனில் இவர்பவர் பணபணம் அணிபவர்
கனைகழல் ஒலிதர நடமிடுபவர்சேய் . . . . . . என்றுள குருநாதா
தஞ்சம் சேர் சொந்தம் சாலம்செம்பங்கய மஞ்சுங்கால்
தந்தந்தா தந்தந்தா தந்தந் தந்தன தந்தந்தா
தாம் ததீ ததீ ததீ ததீ
ததிமிதி தத்தித் தரிகிட தத்தத்
திரிகிட தத்தத் தெயென நடிக்கச்சூழ்
தனி நடனக்ருத்தியத்தினாள்
மகிடனை வெட்டிச் சிதைத்துளாள்
தடமிகு முக்கட் கயத்தினாள்
சுரதன் உவக்கப் பகுத்துளாள்
சமிகூ விளமோடு அறுகார் அணிவாள்
ஒருகோ டுடையோன் அனையாய் வருவாள்
சதுமறை களும்வழி படவளர் பவண்மலை
மகளென வொருபெயருடையவள் சுதனே . . . . . . அண்டர்கள் தொழுதேவா
பிஞ்சம்சூழ் மஞ்சொண் சேயும்சந்தங்கொள் பதங்கங்கூர்
பிம்பம்போல் அங்கம் சாருங்கண் கண்கள்இலங்கும் சீர்
ஓங்கவே உலாவு கால் விணோர்
பிரமனொடு எட்டுக் குலகிரி திக்குக்
கரியொடு துத்திப் படவர உட்கப்பார்
பிளிற நடத்திக் களித்தவா
கிரிகெட எக்கித் துளைத்தவா
பிரியக மெத்தத் தரித்தவா
தமியனை நச்சிச் சுளித்தவா
பிணமா முனமே அருள்வாய் அருள்வாய்
துனியாவையு நீ கடியாய் கடியாய்
பிசியொடு பலபிழை பொறுபொறு பொறுபொறு
சததமு மறைவறு திருவடி தரவா . . . . . . என்களி முருகோனே.
நாளும் கோளும் நன்மக்களுக்கு நன்மையே செய்யுமாம்.
அவன் குடியிருக்கும் அறுபடைவீடு அவன் திருவடியின் தியானச் சிறப்புகூறக் கேண்மின்.
மாதமும் தின வாரமும் திதி
யோகமும் பல நாள்களும் படர்
மாதிரம் திரி கோள்களும் கழல்
பேணும் அன்பர்கள் பால் நலம் தர
வற்சலம் அதுசெயும் அருட்குணா
சிறந்த விற்பனர் அகக்கணா
மற்புய அசுரரை ஒழித்தவா
அனந்த சித்துரு எடுத்தவா
மால் அயன் சுரர்கோனும் உம்பர்
எலாரும் வந்தனமே புரிந்திடு
வானவன் சுடர் வேலவன் குரு
ஞான கந்தபிரான் எனும்படி
மத்தக மிசைமுடி தரித்தவா
குளிர்ந்த கத்திகை பரித்தவா
மட்டறும் இகல் அயில் பிடித்தவா
சிவந்த அக்கினி நுதற்கணா . . . . . . சிவகுரு எனும் நாதா.
நாத இங்கித வேதமும் பல்
புராணமும் கலைஆகமங்களும்
நாத உன் தனி வாயில் வந்தனவே
எனுந்துணிபே அறிந்தபின்
நச்சுவது இவண்எது கணித்தையோ
செறிந்த ஷட்பகை கெடுத்துமே
நட்புடை அருளமிழ்து உணில் சதா
சிறந்த துத்தியை அளிக்குமே
நாளும் இன்புஉயர் தேனினும் சுவை
ஈயும் விண்டலமே வரும் சுரர்
நாடியுண்டிடு போஜனம் தனி
லேயும் விஞ்சிடுமே கரும்பொடு
நட்டம் இன் முப்பழ முவர்க்குமே
விளைந்த சர்க்கரை கசக்குமே
நற்சுசி முற்றிய பயத்தொடே
கலந்த புத்தமு தினிக்குமோ . . . . . . அதை இனி அருளாயோ.
