தம்புல் குகை
"என்றும் வாழும் ஏகாந்த ஜோதி!"
"சிவகுரு மங்கள கந்தர்வா"
ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்த ஈசர்!
பிரபஞ்சத்தின் உள்ளும் புறமுமாய், எல்லாமாய், இருந்ததுமாய், இல்லாததுமாய் இருக்கின்ற இறைப் பரம்பொருளோடு தோன்றித் தோன்றாமல், தோன்றாமல் தோன்றி என்றும் வாழும் ஏகாந்த ஜோதி ஆதிமூல சித்தர்களே நவநாத சித்தர்கள் ஆவர். நாதங்களில் பலவகைகள் உண்டெனினும் இறைவன் ஆதிநாதமாய் உணர்வித்த நவநாத பீஜாட்சரங்களிலிருந்து ஜோதி மயமாய் ஒளிர்கின்ற நவநாத சித்தர்கள் நம் புனித பாரதத்தின் அன்னபூர்ணா சிகரங்களின் நடுவில் நித்ய வாசம் செய்கின்றார்கள். நவநாத சித்தர்களுடைய மூன்றாம் நேத்திரச் சுடரொளியில் என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாய் அமர்ந்து இறைப் பொலிவு நிறைந்து ஒளிர்பவரே நம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈசர்!
ஸ்ரீ-ல-ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரின் ஆதிமூல சிஷ்ய கோடி ரூபமாய் கலியுக ஜீவன்களின் நல்வாழ்விற்காக சித்த மாமறைகளை ஓதி, உணர்வித்து, கடைபிடிக்கச் செய்யும் வண்ணம் குருவருள் ஆணையுடன் இன்று கலியுகத்தில் நம்மிடையே குருமங்கள கந்தர்வா என எளிமையுடன் பவனி வருபவரே திருக்கயிலாயப் பொதியமுனிப் பரம்பரை, 1001வது குருமகா சந்நிதானம், சக்தி ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அடிமை ஸ்ரீவெங்கடராமன் அவர்கள்.
சிவகுரு மங்கள கந்தர்வா என்று போற்றப்படும் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்தர் ஈசர், குருமங்கள கந்தர்வ லோகத்திலிருந்து உதிக்கின்ற மகத்தான சித்புருஷர்களுள் ஒருவராம்! சிவகுரு மங்கள கந்தர்வா என்னும் தெய்வீக அடைமொழி நவநாத சித்தர்களாலேயே பொழியப் பெற்றது என்பது இடியாப்ப ஈசருடைய இறை மேன்மையைக் குறிக்கின்றது. ராமாவதாரத்தின் போது ஸ்ரீராமரின் சாரண்யத்தில் திளைத்தவர். ராமாயணம் நடந்த திரேதா யுகத்தின் முந்தைய கிருத யுகத்தில் ஸ்ரீஅஸ்தீக சித்தரின் அருள்பிரவாகத்தில், ஸ்ரீஆயுர் தேவி உபாசனையில் உத்தம நிலைகள் பலகண்டு ஸ்ரீவித்தையில் தலைசிறந்தவராக என்றும் இலங்குபவர். பலகோடி யுகங்களைக் கண்ட பார்போற்றும் சித்தர்பிரானே ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசர் ஆவார்.
இப்பிரபஞ்சத்தில் எத்தனையோ கோடி அகஸ்தியர்களும், திருமூலர்களும் தோன்றித் தோன்றி, தோன்றிக் கொண்டே இருக்கின்றனர். மறைவு இல்லாப் பரம்பொருளின் அடிமைகளான சித்தர்களுக்கு மறைவு என்ற ஒன்று உண்டா என்ன? மறைபோல் மறையா, மறைத்திரு மேனியைப் பூண்டவர்களே சித்தர்கள்!
ஆத்ம வாசல்கள்!
நவநாத சித்தர்கள்தாம் பரம்பொருளின் ஆதியும் அந்தமும் இல்லா இறைமைக்குச் சாட்சி பூதமாக எக்காலத்தும் சிரஞ்சீவியாக இருப்பவர்களே நவநாத சித்தர்கள், நவநாதங்கள் என்று குறிப்பிடுகையில் பரம்பொருளின் முதல் சிருஷ்டியில் உருவான ஒன்பது நாத விந்து பீஜாட்சரங்களையே குறிப்பிடுகின்றோம். மனிதனுக்கு நவதுவார ஆத்மசக்திகள் உண்டு. மனிதனுடைய உடலில் ஆத்மாவானது உயிர் இணைவுடன் வந்து செல்வதே பிறப்பு இறப்பாகக் குறிக்கப்படுகின்றது. அதாவது இந்த நவதுவாரம் தான் ஆத்மக் கோயில்களுக்கு நவதுவார வாசல்களாக, உயிர்ச் செறிவின் பக்தியாகத் திகழ்கின்றது.
இதேபோன்று இப்பிரபஞ்சத்திற்கும் ஒன்பது வாயில்கள் உண்டு. நவஆத்ம வாசல்களான இவற்றுக்குக் காப்பாக, உறுதுணையாக இறை ஆணையால் பொலிபவர்களே நவநாத சித்தர்கள். இவற்றிற்குப் பில துவாரங்கள் என்று பெயர். இவற்றின் சில சாயைகளை (replica) பூலோகத்தின் பல இடங்களிலும் காணலாம். வலஞ்சுழி எனப்படும் ஓம்காரப் பிரணவத்திலிருந்து உருவானவையே இப்பிலதுவாரச் சக்திகளாகும். இதனால்தான் அம்பிகையும் இன்றைக்கும் பல திருத்தலங்களில் துவார சக்தி அம்பிகையாக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றாள். யோனித் தத்துவத்தை விளக்குவதே துவார சக்தி அம்பிகைப் பீடமாகும். சக்தி பீடங்களுள் ஒன்றான அஸ்ஸாமில் உள்ள காமாக்யா திருத்தலம் பில துவார சக்தியில் ஒன்றாக நவநாத சித்தர்களுடைய நித்ய வழிபாட்டுக் கோயில்களுள் ஒன்றாக விளங்குகிறது.
பிலதுவாரங்கள்!
இதே போன்று கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் பிலதுவாரம் ஒன்றுண்டு. இதுவும் நவநாத சித்தர்களுடைய நவசித்தப் பீடங்களுள் ஒன்றாம். வடபாரதத்தில் ஹரித்வார் என்பது சிவத் திருமுடியில் உற்பவிக்கும் கங்கைப் பிரவாகம் அதாவது சிவகங்கை பூமியை அடைகின்ற துவாரமாகவும் சிவனார் சடையிலிருந்து தெறித்து அதி உன்னத வேகத்துடன் கிளம்பி வருகின்றது. இதன் வேகத்தைப் பூலோகத்திற்கு ஏற்ப மாற்றும் வண்ணம், கங்கை வரும் வழியில் ஹரியாகிய பெருமானே (ஹரி) துவாரத்தில் அமர்ந்து நதிப் பிரளய யோக சயனம் புரிவதால் ஹரித்துவார் என்ற பெயரைப் பெற்றது. இதுவும் நவபில துவாரங்களுள் ஒன்றாக நவநாத சித்தர்களுடைய நித்ய வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது.!
தம்புல் தெய்வீக குகை!
மேலும் இமய மலையில் உள்ள அன்னபூர்ணா சிகரங்கள் மகத்தான தெய்வீகச் சக்திகளைக் கொண்டவையாம். பத்ரிநாத் அருகே விச்வமாரம் என்னும் இடத்திலிருந்து விடியற்காலையில் நாம் அன்னபூர்ணா சிகரத்தைத் தரிசித்தால் அவற்றில் பொன்மய ரேகைகள் ஓடிப் பரிமளிப்பதை நாம் இன்றும் கண்கூடாகக் காணலாம். எவ்வாறு நம் நாபியில் (தொப்புள்) இருந்து எழுகின்ற விண்ணிழை நாண் (Silver cord) ஆத்ம ரூபத்தின் பரவெளி யாத்திரை இழைப் பாதைச் சுருளாக விளங்குகிறதோ, இதே போல நவநாத சித்தர்கள் பரஞ் ஜோதியிலிருந்து, பரபிரம்மத்திலிருந்து, சதாசிவத் திருமேனியிலிருந்து, சர்வேஸ்வரனிடமிருந்து வருகின்ற இறைப் பொன் இழைப் பாதையே இந்த சுவர்ண ரேகைகள் ஆகும்.
இந்த சுவர்ண ரேகைப் பாதைகள் மூலமாகத்தான் தம்புல் (TO BE PRONOUNCED AS DHAMBUL) என்னும் தெய்வீகக் குகையை அடைந்திடலாம். இந்தத் தம்புல் குகையில்தாம் நவநாத சித்தர்கள் நித்ய வாசம் செய்கின்றார்கள். பலகோடி சூரிய மூர்த்திகள், சந்திர மூர்த்திகள், சிவலிங்க மூர்த்திகள், அம்பிகையரைத் தரிசித்தவர்களகவும், அவர்களுடைய இறையனுபூதிகளில், இறைலீலைகளில் அன்றும் இன்றும் என்றும் பங்கு கொள்பவர்களாகவும் நவநாத சித்தர்கள் இருப்பதால் முதலும் முடிவுமற்ற சித்புருஷர்களாக இவர்கள் விளங்குகின்றனர். நவநாத சித்தர்களுடைய யோக நிலைகளில் அவர்களுடைய ஞானப் பார்வையின் வண்ணத்தில் பிலாகாச யோகம் பூண்டவராய் அமர்ந்திருப்பவர்தாம் ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசர் ஆவார். நவநாத சித்தர்களுடைய பூலோக சித்த பூஷண ஆலயமாக விளங்குகின்ற தம்புல் குகையைப் பொதுவாக எவரும் அறிந்திட இயலாது. அண்ட சராசரத்திலேயே அனைத்துக் கோடி லோகங்களிலும் சென்று வரும் இறையருள் பெற்ற நவநாத சித்தர்கள் ஒன்பது பேருமே ஒன்று சேர்ந்து யோக பாவனை கொள்கின்ற தலமாக தம்புல் குகை விளங்குவதால் அன்னபூர்ணாச் சிகரமே இன்றைக்கும் எத்தனையோ கோடி தெய்வீக அற்புதங்களைக் கொண்டதாக விளங்குகிறது.