பூதலம் தனிலேயு (ம்) நன்கு உடை
மீதலம் தனி லேயும் வண்டு அறு
பூ மலர்ந்தவு னாத வம்பத
நேயம் என்பதுவே தினம் திகழ்
பொற்புறும் அழகது கொடுக்குமே
உயர்ந்த மெய்ப்பெயர் புணர்த்துமே
பொய்த்திட வினைகளை அறுக்குமே
மிகுந்த சித்திகள் பெருக்குமே
பூரணம் தருமே நிரம்பு எழில்
ஆதனம் தருமேஅணிந்திடு
பூடணம் தருமே இகந்தனில்
வாழ்வதும் தருமே உடம்பொடு
பொக்கறு புகழினை அளிக்குமே
பிறந்து செத்திடல் தொலைக்குமே
புத்தியில் அறிவினை விளக்குமே
நிறைந்த முத்தியும் இசைக்குமே . . . . . . இதைநிதம் உதவாயோ.
சீதளம் சொரி கோதில் பங்கயமே
மலர்ந்திடு வாவி தங்கிய
சீர் அடர்ந்தவிர் ஆவினன்குடி
ஏரகம் பரபூத ரம்சிவ
சித்தரும் முனிவரும் வசித்த
சோலையும் திரைக்கடல் அடிக்கும்வாய்
செற்கணம் உலவிடு பொருப்பெலாம்
இருந்து அளித்தருள் அயில் கையா
தேன் உறைந்திடு கான கந்தனில்
மானிளம் சுதையால் இரும் சரை
சேர் உடம்பு தளாட வந்த
சன்யாச சுந்தரரூப அம்பர
சிற்பர வெளிதனில் நடிக்குமா
அகண்ட தத்துவ பரத்துவா
செப்பரும் ரகசிய நிலைக்குளே
விளங்கு தற்பர திரித்துவா . . . . . . திருவளர் முருகோனே.
கந்தன் ஆடி வரும் வண்ணத்தைக் கண்டு, அண்ட சராசரமும் அதில் உள்ள அத்தனை பேர்களும் இன்பமுடன் ஆடும் அழகைக் காண்மின்.
5 - 1சூலதரனார் ஆட ஓதிமகளாட நனி
தொழுபூத கணமாட அரி ஆட அயனோடு
தூயகலை மாது ஆட மா நளினி யாட உயர்
சுரரோடு சுரலோக பதியாட எலியேறு
சூகைமுகனார் ஆட மூரிமுகன் ஆட ஓரு
தொடர்ஞாளி மிசைஊரு மழவாட வசுவீர
சூலிபதி தானாட நீலநம னாடநிறை
சுசிநார இறையாட வலிசால் நிருதியாட . . . . . . அரிகரமகனோடே
காலிலியு மேயாட வாழ்நிதிய னாடமிகு
கனஞால மகளாட வரவேணி சசிதேவி
காமமத வேளாட மாமைரதி யாட அவிர்
கதிராட மதியாட மணிநாக அரசு ஓகை
காணும் முனிவோராட மாணறமினாட இரு
கழலாட அழகாய தளையாட மணிமாசு இல்
கானமயில் தானாட ஞான அயிலாட ஒளிர்
கரவாள மதுவாட எறிசூல மழுவாட . . . . . . வயிரமல் எறுழோடே
கோல அரை ஞாணாட நூன்மருமமாட நிரை
கொளுநீப அணியாட உடையாட அடல்நீடு
கோழி அயராது ஆட வாகுவணி யாடமிளிர்
குழையாட வளையாட உபயாறு கரமேசில்
கோகநத மாறாறொடாறு விழியாட மலர்
குழகாய இதழாட ஒளிராறு சிரமோடு
கூறுகலை நாவாட மூரல் ஒளியாட வலர்
குவடேறு புயமாட மிடறாட மடியாட . . . . . . அகன்முதுகுரமோடே
நாலுமறை யேயாட மேல் நுதல்களாட வியன்
நலியாத எழிலாட அழியாத குணமாட
நாகரிகமே மேவு வேடர்மகளாட அருள்
நயவானை மகளாட முசுவான முகனாட
நாரதமகான் ஆட ஓசைமுனி ஆட விற
னவவீரர் புதராட ஒரு காவடியன் ஆட
ஞான அடியாராட மாணவர்கள் ஆட இதை
நவில் தாசன் உடனாட இதுவேளை எணிவாகொள் . . . . . . அருள்மலி முருகோனே.
... ... பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் இனித்ததே(ன்).!
ஸ்ரீபரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் முற்றிற்று.
ஓம் குருவே சரணம்