தம்புல் காட்டும் தெய்வீகத் தாத்பர்யங்கள்!
பூலோகத்தில் உள்ள சுயம்பு லிங்க மூர்த்திகளின் ஜோதிப் பிரவாகம் திருஅண்ணாமலையிலிருந்து பெறப்பட்டாலும் அவை முதலில் வினாயகத் தொடக்கம் கொள்வது இந்த அன்னபூர்ணாச் சிகரத்தில்தாம்! பிரபஞ்சத்தில் பவனி வருகின்ற அனைத்துக் கோடி தேவாதி தேவ, தெய்வ மூர்த்திகளும் தங்களுடையக் கிருத்தியங்களைத் தொடர்வதும் இச்சிகரங்களின் திருமேனியில் கொண்டிடும் நடன பாவனைகள் மூலம்தான்!
காமாட்சி, கற்பகாம்பாள், மீனாட்சி, குங்குமசௌந்தரி என எந்த அம்பிகை அவதாரங்களும் அன்னபூர்ணாச் சிகரங்களிலிருந்துதான் ஆத்ம ஜோதிப் பரிபாலனங்களைக் கொள்கின்றனர். மயில், யானை, நந்தி போன்ற தேவ வாகனங்களையும் அம்பிகையர் இச்சிகரத்திலிருந்துதான் பெறுகின்றனர். ஏனென்றால் மயிலுக்குரிய துத்தநாக வண்ணம், மாதுளம் பழத்திற்கான செம்பவள முத்து போன்ற அனைத்திற்குமான கோடானு கோடி வண்ணங்களும் தம்புல் சித்தப் பீடத்திலிருந்துதான் தோன்றுகின்றன. தாமரைப் பூவில் பெண் குழந்தை வடிவிலும் மற்றும் பசு, நண்டு போன்ற பல வடிவங்களையும் அம்பிகையர் பெறுவது தம்புல் இறைத் தடாகத்தில் தான்! இறைவனே வலக்கண், இடக்கண், நெற்றிக் கண் ஆகிய முக்கண் ஜோதியிலிருந்து தோற்றுவித்த அன்னபூர்ணா சிகரத்தின் தெய்வீக மையமே தம்புல் குகைப் பீடமே!
அன்னபூர்ணாச் சிகரமும் தம்புல் பீட ஜோதியும் நவநாத சித்தர்களுடைய ஒளி நாடாப் பேழையாக, இறை அனுபூதிச் சுரங்கமாக விளங்குகிறது. அதாவது ஆதியும் அந்தமும் இல்லா ஆனந்தப் பரம்பொருளாகிய சிவனாரோடு எப்போதும் இறைத் தகைமை சான்ற நவநாத சித்புருஷர்கள் விளங்குவதால் அனைத்துத் தெய்வமூர்த்திகளுடைய இறை லீலைகளும், இறையனுபூதிகளும் நவநாத சித்தர்களுக்கு உணர்விக்கப் பெறுகின்றன. இதனால்தான் நவநாத சித்தர்கள் பிரபஞ்சத்தின் அனைத்துப் புராணங்களிலும் தக்க இறை சாட்சி அவதாரிகைகளைக் கொண்டவர்களாக விளங்குகின்றனர்.
இறையின் மறை நிழல் நவநாத சித்தர்!
ராமாயணம், மகாபாரதம், கந்த புராணம், சிவபுராணம் போன்ற அனைத்துப் புராணங்களிலும் நவநாத சித்புருஷர்கள் சாட்சி பூதமாகக் கண்டிருந்தமையால், தெய்வ மூர்த்திகளே நவநாத சித்தர்களிடமிருந்துதான் புராண விளக்கங்களைப் பெறுகின்றனர். உதாரணமாக பீஷ்மருடைய பாத்திரம் பற்றித் தேவலோகங்களில் தெய்வீக உரையாடல்கள் நிகழ்வதுண்டு. அப்போதெல்லாம் நவநாத சித்தர்களே பீஷ்மாச்சாரியாரிடம் சென்று மீண்டும் மகாபாரதக் காட்சிகளை நேரடி வர்ணனையாக உணர்த்தும் தெய்வ வல்லமை கொண்டவர்களாம். இத்தகைய மகா வல்லமை பொருந்திய நவநாத சித்தர்களுடைய தம்புல் பீடத் தெய்வச் சமவெளியிலேயே ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசர் பிலாகாச யோக நிலை பூண்டுள்ளார் என்றால் நவநாத சித்தர்களுடைய அருமைச் சீடர்தாமே ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசர். கோடானு கோடி சதுர்யுகங்களாக பிலாகாச யோகத்திலேயே அமர்வதென்றால் எத்தகைய மகத்தான சித்புருஷர் அவர்!
அட்டைப் படத்தில் நீங்கள் காண்பது அன்னபூர்ணா சிகரத்தின் பலகோடித் தெய்வ ரகசியங்களின் ஒரு துளியின் கோடானு கோடி அணுச் சுடராகும். ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரின் வலப்புறம் உள்ள தம்புல் நீர்வீழ்ச்சிப் பிரவாகத்தின் வலப்புறச் சருக்கை வழிதாம் தம்புல் தெய்வீக குகைக்கான தேவ நடைபாதை வழியாகும். எவருக்கு 108 ஸ்வர்ண நிறங்கள் உடைய ஸ்வர்ண ரேகா எனப்படும் ஒளிப் பாதை தென்படுகின்றதோ அவர்கள்தாம் இந்த தம்புல் குகையை இறையருளால் அடைய முடியும். நாம் நீர்வீழ்ச்சியாகக் காண்பது தம்புல் தேவ நீரோட்டத்தில் தோன்றுகின்ற இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக் கோடி புண்ணியத் தீர்த்தங்களின் பரந்த நீரோட்டமாகும். உண்மையில் தம்புல் நீர்ச்சுனைதான் பலகோடி தேவ லோகங்களுக்கும் தேவ ஆறுகளாகப் பாய்கின்றன. இவற்றை முறைப்படுத்துபவர்களே நவநாத சித்தர்களாவர்.
நவநாதங்கள் எனப்படுபவை ஒன்பது முக்கியமான ஆதிமூல பீஜாட்சரங்களாகும். இதன் நீரோட்டச் சமவெளியில் எத்தனையோ தெய்வீகப் புஷ்பங்கள் நிறைந்துள்ளன. தம்புல் புண்ணியத் தீர்த்தம் உருவாக்கும் தேவ தடாகங்களும் நிறைய உண்டு, இவைதாம் பூலோக ஆலயத் தீர்த்தங்களுக்கு மூலாதாரமாம். தம்புல் தேவ நீரோட்டத்திலிருந்து எழுகின்ற காற்றுதான் இந்தப் பிரபஞ்சத்தின் புனிதமான பிராணாயாமப் புண்ணியக் காற்றாம். இதையே நாம் ஓசோன் (OZONE) என்று அழைக்கின்றோம். இங்கு தம்புல் மகிமையைப் பற்றிச் சொல்வதா? நவநாத சித்தர்களைப் பற்றி உரைப்பதா? அல்லது தம்புல் தெய்வீகக் குகையில் நவநாத சித்தர்களின் நேரடி அருட்பார்வையில் பிலாகாச யோகம் கொண்டிருக்கும் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரின் மகிமையைப் பற்றி எடுத்துரைப்பதா? ஒவ்வொன்றிற்கும் கோடானு கோடி புராண காண்டங்கள் அல்லவோ தேவைப்படும்!
பிலாகாச யோகம் என்று நமக்குப் புரியும் வகையில் நிர்விகல்ப சமாதியின் உத்தம நிலைகளுள் ஒன்றைச் சொல்கின்றோமே தவிர, ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரின் ஒவ்வொரு தேவ ஒளி உடல் அணுவும் ஒவ்வொரு நிர்விகல்ப சமாதி நிலையைக் கொண்டுள்ளது. நமக்குப் புரிவதற்காக அவருடைய மானுட உடல் யோக நிலயைப் பூண்டது போல நமக்குத் தோன்றுகின்றதே தவிர தேவாதி தேவர்களுக்கு அவர்களுடைய உத்தம தவ நிலைகளுக்கேற்றவாறு அவர்தம் யோக பிம்பமானது கோடிப் பிரகாசச் சுடர் வடிவாய், ஒளிமயமான தேக ரூபத்தைக் காட்டும். எறும்புகளுக்கு அவர் புற்று மண்ணாலான சுயம்பு யோகியாகக் காட்சி தருவார். அவருடைய கரங்கள், பாதரேகைகள் யாவும் சிவலிங்க வடிவிலும், வண்ணத்திலும் பூரித்திருக்கும். நகங்கள் என்று நாம் அவரிடம் காண்பவை அனைத்தும் விதவிதமான பாணலிங்கங்களே., சுருள் சுருளாக அமைந்திருக்கும் கேசக் கற்றைகள் யாவும் நடராஜ சிவபெருமானின் ஓய்வில்லா நாட்டியத்திலிருந்து எப்போதும் பொழிந்து கொண்டிருக்கும் பீஜாட்சரக் குழல் வடிவங்களே!
இன்றைக்குப் பூலோகத்தில் நிலைத்திருப்பது இறைவன் அளித்த வேத மறைகளின் ஒரு மிகச் சிறிய நுண்ணியப் பகுதியிலும் பலகோடி மடங்கு பகுத்த ஒரு மிக நுண்ணிய பருப் பதமேயாகும். இந்தப் பிரபஞ்சத்தில் வழக்கிலிருந்து மறைந்துவிட்ட எத்தனையோ கோடி வேத மாமறைகளின் ஒளிக்கற்றைகளே ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரின் திருமேனியில் வேதக் குழல்களாகப் பொலிகின்றன. ஒருவித பிரபஞ்ச சிருஷ்டி விளக்கத்தில் பிரபஞ்சத்தை மேலே வேர்ப் பகுதியிருக்க, கீழே தொங்குகின்ற ஆலமரத் தண்டு உடலாகக் கூறுவார்கள். கல்லால மரத்தின் பிரபஞ்சத் தாத்பர்யங்களுள் இதுவும் ஒன்றே. அக்கல்லால மரத்தின் கீழ் ஞான வடிவம் கொண்டுள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தியிடம் நவநாத சித்தர்கள் பெற்ற கல்லால மர வேத வேர்ச் சுழல்கள்தாம், பீஜாட்சர மா மறைக் குழல்களாக, மறை வேர்ச் சுடர்களாக ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரின் திருமேனியில் பதிந்துள்ளன. ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரின் பின்னணியில் பிரபஞ்சத்தின் அனைத்து விதமான தேவ காட்சிகளையும் கண்டு பரமானந்தம் கொண்டிடலாம். ஒவ்வொரு மூலிகைச் செடியும் விதவிதமான வேதக் கதிர் ஒலிகளைப் பரப்புவையாம். ஒவ்வொரு புஷ்பமும், தம்புல் குகையில் புஷ்பிக்கும்போது பல்லாயிரம் கோடி மாமறைப் பீஜாட்சரங்களையும் மலர்வித்துப் பிரபஞ்சத்திற்கு அளிக்கின்றது.
தம்புல் கண்டார் சம்புநாத குருவே!
இத்தகைய தெய்வீக மகத்துவங்கள் நிறைந்த ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரிடம் கலியுகத்தில் நேரடியாகவே குருகுலவாச பாக்கியத்தைக் கொண்டவரே இன்று நம்மிடையே ஸ்ரீஅகஸ்திய விஜயம் வாயிலாக, குருவாய் மொழிகளை ஒலித்து, சற்குருவாக ஒளிர்ந்திடும் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள், தம் சற்குருவினுடைய அனந்தகோடி சிஷ்யராகவும், ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரின் சிஷ்ய பாதமாகவும் அவருடைய கலியுக ஒளிப்பிரதி பிம்பமாகவும் ஒளிர்பவரே குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள். குருவின் உருவாய், உருவே குருவாய், குருவின் கருவாய், குருவின் தருவாய், குருவின் திருவாய், குருவின் திருவடியாய் நம்மிடையே திருக்கயிலாயப் பொதியமுனிப் பரம்பரை 1001வது குருமஹா சந்நிதானமாகப் பிரகாசிக்கின்ற குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களே தேவாதி தேவர்களுக்கும் பெறுதற்கரிதான நவநாத சித்தர்கள் நித்ய வாசம் செய்யும் தம்புல் தெய்வீகக் குகையைத் தரிசித்து அங்கு என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாகப் பிரகாசிக்கும் ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரின் கருணைக் கடாட்சத்தைப் பெற்றுத் தரும் சற்குருப் பீடமாய் மிளிர்கின்றார்.
சொர்க்கம் என்றால் சொர்க்கத்தைக் கண்டு அனுபவித்தவர்கள் எடுத்துரைத்தால்தானே நமக்குச் சொர்க்கத்தின் மகிமை புரியும். பல புண்ணிய நெறிகளின்படி வாழ்ந்தால் சொர்க்க வாசம் கூட எளிதில் கிட்டிவிடும். ஆனால் ஆதிமூலப் பரம்பொருளின் அனுபூதிச் சித்தர்களாக விளங்குகின்ற நவநாத சித்தர்கள் நித்ய வாசம் செய்யும் தம்புல் குகை மகிமையை அதனைத் தரிசித்தவர்தாமே உணர்த்திட முடியும்! நம் புண்ய பாரதத்தில் அன்னபூர்ணா சிகரங்கள் விளங்குவது நம்முடைய பெரும்பாக்கியமே.!
தம்புல் குகையில் (சிவ) தாண்டவப் பிரகாசம்
தம்புல் குகையில் சூர்ய, சந்திர ஒளிவாசம் கூட நவநாத சித்தர்களால்தான் நிர்ணயிக்கப்படுகின்றது, அங்கு நிலவுகின்ற தட்பவெட்ப நிலையும் ஒளித்தோற்றமும் அட்டைப் படத்தின் மேற்புறத்தில் காணலாம். அதாவது பிரம்ம முகூர்த்த நேரத்தில் கிரக ஒளிகளின் தியானச் சுடர்கள் பரிணமிக்கும், தேவ ஒளி நிலையே, தம்புல் குகைவாசமாகும். இங்கு இரவு பகல் என்ற பேதம் கிடையாது. எப்போதும் பிரம்ம முகூர்த்த சோபனமே நிலவிடும். பிரம்ம முகூர்த்தம் என்றால் நாம் பூமியில் காண்கின்ற விடியற்காலை நேரப் பாங்கு என்று எண்ணிடாதீர்கள். நம் அறிவிற்கு எட்டியவரையில் ஓரளவு புரியும் வண்ணம் சொல்ல வேண்டுமென்றால் காலை இளஞ் சூரியக் கதிரொளிக் கீற்றுகள், மாலை அந்திச் சுடர்களின் பொன்மய வண்ண வடிவுகள் கூடுவதே இதன் வண்ணமாம் தம்புல் குகையின் சீதோஷ்ண நிலையானது பிராணாயாம யோக சஞ்சாரங்களுக்கு உத்தமமானதாக விளங்குகின்றது.
அட்டைப் படத்தில் காண்கின்றதைப் போலவே தம்புல் நீரோட்டம் அமைந்திருந்தாலும் இது இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல முடியா வண்ணம் தம்புல் குகையில் அளப்பரிய, அதியற்புதமான தெய்வாம்சங்கள் நிறைந்து விளங்குகின்றன. இங்கு நாம் அளிப்பவை எல்லாம் நம்முடைய கல்வி அறிவிற்கேற்ப பகுத்தளிக்கப்பட்டப் பாட விளக்கங்களே..! உண்மையில் நவநாத சித்தர்கள் எப்போதும் உறைவதாக விளங்குகின்ற தம்புல் குகை மனிதனுடைய ஆறறிவுக்கும், பகுத்தறிவிற்கும் அப்பாற்பட்ட பரந்த இறை நிலையாகும். இந்தப் பிரபஞ்சம் இயங்குவதற்காக இறைப் பரம்பொருளோடு இணை நிழலாக, அருட்துணை சாட்சியாக இருப்பவர்களே நவநாத சித்தர்கள் ஆவர். பூலோகமே தெய்வீகப் புனிதத்திற்கு ஏற்றது என்பதை உணர்விக்கும் வகையில் அவர்கள் தம்புல் குகையை அன்னபூர்ணா சிகரத்தில் பெற்றிருக்கின்றார்கள். அவர்கள் நினைத்திருந்தால் எத்தனையோ தேவலோகங்களில் தம்புல் குகை வாசத்தைப் பெற்றிருக்க முடியும். ஆனால் பூலோகத்தின் புனிதத் தன்மையை உணர்த்திடவே தங்களுக்குரித்தான தம்புல் குகை வாசத்தை இங்கு பெற்றார்கள்.!
தம்புல் இலையில் வேத தாண்டவம்!
இங்குள்ள தடாகத்தின் தேவ இலைகள் யாவும் வேதச் சுடர்களைத் தாங்குபவையாகும். எவ்வாறு தாவரங்கள் பூமியில் உள்ள இயற்கைச் சத்துக்களை இலையாகவும், காய்கறிகளாகவும், கனிகளாகவும் நமக்கு மாற்றித் தருகின்றனவோ, அதே தாவரங்கள்தாம் சித்தர்கள், மகரிஷிகளுடைய தியான யோகப் பலன்களின் மூலம் வேத சக்திகளை ஜீவன்களுக்கான நல்வரச் சக்திகளாக மாற்றி அளிக்கின்றன.. தம்புல்குகை நீர்த் தடாகத்தில் மிதக்கின்ற தாவர இலைகள் யாவுமே வேத உணவாக, வேத பீஜாட்சரங்களை சித்தர்களுடைய யோக சக்திகளுடன் சமைத்துப் பரிமாறப்பட்ட மறை உணவாக நமக்கு அளிக்கின்றனர்.
எனவேதாம் இன்றைக்கும் வாழை இலை, மந்தார இலைச் சாப்பாடு பெறுதற்கரிய வேத சக்திகளைத் தருகின்றன. மந்தார இலைக்கு சாம வேத சக்திகள் நிறைய உண்டு. தாமரை இலைக்கு ஸ்ரீவித்யா சக்ர சக்திகள் மிகுதி. வாழை இலையில் நால்வேத சக்திகளும் குடி கொண்டுள்ளன. தென்னை இலையையும் சாப்பாட்டு இலையாகப் பின்னுவதுண்டு. தென்னை இலையில் ஞான பீஜாட்சர சக்திகள் அதிகம். பூவரச இலைக்கு அதர்வண வேத சக்திகள் நிறைய உண்டு. மொத்தத்தில் தம்புல் குகையானது நவநாத சித்தர்களுடைய பிரபஞ்ச இறை ஆய்வுக் கூடமாக விளங்குகின்றது. இறை ஆய்வு என்றால் இறைமையை ஆய்வதல்ல! இறைமையைப் பிரபஞ்சத்தில் ஊட்டி உணர்த்துவதற்கான நல்வழிமுறைகளை ஆய்ந்து அளிப்பதாகும். எனவேதாம் தம்புல் குகையில் நீர்வீழ்ச்சி, நதி, நீரோட்டம், ஓடை, தாவரங்கள், கற்கள், பாறைகள், மலைகள் என அனைத்தின் இறை வடிவுகளையும் பரிபூரணமாகக் கண்டிடலாம்!
தம்புல், the divine server!
இங்கு ஒரு தாமரைக் கொடிக்கு அளிக்கப்படுகின்ற வேத சக்திகள் இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துத் தாமரைக் குடும்பங்களுக்குச் சென்றடையும். இதற்குரிய DIVINE SERVER ஆக தம்புல் குகை விளங்குகின்றது. இங்குள்ள ஒரு சிறுபாறைக் கல் துகளுக்கும் நவநாத சித்தர்கள் அளிக்கின்ற யோக சக்தியானது இமயமலை, ஆல்ப்ஸ், பொதிய மலை, ஆஸ்திரேலியா மலை, ஜப்பான் மலைக் குன்றுகளுக்கும் உடனடியாகச் சென்றடைகின்றது. இவ்வாறாக, தம்புல் தெய்வீக மகத்துவத்தைப் பலகோடி புராணங்களாக விரித்திடலாம். எவ்வாறு இறைவனுடையக் கிருத்திய நிகழ்ச்சிகளுக்கு, அவதார வைபவங்களுக்கு, இறை மூர்த்தி வடிவ அனுபூதிகளுக்கு நவநாத சித்தர்கள் அருட்பெரும் சாட்சியாக (DIVINE WITNESS) விளங்குகின்றார்களோ, இதே போல நவநாத சித்தர்களுடைய இறைப் பணிகளுக்கு, கடவுள் சித்தாந்தங்களுக்கு (சித்தோபநிஷத்), ஆண்டவத் திருக்காரியங்களுக்கு, இறை சாட்சியாக மிளிர்பவரே ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசர் ஆவார். இவர் பல லோகங்களிலும் பல இறைநாமங்களைத் தாங்கி வருபவர். எவ்வாறு நவநாத சித்தர்கள் என்று பொதுப்படையாகக் குறிக்கின்றோமோ, ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரும் தமக்கெனத் தோன்றாப் பெயருடையவர்! மனித குல அறிவு அடையாளத்திற்காக இடியாப்பச் சுழல்கள் போல் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியின் இறைச் சாட்சிப் புனலே ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசர்! அட்டைப் படத்தில் அவருடைய திருமுடிகள் இடியாப்பச் சுற்றுக்களைப் போல் இலங்குவதைக் காணலாம். இவ்வாறு சித்புருஷர்கள் பலவிதக் காரணப் பெயர்களை பூண்டே தம்மைப் புலப்படுத்திக் கொள்கின்றார்கள்.
சித்தர்கள் யோகத்தில் அமர்ந்தால் அவர்கள் எப்போதும் காண்பது இறைவனுடைய திருநடனக் காட்சியே! சிதம்பரப் பரம்பொருளான நடராஜப் பெருமான் என்றும் எந்நேரமும், எங்கும் திருநடனம் புரிந்து கொண்டிருப்பர்தாமே! இந்தப் பரவெளிக் கோல நாட்டியத்தையே ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசர் கண்டு தரிசித்துப் பரமானந்தம் கொண்டிருக்கின்றார். இந்த இறை நடனக் காட்சியைக் காணும் பாக்கியத்தை நாம் பெறவில்லையாதலால், தம்புல் குகையில் அவருடைய திருமேனியிலிருந்து எழுகின்ற பிலாகாசக் கதிர்கள்தாம் நம் அறிவிற்கு எட்டியவகையில் ஒரு மானுட வடிவு கொண்டு குருமங்கள கந்தர்வா ஆக, கலியுகத்தில் தோற்றம் கொண்டுள்ளது. இவரே அவர்!! அவரே இவர்!!! திருவின் வடிவே சிவம்!!! சிவத்தின் வடிவே குரு!! குருவின் வடிவே குருசிஷ்ய பாதம்!
தம்புலின் பல கோள ஆகர்ஷண சக்தி!
தம்புல் குகையைச் சென்றடைவதற்குத் தம்புல் நீரோட்டத்தின் கீழிருந்து மேலாக, தேவ நீரோட்டப் பாதையில் செல்ல வேண்டும். பூமியின் ஆகர்ஷ்ண சக்திக்கு மாறான தேவ ஆகர்ஷண சக்தியைப் பூண்டவர்கள்தாம் விண்வெளியில், மேலே, உயரே நடந்து செல்ல முடியும். பூமாதேவி தன்னுடைய பூமி இயக்கத்திற்கான கிருத்திய சக்தியைத் தம்புல் குகைவாயிலில் செந்நிறப் பூக்களாக (அட்டைப் படம் காண்க) நிலை நிறுத்திச் செல்கின்றாள். தண்டலப் புஷ்பம் எனப்படும் இவற்றை நாம் தரிசிக்க, தரிசிக்க நாம் எடை குறைந்தவர்களாய், பூமியின் ஆகர்ஷண விதிகளுக்கு, நியதிகளுக்கு அப்பாற்பட்டவர்கள் ஆகின்றோம். இந்நிலையில் நாம் நீரைக் கீழே ஊற்றி அர்க்யம் அளித்தால், நீர் அப்படியே பரவெளியில் நிற்கும்! கீழே விழாது! ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசனின் பின்னணியில் ஒளிர்கின்ற சூரிய வட்டப் புஷ்பங்கள்தாம் கோள்களின் சங்கமத்தில் ஏற்படுகின்ற கிரக த்வீப ஆகர்ஷணச் சக்தியைத் தருகின்றது. இவைதாம் நம்மை மேல் நோக்கிப் பூமியின் ஆகர்ஷணத்திற்கு மறுபுறமாக நடந்து செல்வதற்கான திலகப் பாதசக்திகளைத் தருகின்றன.
பொதுவாக நெற்றியில் நாம் நீளமாக இடும் சந்தனக் கீற்றுப் பாதைக்கு இந்த சூரிய வட்டப் புஷ்பச் சக்தி அதிகம். கபாலத்தை இருவடிவாகக் காட்டுவது போல் நெற்றியில் இடும் சந்தனக் கீற்றுதான் சூரியவடிவப் புஷ்ப சக்தியைத் தரும். ஒருவர் முப்பது வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து தினந்தோறும் நீண்ட சந்தனப் பட்டையை நெற்றியில் இட்டு வந்தால் சூரிய வழிக் கபாலச் சக்திகளை எளிதில் பெற்றிடலாம், தக்க சற்குருவின் மூலம் குறித்த இறைப்பணிகளை ஆற்றி வந்தால்!
தம்புல் குகையில் உள்ள சந்தன மரங்கள் மகத்தான தெய்வீகச் சக்திகளைக் கொண்டவையாம்! இங்குள்ள தர்பை, வில்வம், துளசி போன்றவை நவநாத சித்தர்களால் பூஜிக்கப்படுபவையாதலால், ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரே இவற்றின் தெய்வீகக் கல்யாண நற்குணங்களைத் தம்முடைய செங்குழல் வடிக் கால்களால் சித்தர்களுடைய திருவாய் மொழிகளைக் கடைபிடிப்போர்க்கு நல்வரங்களாக அளித்திடுகின்றார். ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் வருகின்ற நித்ய கர்ம நிவாரண விதிகளை முறையாக, பக்தியுடன் கடைபிடிப்பவர்களுக்கு அவருடைய இடியாப்ப குழல் வடிவேத தரிசனம்தனை தக்க சற்குருவின் மூலம் பெற்றிடலாம்! நம்மிடையே குருமங்கள கந்தர்வாவாக பூலோக வாசம் பூண்டுள்ள ஸ்ரீவெங்கடராமன் அவர்கள், ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரின் குருநாதர் ஒளிப்பிரகாச சிவச் சுடர்களான நவநாத சித்தர்களைப் போற்றும் சிஷ்யபாதமாக இலங்குவதால் இவர்தம் வடிவில் அவர்தம் சற்குருவின் மூலச் சுடரைத் தரிசிப்போமாக!
அன்னபூர்ணா சிகரத்திற்கும் அண்ணாமலை ஜோதியே பிரதானம்!
திருஅண்ணாமலைக்கும், அன்னபூர்ணா சிகரங்களுக்கும் வேத வேரோட்ட, தேவ நீரோட்ட, தெய்வீக இணைப்புகள் உண்டு. ஒவ்வொரு பௌர்ணமி தோறும் திருஅண்ணாமலையின் அருணாச்சல ஜோதிக் கிரணங்கள் அன்னபூர்ணா சிகரங்களுக்கும் தம்புல் குகைக்கும் பாய்கின்றன. திருஅண்ணாமலையாரின் பரிபூரண அனுகிரகங்களைப் பெற்றவர்களே, இங்கு பலகோடி முறை கிரிவலம் வந்து திருஅண்ணாமலையில் குறித்த நாளில், குறித்த நட்சத்திர ஹோரையில், குறித்த சுப ஹோரையில், குறித்த அமிர்த வாஸ்து நேரத்தில் திருஅண்ணாமலையில் சற்குருவின் நேரடிப் பார்வையில் அன்னபூர்ணா சிகரத் தரிசனங்களைப் பெறுபவர்களுக்குத்தான் தம்புல் தெய்வீக ஒளிப்பாதைப் புலப்படும். ஆனால் திருஅண்ணாமலையிலேயே பலகோடி யுகங்களுக்கு ஒருமுறைதான் ஸ்ரீஅன்னபூர்ணா தரிசனம் தென்படும். நாம் இன்றைக்குத் திருஅண்ணாமலையில் காண்பது சுமார் 14 கிலோமீட்டர் சுற்றளவு உள்ள மலைத் தரிசனமேயாகும். ஆனால் மணிக்கு தேவ நடையாகப் பல்லாயிரம் மைல்கள் விரிந்த துரித நடைவாகு கொண்ட ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தியே திருஅண்ணாமலையைத் தினந்தோறும் கிரிவலம் வருகின்றார் என்றால் அந்தத் தேவ கணக்கில் திருஅண்ணாமலையின் விஸ்தீரணம் கோடானுகோடி மைல்கள் கொண்டதாக இருக்கும் என்பதை உணர்ந்திடுங்கள்.
லம்ப காடகம் என்ற ஒரு லோகத்தில் உள்ள மனிதர்களுடைய உயரம் குறைந்தது 400 அடியிருக்கும். நம்முடைய மகாபாரத, ராமாயண சருக்கங்களில் மிகவும் உயரமானவர்களைப் பற்றிய குறிப்பு வருகின்றது அல்லவா? இந்த லம்ப காடக மனிதர்கள் நம் பூலோக திருஅண்ணாமலைக்குச் சூட்சும வடிவில் கிரிவலம் வருகின்றபோது அவர்களுடைய கண்களுக்கு திருஅண்ணாமலை எவ்வடிவு கொண்டிருக்கும் என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள். நத்தையும், ஆமையும், எறும்பும், மண்புழுவும் கண்களே இல்லாத ஜீவன்களும் கூட திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருகின்றன என்றால் அவர்களுடைய தேக அமைப்பு, பகுத்தறிவு, மூளையின் பாங்கிற்கேற்பத் திருஅண்ணாமலையின் வடிவு அமைந்திடும்தானே! எனவே “திருஅண்ணாமலை ஒன்றே!” அதைப் பகுத்தறியும் பாங்கில்தான் அதனுடைய விசேஷமான கல்யாண குணங்கள் புரியவரும். தாவரங்கள்கூட திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருகின்றன. தாவரங்கள்தாம் ஒரே இடத்தில் நிலைத்து நிற்பவைதாமே. அவை எவ்வாறு திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்திடும்? அனைத்திற்கும் நல்வழிகாட்டும் அருணாச்சலப் பரம்பொருள் தாவரங்களுக்குரித்தான கருணைக் கடாட்சத்தை அளிப்பான் அல்லவா? சற்றே பகுத்தறிவுடன் தாவரங்கள் எவ்வாறு கிரிவலம் வருகின்றன என்பதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்! தம்புல் தெய்வீகக் குகை மகிமை அண்ணாமலை மகிமைக்கு இட்டுச் சென்றுவிடுகின்றது அல்லவா? அண்ணாமலையின்றி அணுவும் அசையாது என்பதைத்தானே இது குறிக்கின்றது?

இமய மலையில் அன்னபூர்ணா சிரகத்தில் உள்ள தம்புல் தெய்வீக குகையில் நித்ய வாசம் செய்கின்ற நவநாத சித்தர்களின் நேரடியான அருள் மழைப் பொழிவில் பிலாகாச யோகத்தில் திளைக்கின்ற சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரிடம் கலியுகத்தில், அதிலும் பசுமையான பள்ளிப்பருவத்தில் நேரடியான குருகுல வாசம் பெறுவதென்றால் என்னே பெரும் பாக்கியம் அது! இவ்வாறாக சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரிடம் அவர்தம் ஆத்மார்த்த சிஷ்ய பாதமாக ஜ்வலிக்கின்ற குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய குருகுல வாச அனுபூதிகளை உய்த்து, உத்தம நிலைகளை அடைவீர்களாக!
Read in Adimai Kanda Anandham books.. from Sri Agasthia Vijayam book stores.. agasthiar.org/store.htm
ஞான பஞ்சமி
ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர ஸ்வரூபத்தில் சிவ, பார்வதி அம்சங்களை ஒன்றாக பஹிர் (வெளி) முகமாய்க் காணலாம். ஆனால் சிவசக்தி அம்சங்களை அந்தர்முகமாய்க் காண்பதெப்படி? இதற்கு அருள்புரிவதே ஞானபஞ்சமி விசேஷ தின தாத்பர்யமாகும்.
தட்சன், சிவனை அழையாது நிகத்திய யாகத்தில் பங்குபெற சிவனின் ஆணையை மீறி தாட்சாயணியாய்ச் சென்ற உமையவள் தன் தந்தை தட்சனால் அவமதிக்கப்பட்டவுடன் தன்னுடைய தாட்சாயணிக்கோல ரூபத்தை அக்னிக்கு இரையாக்கி சக்திஸ்வரூப ஜோதியாய் உலவிடத் திருவுளங்கொண்டாள்! இதுவும் இறைவனின் திருவிளையாடல் தானே! ஹோமாக்னியில் வீழ்ந்த தாட்சாயணியின் சக்தியை அக்னி பகவானால் கூடத் தாங்க இயலவில்லை. அத்திருவுடலை சிவபெருமானே தாங்கி பிரபஞ்சத்தில் பவனிவர அத்தெய்வத் திருவவதார உடலம்சங்கள் பூலோகத்தின் பல இடங்களில் விழுந்து அவையே சக்தி பீடங்களாயின.
அந்த பீடங்களிலிருந்து “ஸ்ரீவித்யா ஜோதியாய்” வெளிவந்தாள் ஆதிபராசக்தி .“எம்மை ஏற்று அருள்புரிவீர்களாக, ஈஸ்வரப் பிரபோ!” “ஈஸ்வரி, நீ தாட்சாயணியாக வந்திருப்பின், சிவனாக யாம் அதையேற்றிருப்போம். நீயோ உன் தாட்சாயணி ரூபத்தை அக்னியில் களைந்து தற்போது “சாக்த ஜோதியாய்” பிரகாசிக்கின்றாய். இதனை யாம் அந்தர்முக ஜோதியாய்த்தான ஏற்க இயலும். அதற்காக ஒவ்வொரு பஞ்சமியன்றும் நோன்பிருந்து வருவாயாக! மயிலாடுதுறை, ஆலங்குடி, அகரம், கோவிந்தவாடி, சுருட்டப்பள்ளி ஆகிய ஐந்து இடங்களில் ஐந்துபஞ்சமியில் மௌனமிருந்து நோன்பை மேற்கொள்வாயாக! நோன்பின் முடிவில் யாம் மற்றோர் அவதாரங்கொண்டு அந்தர்முக ஜோதியாய் ஐந்துமுகத்துடன் உன்னை ஏற்போம்”
அவ்வாறு அம்பிகை மௌனம் பூண்ட ஐந்து பஞ்சமி நோன்பின் சக்தியால் அந்தர்முக ஞானம் பெற்றாள். இறைவனும் அந்தர்முகத்தில் சக்தி ரூபத்தை ஏற்றான். எவ்வாறு? அதுவே “தட்சிணாமூர்த்தி” அவதாரம். ஈஸ்வரியின் ஒவ்வொரு பஞ்சமி விரதத்திற்கும் ஒவ்வொரு சிரசாக ஐந்து முகத்துடன் ஸ்ரீதட்சிணாமூர்த்தி தோன்றி அம்பிகைக்குப் பூரணத்வம் தந்து தன்னுள் ஏற்றார். எனவே தட்சிணாமூர்த்தியான சிவஸ்வரூபத்தில் அந்தர்ஜோதியாய் அம்பிகை பிரவேசம் செய்த திருநாளே “ஞானபஞ்சமி” ! பெறற்கரிய திருநாள்!
ஞானபஞ்சமியன்று ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து குருகிரஹத்திற்குரிய மஞ்சள்நிற ஆடைகளையும் நிலக்கடலை கல்ந்த மஞ்சள் நிற (எலுமிச்சை போன்ற) உணவினையும் தானம் செய்வது சிறப்பானதாகும்.
- 1. இதுவரை தியானத்தையே கடைப்பிடிக்காதவர்கள் அல்லது அரைகுறையாக தியானம் செய்பவர்கள் இந்த ஞானபஞ்சமியன்று மஞ்சள் நிற ஆடைதரித்து அவரவர்க்கு வசதியான குறித்த நேரத்தில் தியானத்தை மேற்கொள்ள வேண்டும். தியான முடிவில் அந்த மஞ்சள் ஆடையை தானம் செய்துவிட வேண்டும். தினமும் அதே இடத்தில் அதே நேரத்தில் தியானத்தில் ஈடுபட வேண்டும். இதுவே தியான நிலையை மேம்படுத்தும்.
எளிமையான தியான பயிற்சிக்காக தன்னுடைய பெயரையோ அல்லது ஏதேனும் ஓர் இறை நாமத்தையோ அக்குறித்த நேரத்தில் மனதினுள் சொல்லிப் பழக வேண்டும். இவ்வாறாக தியானத்தைத் தொடங்குவதற்குச் சிறந்த நாள் ஞானபஞ்சமி!
- 2. தியானத்தை பலவருடங்களாக மேற்கொண்டு வருபவர்கள் தியானத்தில் பரிபூரணமடைய வேண்டுமாயின் ஞான பஞ்சமியன்று மேற்கூறிய ஐந்து தலங்களில் ஏதேனும் ஒன்றிலேனு ஸ்ரீதட்சிணாமூர்த்தியை அபிஷேக,ஆராதனைகள், தானதர்மங்களுடன் வழிபட வேண்டும்.
- 3. தன் மனைவி, பெற்றோர்கள், உறவினர்கள் தன்னுடைய ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதாக எண்ணுபவர்கள் ஞானபஞ்சமியன்று ஊத்துக்கோட்டை – திருப்பதி சாலையிலுள்ள “சுருட்டப்பள்ளி” கிராமத்தின் சிவாலயத்தில் “தம்பதி சமேதராக” அருள்பாலிக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியைச் சேவிக்க வேண்டும் .ஸ்ரீரங்கநாதர் போல் சிவபெருமான் சயனக் கோலம் பூண்டிருக்கும் அபூர்வமான சிவத்தலம். இங்கு சுதை ரூபத்தில் சிவபெருமான் பள்ளி கொண்டு தரிசனம் தருகின்றார்.
பீஷ்ம பஞ்சகம்
பீஷ்மாச்சாரியார் ஒரு தீர்கமான பிரம்மச்சாரி! நைஷ்டிக பிரம்மச்சர்யத்தில் உத்தம நிலைகளை அடைந்தவர். இத்தகைய தெய்வீக பிரம்மச்சாரிகளுக்கு விந்தானது தேஜோமயமாய்ப் பிரகாசித்து மூலாதாரம் வழியே மேற்சென்று சஹஸ்ராரத்தில் ஜோதிப் பிழம்பாய் உள்ஜோதியை, ஆத்ம ஜோதியாய்க் காட்டும்.
பீஷ்மர் தன்னுடைய பிரம்மாச்ர்ய விதி, நியதிகள் சற்றேனும் வழுவாதிருப்பதற்காக, பஞ்சகம் அனுஷ்டானங்கள், தர்ப்பணங்கள், பூஜைகள் போன்ற பல நியதிகளை மேற்கொண்டார். அவற்றில் ஒன்றே (பீஷ்ம) பஞ்சகமெனும் ஐந்து தின பூஜைகள், மிகவும் எளிமையான பூஜா நியதிகள்.
- 1. சிறுவர்கள், பிரம்மசாரிகள் இவற்றைக் கடைபிடித்தால் அலைபாயும் மனமடங்கி நல் ஒழுக்கம், சாந்தம், அபரிமித மனோசக்தி கிட்டும்.
- 2. திருமணமானவர்கள் இவற்றை நிறைவேற்றிட முறையற்ற காம எண்ணங்கள் மறைந்து முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கையைப் பெறலாம்.
- 3. ஆண்களின் விந்து முறையாக சோனிதமாம் (பத்னியின்) யோனியில் மட்டுமே செலுத்தப் பட வேண்டும். விந்தை வெளிச் சிந்துதல் பாபகரமானதாகும். கோடிக்கணக்கான ஜீவ அணுக்களை வீணாக்குகின்ற பாவம் சாதாரணமானதல்லவே! இத்தகைய விந்துக் குற்றங்களுக்கும், பிறன்மனைபுகும் பஞ்சமா பாதகத்திற்கும் ஓரளவு பிராயச்சித்தமாக எளிமையான பீஷ்ம பஞ்சக நியதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றையேனும் ஒழுங்காகக் கடைபிடித்தால் தான் முறையற்ற காம உணர்வுகள், செயல்களுக்குப் பரிஹாரம் காண முடியும். இல்லையேல் தெருநாய்களாகப் பிறந்து கண்ட இடங்களில் காமம் கூடும் பரிதாபப் பிறவி நிலைகளே கிட்டும்.
ஐந்து நாள் எளிய பூஜை
பீஷ்ம பஞ்சகம் ஐந்து நாட்களுக்குரிய எளிய பூஜையாகும்..
- 1. அனைவரும் குறிப்பாக வைணவர்கள், தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
- 2. 70 வயதிற்கு மேற்பட்டிறந்த உற்றம், சுற்றம், அயலார் அனைவருக்கும் கண்டிப்பாக தர்ப்பணமும் அல்லது “காருண்யமுறைத்” தர்ப்பணம் செய்தல் வேண்டும்..
- 3. முதல் நாள் கழுத்தளவு/முழங்காலளவு நீரில் அமர்ந்து குறைந்தது இரண்டுமணி நேரமேனும் “துவாதச நாமாவளியை” ஜபிக்க வேண்டும். வீட்டிலிருப்பின் ஒரு செம்பு ஜலத்தில் தர்ப்பையை வைத்து அதைத் தாங்கியவாறே ஜபிக்க வேண்டும். பின் அந்த தர்ப்பையைக் கிணற்றில்/ஆற்றில்/சமுத்திரத்தில்/அரசு, ஆல், வேம்பு, புரசு போன்ற சமித்து மரங்களின் கீழ் சேர்த்து விட வேண்டும்.
- 4. இரண்டாம் நாள் ஆற்றங்கரையில் /சமுத்திரக்கரையில் /கோயிலில்/ வீட்டில் அக்னி மூலையில் (தென் கிழக்கில் ) தர்ப்பைப் பாயில் அமர்ந்து “துவாதச நாமாவளியை” குறைந்தது இரண்டு மணி நேரம் ஜபிக்க வேண்டும்,
- 5. மூன்றாம் நாள் பெற்றோர்களை/தாய்/தந்தை/பெரியோர்களை வலம் வந்து துவாதச நாமாவளியை எட்டுமுறை ஜபித்து அவற்றின் பயன்களை அவர்களுக்கு அர்ப்பணம் செய்து எட்டு முறை நமஸ்கரிக்க வேண்டும்.
- 6. நான்காம் நாள், மூத்த சகோதரிகளை வலம் வந்து எட்டுமுறை துவாதச நாமாவளி ஜபித்து எண்முறை நமஸ்கரிக்க வேண்டும்.
- 7. ஐந்தாம் நாள் மூத்த சகோதரர்களை வலம் வந்து எட்டுமுறை துவாதச நாமாவளி ஓதி எண் முறை நமஸ்கரிக்க வேண்டும்.
- 8. நைவேத்யமும் தானமும் :
- முதல் நாள் : வெண்பொங்கல்
- 2ஆம் நாள் : தோசை
- 3ஆம் நாள் : மிளகு வடை
- 4ஆம் நாள் : சர்க்கரைப் பொங்கல்
- 5ஆம் நாள் : பால் பேணி
- 9. ஐந்தாம் நாள் பீஷ்மருக்கு அர்க்யம் அளிப்பதுடன் பீஷ்ம பஞ்சக பூஜை நிறைவு பெறுகிறது.
தம்புல் குகையில், மஹாஅவாது பாபாவின் தரிசனம் இன்றும் கிட்டுவதாம். ஒரு மலைச் சிகரத்தில் இருந்து மற்றொரு மலைச் சிகரத்துக்கு அடியெடுத்து வைத்து விண்ணார நடக்கும் மஹாஅவதூது பாபாவின் பாத தரிசனமே பெறுதற்கு அரியது என்றும் வாத்தியார் பரவசத்துடன் எடுத்துரைத்துள்ளார். மஹா அவதூது பாபா விஜயம் செய்யும் பூலோக ஆலயங்களில் தஞ்சாவூர் - பாபநாசம் அருகே உள்ள கோயில் தேவராயன் பேட்டையின் (திருச்சேலூர்) மிகவும் பழமையான ஸ்ரீமச்சபுரீஸ்வரர், ஸ்ரீசுகந்த குந்தளாம்பிகை அருளும் சிவாலயமும் ஒன்றாம். பலரும் அறியாத தொன்மைக் கோயில். விஷ்ணு அவதாரங்களில் மிகவும் மூத்ததான மச்சாவதாரத்தின் போது தோன்றிய தலங்களில் - கோயில் தேவராயன் பேட்டையும் ஒன்று..!
தீபாவளி நாளில் கேதார்நாத், பத்ரீநாத்தில் கடைபூஜை நிகழும் போது இவ்வாலயங்களின் கருவறையில் பசுநெய் தீபத்தை ஏற்றி நடைசார்த்துவர். பனிக்காலம் முடிந்த பிறகு பெரிய பெரிய பனிப்பாறைகளை வெட்டி எடுத்தபடியாய்... மே மாதத்தில் அட்சய திருதியை நாளில் இரு தலங்களிலும் கோயில்களின் நடை சிறிது சிறிதாய்த் திறக்கப் பெறும். அப்போதும் கருவறையில் இந்த தீபம் பிரகாசித்துக் கொண்டிருக்கும் அற்புதத்தைப் பலரும் தரிசித்து உள்ளார்கள்.
தீபாவளி தினத்தில் கருவறையில் ஏற்றப்படும் தீபமானது, நிதகாதி வேதஜோதி தீபமாய் ஆறு மாதகாலமும் சூக்குமமாய் ஒளிர்வதாம். இச்சூக்கும நிதகாதி வேதஜோதி தீபத்தைப் பூஜித்து, போஷித்து, ரட்சித்துக் காக்கின்ற விசேஷமான தெய்வப் பணியை ஏற்று ஆற்றும் சித்தர்கள், மஹரிஷிகள் தம்புலாதீப பூஜ்யர்கள் ஆவர்.
கேதார கௌரீ விரதம்
அம்பிகை மானுடப் பெண் வடிவில் பூண்ட பலவகை விரதங்களில் கேதார கௌரீ விரதமும் ஒன்றாகும். கடைபிடிப்பதற்கு மிகவும் எளிமையானதும், மிகவும் சக்தி வாய்ந்ததும் ஆகும்.
இயன்றவரை கடைபிடித்தால்தான் உங்கள் குடும்பத்திற்கும், வருங்கால சந்ததிகளுக்கும் நல்ல புண்ணிய சக்திகளைத் திரட்டிப் பெற்றுக் கொள்ள முடியும்.
இதுவரை, உங்களுடைய மூதாதையர்களின் நற்காரியங்கள், தான, தர்ம சக்திகளினால்தான் உணவு, உடை, இடம், சந்ததி, நல்ல வேலை போன்றவற்றுடன் வாழ்கின்றீர்கள் என்பது நினைவிருக்கட்டும்.
வங்கி டெபாசிட்டுக்கள் போல மூதாதையர்கள் சேர்த்துத் தந்துள்ள பூர்வ ஜன்மப் புண்ணியம் கரைந்து கொண்டே வந்தால் என் செய்வது? தினமும் ஏதாவது புண்ணிய காரியம் செய்து கொண்டே இருந்தால் தானே புண்ணிய டெபாஸிட் விருத்தியாகி, உங்களுக்கும், பிள்ளைகள், பெண்கள், பேரன்கள் போன்று சந்ததிகளுக்கும் வந்து சேர மிகவும் உதவும்.
21 என்ற எண்ணானது 2+1=3 என்ற வகையில் மூன்று ஆகிய குரு எண்ணுடன் பித்ரு, குரு சக்திகளை இணைத்துத் தருவதாகும். பொதுவாக சத்குருமார்கள் ஆசி தருவது பித்ருக்கள் மூலமாகத்தான்!
இதனால்தான் கேதார கௌரீ விரதம் அளிக்கும் பலா பலன்கள் 21 தலைமுறைகளுக்கு முன்னும் பின்னுமாகச் சென்று அருள வல்ல பூஜைகளைச் சித்தர்களும், மகரிஷிகளும் அளித்துள்ளனர்.
அந்தந்த பூஜையை அதனதற்குரிய நாளில் ஆற்றுவதால், திருஅண்ணாமலை, காஞ்சீபுரம் போன்ற சிறப்பான தலங்களில் ஆற்றும் பூஜைகளில், தான, தர்மங்களில் கிட்டும் பன்மடங்குப் பலாபலன்கள் போல, இதிலும் அளப்பரிய புண்ணிய சக்திகள் பெருகி வந்து காக்கும். இது கலியுகத்தில் நாமடையும் பெரும் பேறு அன்றோ!
மானிடப் பிறவியில்தான் இவற்றைச் சாதிக்க இயலும் என்பது நினைவிருக்கட்டும். அடுத்த பிறவி எது எப்படி அமையும் என்று தெரியாத நிலையில் இருக்கின்ற நாம் கிடைத்த இந்த அரிய மானிடப் பிறவியை பிறருக்கு உதவும் சேவை மனப்பான்மையுடன்தான் வாழ வேண்டும்.
பூவுலக ஜீவன்கள் அனைவருமே ஒரு மகரிஷியின் கீழ் வந்தவர்களே! ஜாதி, மத, இன, குல பேதங்களைக் கடந்த நிலையே சத்குரு நிலையாகும்.
எனவே, சத்குரு இல்லாதவரே பூமியில் எவருமே கிடையாது. ஆனால் தனக்கு சத்குரு உண்டு என்ற நினைப்பு வர வேண்டுமே! ஆனால் கலியிலோ சத்குருவின் மஹிமைகளை உணரும் வகையில் கலியுக மனிதன் தன் வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொள்வதில்லை.
பல முறையற்ற பழக்க, வழக்கங்களுக்கும் ஆளாகி, உழைப்பின்றிச் சம்பாதிப்பதற்கும், எப்போதும் சுக போகங்களை நாடியே வாழ்க்கையை நடத்திக் கொள்ளவும் விரும்புவதால் சத்குருவை அடைய வேண்டும் என்ற எண்ணமே பலருக்கும் வருவதில்லை.
இந்த பூமியில் அனைத்து நாடுகளில் வசிக்கும் மனிதர்களின் இறை லட்சியமே சத்குருவைத் தேடியே, நாடியே இருப்பதுதான் என நன்கு உணர்தல் வேண்டும். இதற்காக ஆக்கப்படுத்தப் பட வேண்டியது கபாலத்தில் உள்ள தாராசல நல்வள நாடியாகும்.
கேதாரம் என்பது மனிதனுடைய கபாலத்தில் இருக்கின்ற (மந்திர) தாராசல சக்திகளாகும். இதில் 21 வகைக் கபால நாளங்கள் இருக்கும். ஒவ்வொரு மனித உடலிலும் உள்ள 72000 நாளங்களில், 21000 நாளங்கள் தலைப் பகுதியில் உள்ளவை.
இதனால்தான் புனித பாரதத்தின் தலைப் பகுதியே கேதார்நாத் ஆகி, இங்கு அம்பிகைக்கு சிவசக்தி தரிசனம் கேதாரீஸ்வரத் தரிசனமாகவும் கிட்டியது.
கேதார்நாத்தில் முறையாக சிவதரிசனம் பெறுவோர்க்கு, (மந்திர) தாராசல சக்திகள் நன்கு வியாபிக்கும். மந்தாக்னிச் சாப்டம் எனும் ஒரு வகை அக்னிச் சாவி மூலம்தான் சிரசில் உள்ள கபாலத்தில் கேதாராசலக் கபாலவளி திறக்கலாகும். இதிலிருந்து வருவதே ஒவ்வொருவருடைய தலைக்கு மேல் அமையும் aura எனும் ஒளி வட்டமாகும்.
அவரவருடைய நற்பண்புகளை, கர்ம வினை, பூர்வ ஜன்ம அம்சங்களைக் கொண்டு அவரவருடைய aura வின் வண்ணம் மாறும். ஒருவருடைய aura வின் நிறத்தை வைத்து அவருடைய வாழ்க்கை சம்பவங்களை சற்குருமார்கள் எளிதில் அறிந்திடுவர்.
கேதார்நாத்தில் சிவாலயம் எதிரே மந்தாகினி ஆறு உள்ளது. இதன் பூமியடி நீரோட்டம் வியாபிக்கும் தலத்தில் ஒன்றே மதுரை அருகே உள்ள சதுரகிரித் தலமான சாப்டூர் ஆகும். கபால நாள சக்திகள் பூரிக்கும் மஹாலிங்கத் தலம் இது.
இங்கு முறையாக கேதாரீஸ்வர விரதம் பூணுதலானது ஸ்ரீஅகஸ்திய மாமுனியின் தரிசனத்திற்கு வழி வகுக்கும். இந்நாளில் ஸ்ரீலோபாமாதா சமேதராய் ஸ்ரீஅகஸ்தியர் மானுட வடிவில் இங்கு சதுரகிரியில் (சாப்டூர் பகுதி) பூஜிக்கின்றார்.
கபாலவடி சக்திகள் நிறைந்த கேதார்நாத்தில் பாயும் மந்தாகினித் தீர்த்தத்தை (தக்க காணிக்கை செலுத்தி) எடுத்து வந்து ஒரு மண்டலத்திற்குத் தினமும் கபாலீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து கோமுகத் தீர்த்தப் பிரசாதம் பெற்று கோமா நோய் மற்றும் கபாலக் கோளாறு உள்ளவர்களின் தலையில் தெளித்து, சிறிது பிரசாதமாக உண்டு வந்தால், வாழ்வில் நல்ல மாற்றங்களைக் காணலாம்.
இவை யாவும் வாலை மனோன்மணி யோக வகை ரகசியங்களாகும். இதனால்தான் கேதார்நாத் செல்லும் முன் வரும் கௌரீ குண்டம் எனும் அடித் தலத்தில், மனோன்மணியாக அம்பிகை அருள்கின்றாள்.
அம்பிகை அமர்ந்து கேதாரீஸ்வரரின் ஆதி மூல தரிசனத்தை இங்கு பெற்றதால் கௌரீ குண்டம் என இத்தலம் பெயர் பெற்றது.
தாராசல நாள நாடியானது ஒரு புறம் உஷ்ணமாகவும், மறுபுறம் சீதளமாகவும் (குளுமையாகவும்) இருக்கும். இதனால்தான் கேதார்நாத் செல்வதற்கு முன் பக்தர்கள் தங்கும் கௌரீ குண்டம் இடத்தில் வெந்நீர்ச் சுனை இருக்க, அருகில் உடலை உறைய வைக்கும் குளிரில் மந்தாகினி ஆறு ஓடுகின்றது. என்னே இறை லீலை!
பூஜை முடியும் வரை ஒரு சிறிதும் நீர் கூட அருந்தாது உண்ணா நோன்பு பூண்டு, கேதார கௌரீ விரதத்தில் அம்பிகையை கேதார கௌரீயாக வந்த மானுடப் பெண்ணாக பாவித்து, கலசம் வைத்துப் பூஜிக்க வேண்டும்.
கலசத்தின் முன் ஒரு தாம்பாளத்தில் குறைந்தது மூன்று பெரிய படி நெல் பரப்பி, மூன்று வயதுக்கு உட்பட்ட சிறுமியின் கரங்களால்,
ஸ்ரீகேதாரப்பன் துணை
ஸ்ரீகேதாரீஸ்வர்யை நம:
ஸ்ரீகேதாரீஸ்வர கேதாரேஸ்வர கேதார குஹா போற்றி.
என வலது மோதிர விரலால் எழுத வைத்து, கலசத்தை இதன் மேல் வைத்துப் பூஜிக்க வேண்டும்.
வளையல்கள், புடவைகள், ரவிக்கைகள், அதிரசம், மாங்கல்யச் சரடுகள், மலை வாழைப் பழம், மஞ்சள், முழு முந்திரி, திராட்சை, 21 முழப் புஷ்பம், வெற்றிலை, பாக்கு போன்று ஒவ்வொன்றிலும் 21 என்ற எண்ணிக்கையில் வைத்து, கலச பூஜை செய்ய வேண்டும்.
கௌரீ மஹா மாயீ நமோஸ்துதே! கௌரீ மஹா மாதா நமோஸ்துதே! கௌரீ மஹா தேவீ நமோஸ்துதே!
கௌரீ மாதா! உலகன்னையே! உய்யவந்த நாயகியே! காத்தருள்வாய்! காத்தருள்வாய்! காத்தருள்வாய் அம்மா!
- என நாள் முழுவதும் கௌரீ மஹாமாயிச் சிந்தனையில் தோய்ந்து இந்த துதியைச் சொல்ல வேண்டும். கலச பூஜைக்குப் பின் வீட்டில், குடும்பத்தில் இருப்பவர்கள் இப்பிரசாதத்தை உண்ண வேண்டும். பூஜைக்குப் பின் நெல்லில் வெல்லம் சேர்த்துப் பிசைந்து பசுவிற்கு அளிக்கவும். மிகவும் சக்தி வாய்ந்த விரதம்.
பலன்கள் :
- 1. குடும்பத்தில் ஒற்றுமை, மன அமைதி, சாந்தத்தைக் கொழிக்க வைக்கும் பூஜை!
- 2. தன் கணவனுடைய பழைய செய்கைகளை நினைத்து வருந்தும் இல்லறப் பெண்களுக்குத் தக்க பரிகாரம் தர வல்லது. தன் கணவனுடைய மனதில் புதைந்து கிடக்கும் பழைய வேதனைகளைக் களைய வல்லது.
சர்வ அமாவாசை :
கேதார கௌரீ விரதத்துடன் சர்வ அமாவாசையும் சேர்வது விசேஷமானதாகும். இதனால் நாகவ கரண பாவன கால அமைப்புகளும் சேர்கின்றன.
இறைவனின் திருக்கண்களைப் பொத்தி வைத்ததால், பிரபஞ்சம் ஒரு சில நொடிகள் இருளில் மூழ்கியது அல்லவா. தான் என்ன காரியம் செய்து விட்டோம் என்று வருந்திய அம்பிகை, இதற்காகப் பிராயசித்தம் தேட, இரவு நேர பூஜைகளை மேற் கொண்டாள்.
இவ்வாறு அம்பிகையின் அருள், இரவிலும் ஜீவன்களுக்குக் கிட்ட வேண்டும் என்பது இறை லீலை அல்லவா! இதற்காகவே, ஈஸ்வரனின் கண்களை, அம்பிகை பொத்திய தெய்வ நிகழ்ச்சியை, ஈஸ்வரனே ஏற்படுத்தித் தந்திட்டார்.
இறைவி மூலம் மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி போன்ற இரவுக் கால பூஜைகளை மாந்தர்கள் பெற்று உய்யவும், இந்த லீலை சிவபெருமானால் எடுத்தளிக்கப் பட்டது.
இதற்காக அருணாசல மாத சிவராத்திரி கிரிவலம், திருவானைக்கோயில், காஞ்சீபுரம் போன்ற தலங்களில் சிவராத்திரி இரவுப் பூஜைகள், கேதார்நாத்தில் தேவர்கள் பூஜிக்கும் ஆறு மாத காலத்தில் 60 நாழிகை பூஜை போன்றவற்றை அம்பிகை கடைபிடித்திட்டாள்.
கேதார்நாத், பத்ரிநாத்தில் தீபாவளி அன்று நடை சார்த்தப் பெற்று, அட்சயத் திரிதியை நாளில் மீண்டும் ஆலய நடை திறக்கப் பெறும். இந்த ஆறு மாதங்களிலும் கடுங்குளிர், உறைபனி காரணமாக ஆலய நடை சார்த்தப் பெறுவதாக வெளிக் காரணங்கள் இருப்பினும், தேவர்கள் பூஜிக்கும் காலம் இது என்பதே உண்மை! நம்முடைய ஆறு மாத காலம் தேவர்களுக்கு ஒரு பகல் நேரமாகும்.
தீபாவளி என்பதும் ஒரு மாத சிவராத்திரியே என்பதைப் பலரும் மறந்து விடுகின்றனர். அதாவது கேதார கௌரீ விரத நாளுக்கு முதல் நாளாக இந்த கேதார (மஹா) சிவராத்திரி எனப்படும் மகத்தான சிவராத்திரி நாள் அமைகின்றது.
இதுவே சித்தர்கள், மஹரிஷிகள், தேவர்களுடன் அம்பிகை கேதார்நாத்தில் விசேஷமான சிவபூஜைகளைத் தொடங்கும் திருநாள்!
கேதார கௌரீ விரத நாளில் அம்பிகையின் பராசக்தி ரூபம், ஆலயத்தில் ஸ்ரீகற்பகாம்பிகை போன்று சிவாலய மூல அம்பிகை, ஸ்ரீகாமாட்சீ போன்று அமர்ந்த கோல தனித்தச் சிறப்புக் கருவறைக் கோலம், கௌரீ, சம்பத் கௌரீ, மஹா சம்பத் கௌரீ, காளீ, துர்க்கை, சாமுண்டீஸ்வரீ, சப்தமாதர்கள் போன்று அம்பிகையின் எத்தனை வடிவுகளைத் தரிசிக்க முடியுமோ (குறைந்தது 21 வடிவுகள்) அவ்வளவு வடிவுகளைத் தரிசிப்பது சிறப்புடையது.
பெற்றோர்கள் பிள்ளைகள், பெண்கள் இடையே சுமூகமான உறவைப் பெற இது உதவும். சிறு கிராமம், சிறு நகரங்களில் உள்ளோர் அரசு, ஆல், வேம்பு, வன்னி, வில்வம், துளசி, புரசு போன்று 21 புனிதமான விருட்சங்களைத் தரிசிக்க வேண்டும்.
அருள்மிகு சர்வ சம்பத் கௌரி சமேத நந்தீஸ்வரர், தேனூர்.
(திருச்சி- மணச்சநல்லூர் -எதுமலை வழியாக துறையூர் செல்லும் பஸ் மார்க்கத்தில் அமைந்துள்ளதே இத்திருக்கோயில்.)
மானுடப் பெண் வடிவெடுத்து பூமிக்கு வந்து கேதார கௌரி விரதத்தைக் கடைபிடித்தபோது, அம்பிகை தங்கி தவமியற்றிய திருத்தலங்களில்தான் கௌரி என்ற திருநாமம் தாங்கி எழுந்தருளி இன்றைக்கும் அருள்பாலிக்கின்றாள். அந்தத் திருத்தலங்களில் ஒன்றே தேனூர்.
கேதார கௌரி விரதத் திருநாளன்று இத்திருத்தலத்தில் அம்பிகைக்கு அபிஷேக, ஆராதனைகளை நிகழ்த்துவது சிறப்பானது. குறிப்பாக, கேதார கௌரி விரதத்தைக் கடைபிடிப்போர் இங்கு வந்து அம்பிகையை முறையாக தரிசித்து, வழிபட்டுப் பின்னர் விரதத்தைப் பூர்த்தி செய்தல் சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும்.
வசந்த நவராத்திரி, சாரதா நவராத்திரி, பஞ்சமித் திதி போன்று அம்பிகைக்கு சிறப்பான நாட்களில் இத்திருத்தலத்தில், ஸ்ரீசர்வ சம்பத் கௌரி சன்னதியில் ஏழைச் சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள் மற்றும் மாங்கல்ய தானம் செய்தால் தீர்க சுமங்கலித்துவம் பெருகும்.
வேறெந்தக் கோயிலிலும் இல்லாதவாறு மிக அபூர்வமாக, ஆலய மேல் விதானத்தில் அமைந்துள்ள சரபேஸ்வரரை ஞாயிற்றுக் கிழமை இராகு கால நேரத்தில் சரபேஸ்வர தூபம் ஏற்றி வழிபட்டு வருவோர் எதிரிகளின் தொல்லைகள், வியாபாரப் போட்டி, பொறாமைகள், அக்கம்பக்கத்தாரின் தீய எண்ணங்களில் இருந்து காப்பாற்றப்படுவர்.
ஓஃம் சத்குரு ஸ்ரீவெங்கடராம ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீஆதிபராசக்தி தேவி சப்த மாதர்களுடனும், மகுடேஸ்வரி, வஜ்ரேஸ்வரி ஆகிய இரண்டு துவார பாலகியருடன் கேதார கௌரீ விரதத்தையும், லக்ஷ்மீ பூஜையையும் நிகழ்த்திய தலம் சிறுகளத்தூர் ஆலய பூமி. தீபாவளிக்கு மறுநாள் வந்தமையும் கேதார கௌரீ விரதத்தை இத்தலத்திலே கடைபிடிப்பதும், நிறைவு செய்வதும், லக்ஷ்மீ தேவிக்கான பூஜைகளை ஆற்றுவதும் விசேஷமான செல்வ கடாட்சப் பலா பலன்களைத் தருவதாகும். அனைத்து லக்குமி அவதாரிகைகளையும் இத்தலப் பூஜா சாதனங்கள் சென்றடையும் என்பது இத்தலத்தின் தாத்பர்யம்.
விரதங்களின் மகிமை:-
★ திருச்செங்கோடு, திருவாடானை அருகே திருவொற்றியூர் போன்ற தலங்களில் பாகம்பிரியாளாய் அம்பிகை அருள்கின்றனள். திருமகள், கலைமகள், நிலமகள் (சாவித்ரீ) உட்பட ஏழு தேவிமாதாக்கள், ஏழு மஹரிஷி பத்நீயர்கள், ஏழு சப்தமாதர்கள் – ஆகிய இருபத்தொருவருடன் இணைந்து அம்பிகையே கடைபிடித்தது கேதார கௌரீ விரதம். 21 விதமான பூஜைப் பண்டங்கள் ஒவ்வொன்றிலும் 21 எண்ணிக்கையில் வைத்து, அம்பிகை கேதார கௌரீ விரதந்தனை 83 சதுர் யுகங்கள் பூண்டு, ஜோதி வடிவமாய் இருந்த கேதாரேஸ்வரரின் தரிசனத்தைப் பெற்றனள். பாகம்பிரியாள் தேவியாய் கேதார கௌரீ தோன்றுகையில், ஆதியுகத்தின் இருபத்தோராவது சதுர்யுகம் தொடங்கிற்று என்பதால், எண் 21 இங்கு சிறப்புடையதாகிறது. மாதர் குலத்தை எங்கும் காக்க வல்ல – ஸ்ரீபாகம்பிரியாளுக்கான புவன பவன ரட்சைத் துதியிது:
“மூவேழு அகிலாதி முழு முதலாய்ப் பரகாச
பாவேழு பரிச்சயமாய்ப் பந்தணையாள் பூம்பாத
கோவேழு குணத்தாராய்க் கொண்ட திருக்கேதார
மாவேழு மான் மழுவே துணை!”
– என்று ஓதி அரிசி, கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு போன்று ஏழு வகைத் தானிய மாவால் பிடித்த ஏழு மாவு லிங்கங்களைப் பூசிப்பது விசேஷமானதாம். கேதாரத்துறையில் வழிபாடு மீண்டும் புனரமைப்பை துரிதமாய் அடைவதற்கு, பாகம்பிரியாள் (கௌரீ அம்பிகை) எனும் பெயரில் உமையவள் அருளும் தலங்களில், ஏழு நெய்த் திரிகளால் மாவிளக்கு ஏற்றி வழிபடுதலும் உத்தமமானது.